தனக்கு மறுக்கப்பட்டதை தலைமுறைக்குத் தந்தவர் - ஜி.ராமகிருஷ்ணன்
10 Oct 2026, 10:07 pm

தனக்கு மறுக்கப்பட்டதை தலைமுறைக்குத் தந்தவர் - ஜி.ராமகிருஷ்ணன்

“மனிதருக்கு மிகவும் அருமையானது வாழ்க்கை. அது ஒருமுறைதான் அவருக்கு அளிக்கப்படுகிறது. என் வாழ்நாள் முழுவதும், என் திறமைகள் அனைத்தும் மனித சமுதாயத்தின் விடுதலை என்னும் உலகிலேயே மகோன்னதமான லட்சியத்துக்கே அர்ப்பணிக்கப்பட்டன என்று இறக்கும்போது நினைக்கும் வண்ணம் வாழ வேண்டும்.”

புரட்சிகர வாழ்வைப் பற்றி எழுத்தாளர் நிகோலாய் ஆஸ்ட்ரோவ்ஸ்கி தந்த கச்சிதமான வரையறை இது. அத்தகைய ஒரு வாழ்வுக்குச் சொந்தக்காரராக விளங்கியவர் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி. 1945 முதல் 1997 வரை, 52 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஊழியராக, மக்கள் தலைவராக அவர் ஆற்றிய தொண்டு, கீழத்தஞ்சையின் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் அழியாத இடம் பெற்றது.

அவரது வாழ்க்கை வரலாற்றை இந்தச் சிறப்பிதழின் பிற பக்கங்கள் விரிவாகச் சொல்கின்றன. நான் அவருடன் பழகிய நாட்களின் நினைவுகளையும், அவரது போராட்ட வாழ்விலிருந்து இன்றைய தலைமுறை கற்க வேண்டிய படிப்பினைகளையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

விடுதியில் நடந்த முதல் அறிமுகம்

சென்னையில், இன்றைய ராஜாஜி மண்டபத்தை ஒட்டியிருந்த பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியில்தான் தோழர் பி.எஸ்.டி.யை முதன்முதலில் சந்தித்தேன். ஒரு வகுப்புக்காக நான் அங்கு சென்றிருந்தபோது, தோழர் வி.பி.சிந்தன், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்: தோழர்கள் பி.எஸ்.தனுஷ்கோடி, கே.ஆர்.ஞானசம்பந்தம், கோ.பாரதி மோகன்.

“ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் பண்ணையடிமை முறைக்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு எதிராகவும் நடந்த போராட்டங்களில் முக்கியப் பங்காற்றியவர்கள் இவர்கள்” என்று தோழர் வி.பி.சி. அவர்களை அறிமுகப்படுத்தியது இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

முதல் தலைமுறைத் தலைவர்களோடு தோள் கொடுத்தவர்

தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் தலைமுறைத் தலைவர்களான பி.சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, கோ.வீரையன், கே.ஆர்.ஞானசம்பந்தம் போன்றோருடன் இணைந்து செயல்பட்டவர் தோழர் பி.எஸ்.டி.

அவர் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இருந்த காலத்தில், மாநிலக்குழுக் கூட்டங்களிலும், போராட்டங்களிலும், மாவட்ட நிகழ்ச்சிகளிலும் அவருடன் தங்கியிருந்து பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர்களில் நானும் ஒருவன். பேச்சில் எளிமை, செயலில் உறுதி, மக்கள் மீது அளவற்ற நம்பிக்கை: இவைதான் அவரிடம் நான் கண்ட அடையாளங்கள்.

தமிழகத்தின் ‘கிளாசிக்கல்’ போராட்டம்

பண்ணையடிமை முறை, நிலப்பிரபுத்துவச் சுரண்டல், அந்நிய ஆட்சி ஆகிய மூன்றுக்கும் எதிராகக் கீழத்தஞ்சை மக்கள் நடத்திய போராட்டங்களில், தோழர் பி.சீனிவாசராவோடு இணைந்து முக்கியப் பங்காற்றியவர் பி.எஸ்.டி. அந்தப் போராட்டங்களின் விளைவாகவே பண்ணையடிமை முறை முற்றாக ஒழிக்கப்பட்டது.

