‘தேர்வுகளைத் திருடும் பாஜக அரசு’: தர்மேந்திர பிரதான் பதவி விலகவும், என்.டி.ஏ அமைப்பைக் கலைக்கவும் மாணவர்கள் முழக்கம்!
12 Jun 2026, 8:47 pm

‘தேர்வுகளைத் திருடும் பாஜக அரசு’: தர்மேந்திர பிரதான் பதவி விலகவும், என்.டி.ஏ அமைப்பைக் கலைக்கவும் மாணவர்கள் முழக்கம்!

புதுதில்லி, ஜுன் 12 - “மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் பொதுத் தேர்வு அமைப்பையே முழுமையாகச் சீரழித்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 89 தேர்வுத்தாள் கசிவுகளும், 48 மறுதேர்வுகளும் நடத்தப்பட்டு, தேசிய தேர்வு முகமை (NTA) என்பது இன்று கோடிக்கணக்கான மாணவர்களின் வாழ்வைச் சிதைக்கும் ‘தேசிய சித்ரவதை முகமையாக’ (National Torturing Agency) மாறியுள்ளது” என்று இந்திய மாணவர் சங்கம் சாடியுள்ளது.

புதுதில்லியில் நடைபெற்ற மாணவர் சங்க மத்திய நிர்வாகக்குழுவின் செய்தியாளர் சந்திப்பில், அகில இந்திய தலைவர் ஆதர்ஷ் எம்.சாஜி, பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா, இணைச் செயலாளர் ஆயிஷி கோஷ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், என்.டி.ஏ அமைப்பைக் கலைக்கக் கோரியும் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டனர்.

நீட், நெட் தேர்வு ஊழல்களும் சிபிஎஸ்இ முறைகேடுகளும்

தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP) மூலம் கல்வித் துறையைப் பணக்காரர்களுக்கானதாக மட்டுமே மாற்ற ஒன்றிய அரசு துடிக்கிறது என்று இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டினர். நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ‘நீட்-யுஜி’ நுழைவுத்தேர்வு, வினாத்தாள் கசிந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டு 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய விசாரணையில், கடந்த 2025 ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாளும் இதே கும்பலால் தான் கசிந்தது என்பது அம்பலமாகியுள்ளது. யுஜிசி-நெட் மற்றும் கியூட் தேர்வுகளும் அடுத்தடுத்து குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவற்றுடன், இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் அனைத்தும் புதிய ‘ஆன்ஸ்கிரீன் மார்க்கிங்’ போர்ட்டல் மூலம் திருத்தப்பட்டன. பாதுகாப்பற்ற இந்த மென்பொருளில் மதிப்பெண்களை மிக எளிதாக மாற்றியமைக்க முடியும் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பள்ளி மாணவர்களின் மதிப்பெண்கள் இவ்வாறு சிதைக்கப்பட்ட போதிலும், கல்வி அமைச்சகம் இதனை மறுத்து வருவது ஒட்டுமொத்த தேர்வு முறையின் மீதான நம்பகத்தன்மையையும் அழித்துவிட்டது என்று மாணவர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசு அடக்குமுறைகளும் சமரசமற்ற போராட்டங்களும்

தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் குரல் எழுப்பும் மாணவர்களை ‘தேசவிரோதிகள்’ என முத்திரை குத்தி ஒன்றிய அரசு வன்முறையை ஏவி விடுகிறது. கடந்த மே 3-ஆம் தேதி நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட அன்றே, முதன்முதலாக மத்திய கல்வி அமைச்சகத்தை நோக்கி இந்திய மாணவர் சங்கம் அதிரடிப் பேரணியை நடத்தியது. அப்போது காவல்துறையின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி 59 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இதுவரை நாடு முழுவதும் 22 மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 753 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 16 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கேரளா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கூட, அரசு அடக்குமுறைகளை மீறி மாணவர் சங்கம் போராட்டங்களை முன்னெடுத்தது.

அடுத்தகட்ட போராட்டம்

Enough Is Enough’ கையெழுத்து இயக்கம்: தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி enoughisenough.sficec.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் 5 லட்சம் கையெழுத்துகளைத் திரட்டும் இயக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.

ஜூன் 19 - கல்வி அமைச்சக முற்றுகை: திரட்டப்பட்ட 5 லட்சம் மாணவர்களின் கையெழுத்துகளுடன் ஜூன் 19 அன்று தில்லியில் உள்ள மத்திய கல்வி அமைச்சகத்தை நோக்கி மாபெரும் முற்றுகைப் பேரணி நடைபெறும்.

பெரும் முற்றுகைப் பேரணி நடைபெறும். கல்வித் துறையை ஆர்எஸ்எஸ் - சங் பரிவாரின் நிகழ்ச்சி நிரலில் இருந்து காப்பாற்றவும், மாணவர்களுக்கு நீதி பெற்றுத் தரவும், அனைத்து மாணவர்-இளைஞர் அமைப்புகள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்து நாடு தழுவிய அளவில் ஒரு பரந்த கூட்டுப் போராட்ட மேடையை இந்திய மாணவர் சங்கம் கட்டியெழுப்பும் என்று மத்திய நிர்வாகக் குழு பிரகடனப்படுத்தியுள்ளது.

- தி லெப்ட் வியூஸ்