வந்தே மாதரம்' கட்டாயச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுக: சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம்!
12 Jul 2026, 4:43 pm

அரசு நிகழ்வுகளில் 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயமாக்கும் ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கை, இந்திய அரசியல் சாசனம் வழங்கும் மத சுதந்திரத்திற்கும் நாட்டின் பன்முகத்தன்மைக்கும் எதிரானது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இந்திய நாட்டைப் பத்துக் கரங்களைக் கொண்ட துர்கையாக, தாமரை மலரில் உறையும் லட்சுமியாக, அறிவைத் தரும் சரஸ்வதியாக உருவகித்து எழுதப்பட்ட 'வந்தே மாதரம்' பாடலை அனைத்து அரசு நிகழ்வுகளிலும் வரி நீங்காமல் அனைவரும் 3 நிமிடம் 10 வினாடிகள் பாட வேண்டும் என்று ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது இந்து ராஷ்டிர அரசியலின் அதிகாரப்பூர்வ முன்னெடுப்பு.

பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், திராவிடம், ஒடிசா, வங்காளம் ஆகிய தேசிய இனங்கள், விந்திய, இமய மலைகள், யமுனை, கங்கை நதிகளென இந்தியாவின் பன்முக அடையாளத்தைப் புகழுக்குரிய வாக்கியமாக்கிய தேசிய கீதம் இரண்டாவதாக்கப்பட்டுள்ளது.

மாநில வணக்கம், மொழி வணக்கப் பாடல்கள் மூன்றாவதாக உள்ளன.

ஒற்றை இந்து மத அடையாளமே முதன்மையானது, இந்தியாவின் பன்முக அடையாளமும், மொழி அடையாளங்களும் அதன் பின்பே. பிற மத அடையாளங்களுக்கு எந்த இடமும் இல்லை என அறுதியிட்டுச் சொல்கிறது இந்த அறிவிப்பு.

இந்திய அரசியல் சாசனம் சொல்லும் மத சுதந்திரத்துக்கும், தனிமனித உரிமைக்கும், இந்திய பன்முகப் பாரம்பரியத்துக்கும் எதிரான இந்தச் சுற்றறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.