அந்தப் போராட்டத்தின் தனிச்சிறப்பு என்ன? பண்ணையடிமை முறைக்கு ஆளான தலித் விவசாயத் தொழிலாளர்களையும் குத்தகை விவசாயிகளையும் ஒன்றிணைத்து அது நடத்தப்பட்டது. அதனால்தான் அது வெற்றி பெற்றது.

நான் வழக்கமாகச் சொல்வதுண்டு: அது ஒரு ‘கிளாசிக்கல் கிளாஸ் ஸ்ட்ரக்கிங்’. தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தையும், பண்ணையடிமைத்தனம் மற்றும் நிலப்பிரபுத்துவச் சுரடண்டலும் எதிரான போராட்டத்தையும், நிலத்துக்கான போராட்டத்தையும் ஒன்றாக இணைத்து நடத்திய அத்தகைய இயக்கத்தைத் தமிழ்நாட்டில் வேறு எங்கும் நம்மால் நடத்த முடியவில்லை. சாதி ஒடுக்குமுறையையும் வர்க்கச் சுரண்டலையும் ஒரே களத்தில் எதிர்கொண்ட அந்த அனுபவம்தான் கீழத்தஞ்சையின் தனித்துவம்.

போராட்டக் களமும் பொறுப்பின் மேடையும்

தோழர் பி.எஸ்.டி. போராட்டக் களத்தில் மட்டும் நின்றவர் அல்ல. ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராகவும் பொறுப்பு வகித்து, அந்தப் பொறுப்புகளை மக்கள் நலனுக்கான கருவிகளாக மாற்றிக் காட்டியவர்.

நான் ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, அம்மாவட்டத்தின் உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் கூட்டத்துக்கு அவர் வந்திருந்தார். அங்கே அவர் சொன்னது இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது:

“ஆர்ப்பாட்டம், போராட்டம் மூலம் மக்கள் நலனைப் பாதுகாப்பது ஒருபுறம். அதைச் செய்துகொண்டே, ஒன்றியத் தலைவராக, ஊராட்சித் தலைவராக, நகர்மன்ற உறுப்பினராக, ஒன்றியக் கவுன்சிலராக உள்ளாட்சிப் பொறுப்புக்கு வந்தால், அந்தப் பொறுப்பைப் பயன்படுத்தி மக்களுக்காகப் பல காரியங்களைச் செய்ய முடியும்.”

இது வெறும் அறிவுரை அல்ல. தானே நடைமுறைப்படுத்திக் காட்டியதையே அவர் சொன்னார்.

மறுக்கப்பட்ட கல்வியை மக்களுக்குக் கொடுத்தவர்

பண்ணையடிமைக் குடும்பத்தில் பிறந்ததால் பி.எஸ்.டி.க்குக் கல்வி மறுக்கப்பட்டது. ஆனால் தனக்கு மறுக்கப்பட்டது அதோடு நின்றுவிடக் கூடாது; அந்தப் பகுதி மக்களுக்கு, குறிப்பாகத் தலித் குழந்தைகளுக்கும் மற்ற ஏழைக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் அவருக்கு அளவற்ற ஆர்வம் இருந்தது.

பாங்கல் ஊராட்சித் தலைவராக இருந்தபோது, ஊரின் புறம்போக்கு நிலத்தைச் சீரமைத்து, ஊர் மக்கள், மிராசுதாரர்கள் உதவியுடன் ஒரு பள்ளிக்கூடத்தை உருவாக்கினார். 1968இல் அதை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தினார். பள்ளிக்குக் கட்டடம் கட்ட, செங்கற்களைத் தயாரித்து, பஞ்சாயத்து மரங்களைப் பயன்படுத்தி நல்ல கட்டடத்தை எழுப்பினார். உத்திரங்குடி கிராமத்திலும் பள்ளிக்கூடம் அமைய வழிவகை செய்தார்.

அரசுப் பள்ளிகளை உருவாக்குவதிலும் பலப்படுத்துவதிலும் அவர் காட்டிய அக்கறை, ஒரு காலத்தில் எழுத்தறிவற்ற பண்ணையடிமையாக இருந்த ஒருவரின் வரலாற்றுப் பழிவாங்கல் என்றே சொல்லலாம்: அடிமைத்தனத்தின் மீது கல்வியால் தொடுத்த தாக்குதல் அது.

