விசாரணைக் கைதி மரணம்: சிறைச்சாலைகள் கொலைக்களங்களாக மாறக்கூடாது! - சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்
15 Jul 2026, 4:34 pm

கன்னியாகுமரியில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த சபரிவர்மன் உயிரிழந்த சம்பவத்திற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி தென் தாமரைக்குளம் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 35 வயது சபரிவர்மன், நீதிமன்ற உத்தரவின்படி நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தபோது உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது.

உடலில் 19 இடங்களில் காயங்கள், கை முறிவு, கட்டிப்போட்டு தாக்கிய அடையாளங்கள் இருப்பது பிரேத பரிசோதனையில் வெளிவந்ததால், சிறை வார்டன் ஜெகன் உட்பட 3 காவலர்கள் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மனித உரிமைகளை மீறுகின்ற காவல்துறையின்/சிறைத்துறையின் செயல்பாடுகள் எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. கடுமையான கண்டனத்திற்குரியது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மற்றும் அஜித்குமார் மரணங்களுக்குப் பின்னரும் இதுபோன்ற காவல் மரணங்கள் தொடர்வது வேதனைக்குரியது.

காவல் நிலையங்கள் குற்றங்களைத் தடுப்பதற்கும் சிறைச்சாலைகள் தண்டனை பெற்றவர்களின் மனநிலையை சீர்படுத்துவதற்குமான இடங்களாக இருக்க வேண்டுமே தவிர கொலைக்களங்களாக மாறக்கூடாது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தையும், இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.