பழமையான பள்ளி இடிப்பு 16 மாதங்களாகியும் புதிய கட்டடம் இல்லாததால் மாணவர்கள் தவிப்பு
8 Jan 2026, 2:44 pm
<p><strong>பழமையான பள்ளி இடிப்பு 16 மாதங்களாகியும் புதிய கட்டடம் இல்லாததால் மாணவர்கள் தவிப்பு</strong></p>
<p>திருவள்ளூர், ஜன. 8- திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வந்த அரசு நடுநிலைப்பள்ளி இடிக்கப்பட்டு 16 மாதங்கள் கடந்தும், புதிய கட்டடம் கட்டப்படாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பட்டியல் சமூக மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக கடந்த 92 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வந்த இந்தப் பழமையான பள்ளியில், 2024-25 கல்வி ஆண்டு தொடக்கத்தில் 145 மாணவர்கள் பயின்று வந்தனர். இந்நிலையில், கட்டடம் பழுதடைந்திருப்ப தாகக் கூறி கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை முழுவதுமாக இடித்துத் தரைமட்டமாக்கி னர். அடுத்த ஆறு மாதங்களில் புதிய கட்டடம் கட்டித் தரப்படும் என அப்போது தலைமை ஆசிரியர் உறுதியளித்திருந்தார். ஆனால், பள்ளி இடிக்கப்பட்டு நீண்ட காலமாகியும் கட்டுமானப் பணிகள் தொடங்கப் படாததால், மாணவர்கள் அருகில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அங்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரு அறை யிலும், 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை மற்றொரு அறையிலும் என அனைத்து மாணவர்களையும் அடைத்து வைத்துப் பாடம் நடத்தும் அவலநிலை நீடிக்கிறது. இதனால் மாணவர்களுக்குக் கவனச்சிதறல் ஏற்படுவதாகவும், கணினி அறை, நூலகம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மாணவர்கள் பள்ளியின் வாசற்படிகளில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னேரி பகுதிக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர். காளமேகம் மற்றும் கிளைச் செயலாளர் எம். மதன்குமார் ஆகியோர் கூறுகையில், தற்காலிகமாகப் பள்ளி இயங்கும் மேல்நிலைப் பள்ளியில் உரிய கழிப்பறை வசதிகள் இல்லை என்றும், குறிப்பாக மாணவிகளுக்குத் தனி கழிப்பறை இல்லாததால் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளுக்கு மாற்றி வருவதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் கடந்த பிப்ரவரி மாதம் நேரில் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து 10 மாதங்கள் ஆகியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. முன்னாள் மாணவர் இரா.பா.அருள் மொழி செல்வன் அளித்த புகாருக்கு, ஆதிதிராவிட நல ஆணையர் தரப்பில் நபார்டு (RIDF XXXI) திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட முன்மொழியப் பட்டுள்ளதாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது மேம்போக்கான பதிலாகவே இருப்பதாகக் கல்வி ஆர்வலர் அ.ஏ. பாஸ்கரன் கவலை தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவனஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டும் அதிகாரிகள் மௌனம் காப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின்தங்கிய சமூக மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் புதிய பள்ளிக் கட்டடத்தை அமைக்க வேண்டும் எனப் பொன்னேரி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். = பெ.ரூபன்</p>