சாலை, மின்சாரம், ஊராட்சிக்கு வருமானம்

உத்திரங்குடியிலும் பாங்கலிலும் சாலைகள் அமைத்தார்; கிராமங்களுக்கு மின் இணைப்பு கிடைக்கப் பாடுபட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புக்கும் பிற குடியிருப்புக்கும் ரேடியோ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அன்றைய திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மலையப்பன் ஒரு சிறப்பான யோசனையை முன்வைத்தார்: பட்டுப்போன நெடுஞ்சாலைத் துறை மரங்கள், காய்ப்புள்ள புளிய மரங்கள், தென்னை மரங்கள் போன்றவற்றைப் பஞ்சாயத்துகளுக்கே சராசரியாக ஐந்தாண்டுக் குத்தகைக்கு வழங்கலாம் என்பதே அது. தமிழக அரசு அந்த யோசனையை ஏற்று உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவைத் தமிழகத்திலேயே முதன்முதலில் அமல்படுத்தியவர் தோழர் பி.எஸ்.டி. அதன் மூலம் பாங்கல் பஞ்சாயத்துக்குப் பல்லாயிரக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கத் தொடங்கியது.

அரசின் திட்டங்களையும் அதிகாரிகளின் நல்ல யோசனைகளையும் மக்களுக்குச் சாதகமாக முதலில் கைப்பற்றுவது ஒரு கம்யூனிஸ்ட் உள்ளாட்சிப் பிரதிநிதியின் கடமை என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

சிறைக் கம்பிகளும் அசையாத உறுதியும்

மக்களுக்காக நின்றதற்கு அவர் கொடுத்த விலையும் பெரிது. 1962 இந்திய–சீன எல்லை மோதலின்போது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுப் பல மாதங்கள் சிறையில் இருந்தார். 1975 அவசரநிலைக் காலத்திலும் காவலில் வைக்கப்பட்டார். அவரது வாழ்நாளில் மொத்தம் 9 ஆண்டு 9 மாதம் சிறைவாசம், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை.

1991இல் தஞ்சையில் நடைபெற்ற கட்சியின் 14ஆவது மாநில மாநாட்டில், பிரதிநிதிகளிலேயே மிக அதிக காலம் சிறையில் இருந்தவர் தோழர் பி.எஸ்.டி. என்று தகுதி ஆய்வுக்குழு அறிவித்தபோது, மாநாட்டு அரங்கமே எழுந்து பலத்த கரவொலி எழுப்பியது. அந்தக் கரவொலி ஒரு தனிமனிதருக்கான பாராட்டு அல்ல; ஒரு தலைமுறையின் தியாகத்துக்குச் செலுத்தப்பட்ட மரியாதை.

இன்றைய தலைமுறைக்கான படிப்பினைகள்

தோழர் பி.எஸ்.டி.யின் நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? இன்றைய தலைமுறை என்ன செய்ய வேண்டும்?

கீழத்தஞ்சையில் சாணிப்பால், சவுக்கடி போன்ற கொடுமைகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் தமிழ்நாடு முழுவதும் தீண்டாமைக் கொடுமை இன்றும் பல வடிவங்களில் நீடிக்கிறது. ஆணவக் கொலைகள் உள்ளிட்ட கொடூரங்கள் தொடர்கின்றன. அவற்றை எதிர்த்துப் போராட, பி.எஸ்.டி.யின் பங்களிப்பும் அனுபவமும் நமக்கு வழிகாட்டும்.

ஒற்றுமையே வெற்றியின் திறவுகோல்

தீண்டாமைக்கு எதிரான போராட்டத்திலும் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டத்திலும் நாம் வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம், தலித் மக்களும் தலித் அல்லாதவர்களும், விவசாயத் தொழிலாளர்களும் குத்தகை விவசாயிகளும் ஒன்றுபட்டு நின்றதுதான். இந்த ஒற்றுமையைத் தமிழ்நாடு முழுவதும் உருவாக்காமல், தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெற முன்னெடுக்க முடியாது; கிராமப்புற விவசாயிகளின் பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது.

