தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

என்.எல்.சி பங்குகளை விற்கும் முடிவை கைவிடுக! - ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்

9 hours before
என்.எல்.சி பங்குகளை விற்கும் முடிவை கைவிடுக! - ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்

லாபகரமாக, திறமையாக இயங்கும் என்.எல்.சி பங்கு விற்பனை ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது; எனவே இந்த முடிவை கைவிட வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஒன்றிய நிலக்கரி அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதம் பின்வருமாறு:

"மிகச் சிறந்த நிறுவனங்களில் ஒன்றும், மிகுந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான என்.எல்.சி. இந்தியா லிமிடெட் (NLCIL) நிறுவனத்தில் ஒன்றிய அரசு தனது 3% பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பது ஆழ்ந்த கவலை அளிப்பதாகும். கடந்த 26 ஆண்டுகளில் அடுத்த அடுத்த பங்கு விற்பனைகள் மூலம் அரசின் மூலதனப் பங்கு 72.2% ஆக குறைக்கப்பட்டது. தற்போதைய 3% பங்கு விற்பனை அரசுடமையை மேலும் பலவீனப்படுத்தும்.

பொதுத்துறை நிறுவனங்கள் திறனின்மை மற்றும் இலாபமின்மை காரணமாக அரசுக் கருவூலத்திற்கு சுமையாக உள்ளன எனப் பல பத்தாண்டுகளாக, தனியார்மய ஆதரவாளர்கள் வாதாடி வந்துள்ளனர். அரசின் பங்கு விலக்கம் (Disinvestment) மற்றும் தனியார்மயத்தை நியாயப்படுத்துவதற்காக மீண்டும் மீண்டும் இந்த வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இன்றோ முற்றிலும் நேர்மாறான அணுகுமுறை கையாளப்படுகிறது. திறமையாக நிர்வகிக்கப்படும், இலாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், வருவாயை ஈட்டித் தரும் வலிமையான நிறுவனங்களாக இருப்பதாலேயே பங்கு விலக்கலுக்கு இலக்காக்கப்படுகின்றன. இது தேச செல்வத்தை படிப்படியாக பெருநிறுவனங்களின் நலன்களுக்காக தாம்பாளத்தில் வைத்து கைமாற்றம் செய்யும் ஒரு பறிமுதல் நடவடிக்கையே அன்றி வேறொன்றுமில்லை.

அரசின் கொள்கையில் நிலவும் ஒரு தீவிரமான முரண்பாட்டை இது வெளிப்படுத்துகிறது. தேசியச் சொத்துகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, நாட்டின் நீண்டகால பொருளாதார மற்றும் கேந்திர நலன்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வரும் நிறுவனங்களின் அரசுடமையை படிப்படியாக நீர்க்கச் செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.

என்.எல்.சி இந்தியா என்பது வெறும் லாபம் ஈட்டும் நிறுவனம் மட்டுமல்ல. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு, நிலக்கரி உற்பத்தி, மின் உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றும் ஒரு இன்றியமையாத தேசியச் சொத்தாகும். நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும், எரிசக்தி தற்சார்புக்கும் அதன் பங்களிப்பு அளப்பரியது.

2025–26 நிதியாண்டில் என்.எல்.சி. இந்தியா வெளிப்படுத்தி உள்ள சிறப்பான செயல்பாடு இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. தனது வரலாற்றிலேயே அதிகபட்சமாக ரூ.3,769 கோடி ஆண்டு லாபத்தை இந்த நிறுவனம் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ரூ.2,714 கோடி லாபத்தை விட 38.91% அதிகமாகும்.

இவ்வாறு சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிறுவனத்தின் பங்குகளை நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டும் நோக்கில் விற்பனை செய்வது குறுகிய கால நிதி வருவாயை அரசுக்கு தரக்கூடும். ஆனால், பல பத்தாண்டுகளாக நாட்டிற்கு மதிப்பை உருவாக்கி தந்து கொண்டிருக்கும் ஒரு கேந்திர தேசியச் சொத்தின் மீதான அரசின் உரிமையை அது பலவீனப்படுத்தும்.

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான வழி, லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் உரிமையை படிப்படியாகக் குறைப்பதில் இல்லை. மாறாக, செல்வந்தர்களுக்கு கூடுதல் வரி விதிப்பதன் மூலம் அரசின் வருவாயைப் பெருக்க வேண்டும். அதற்காக சூப்பர் ரிச் வரி, கார்ப்பரேட் வரி உயர்வு, வாரிசுரிமை வரி உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், என்.எல்.சி. தமிழ்நாட்டின் பெருமையாக மட்டுமல்லாமல், மாநிலத்தின் முற்போக்கான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியோடும் பிரிக்க முடியாத வகையில் இணைந்துள்ளது. அரசின் பங்குகளை படிப்படியாகக் குறைக்கும் இந்த நடவடிக்கை, இறுதியில் தனியார்மயத்தையே நோக்கமாகக் கொண்டது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இத்தகைய நடவடிக்கை நாட்டின் பொருளாதார இறையாண்மையை மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) ஆகியோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிச் செயல்முறைகளையும் பாதிக்கும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.