அன்று கிராமப்புறத்தில் விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், பணக்கார விவசாயிகள் என அனைவரையும் நிலப்பிரபுக்களுக்கும் அவர்களுக்குத் துணைநின்ற அரசுக்கும் எதிராக ஒன்றுதிரட்டினோம். இன்று கிராமப்புறத்தில் ஒரு புதிய வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. விடுதலைக்குப் பிறகு மத்திய அரசுகள் கடைப்பிடித்த கொள்கைகளால் ‘கிராமப்புறப் பணக்காரர்கள்’ என்ற பிரிவு உருவாகியிருக்கிறது. வேளாண்மையைவிட, கந்துவட்டி, தனியார் பள்ளிகள், ரியல் எஸ்டடேட் போன்றவற்றிலிருந்தே அவர்களுக்கு அதிக வருமானம் வருகிறது. ஆளும் வர்க்கத்துக்கும் இத்தகைய கிராமப்புறப் பணக்காரர்களுக்கும் எதிரான பரந்த ஒற்றுமையை உருவாக்கினால்தான், அன்று நிலப்பிரபுக்களுக்கு எதிராக அணிதிரண்டு வென்றதைப் போல இன்றும் வெல்ல முடியும்.

அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்

அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்பதில் பி.எஸ்.டி முன்மாதிரியாக விளங்கினார். இன்று தமிழ்நாட்டில் 2,000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக உள்ளன; எப்போது வேண்டுமானாலும் மூடப்படும் அபாயத்தில் இருக்கின்றன.

கல்வியின் மூலம் சமூக மாற்றம் என்ற பாதையில் நடந்தவர்களின் நீண்ட வரிசை உண்டு. ஜோதிராவ் பூலேவும் சாவித்திரிபாய் பூலேவும் அந்தப் பாதையின் முன்னோடிகள். கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான தோழர் பி.சுந்தரய்யா, தன் கிராமத்தில் முதலில் பள்ளிக்கூடத்தைத் தொடங்கி, அதில் தானே ஆசிரியராகவும் பணியாற்றினார். சாந்திநிகேதனில் தாகூர் தொடங்கிய ஆரம்பப் பள்ளிதான் இன்று பல்கலைக்கழகமாக வளர்ந்து நிற்கிறது. அந்த வரிசையில்தான் பி.எஸ்.டி.யும் பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் ஏழைக் குடும்பத்துக் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பதே, இன்று நாம் பி.எஸ்.டி.யிடமிருந்து பெற வேண்டிய முக்கியப் படிப்பினை. இத்தகைய பள்ளிகளைப் பாதுகாப்பதன் மூலமே தலித் மற்றும் ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.

போராடினால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை

கீழத்தஞ்சையில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியும், பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நடத்திய போராட்டங்களால், லட்சக்கணக்கான ஏக்கர் உபரி நிலம் விநியோகிக்கப்பட்டது; ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு மனைப்பட்டா பெற்றுத் தரப்பட்டது; குத்தகை விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன; கொடூரமான தீண்டாமைக் கொடுமைகள் ஒழிக்கப்பட்டன.

இவை அனைத்துக்கும் முக்கியக் காரணம் ஒன்றுதான்: ‘போராடினால் வெற்றி பெற முடியும்’ என்ற நம்பிக்கையைக் கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடம் உருவாக்கியது. தோழர் பி.சீனிவாசராவ் முதலில் விதைத்த அந்த நம்பிக்கையை, பி.எஸ்.டி. போன்ற தலைவர்கள் கிராமம் கிராமமாக வளர்த்தெடுத்தார்கள். அந்த நம்பிக்கையை இன்றைய மக்களிடம் மீண்டும் உருவாக்குவதே நம் முன் உள்ள பணி.

இறுதி மூச்சு வரை

கட்சியின் முழுநேர ஊழியராகும் வரை விவசாயத் தொழிலாளியாகவே உழைத்தவர் தோழர் பி.எஸ்.டி. இறுதி மூச்சு வரை மக்கள் இயக்கத்தின் பிரிக்க முடியாத பகுதியாக வாழ்ந்த அவர், 1997 ஆகஸ்ட் 19 அன்று சென்னை மருத்துவமனையில் உயிர் நீத்தார். அவரது சொந்த மண்ணான பாங்கலில் நடந்த இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரும் துயரமும் அவரது வாழ்வையே படம் பிடித்துக் காட்டின.

பதவிகளையோ பட்டங்களையோ அல்ல, கட்சி உறுப்பினர் என்ற அடையாளத்தையே தன் வாழ்வின் உச்சமாகக் கருதிய அந்த மாமனிதரின் நூற்றாண்டில், அவர் விட்டுச்சென்ற பணியைத் தொடர்வோம் என்று உறுதியேற்போம்.