சாலையோர வியாபாரிகள் வங்கி கடன் பெற உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும்: தஞ்சாவூர் மேயர்
12 Dec 2025, 2:40 pm
<p><strong>சாலையோர வியாபாரிகள் வங்கி கடன் பெற உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும்: தஞ்சாவூர் மேயர்</strong></p>
<p>தஞ்சாவூர், டிச.12- தஞ்சாவூர் மாநகரில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் பெற, வியாபாரிகள் உடனடியாக உறுப்பினராக பதிவு செய்து அடையாள அட்டை பெற முன் வர வேண்டும் என தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில், வெள்ளியன்று சாலையோர வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து, வியாபாரிகளிடம் பேசுகையில், “தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் சுமார் 20 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் தொழில் செய்து, வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, வட்டியில்லா கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதலில் 2,939 வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், இந்த தொகையை முறையாக திருப்பி செலுத்திய 1,035 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும், இந்த தொகையை முறையாக செலுத்திய 217 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 4,181 பேருக்கு ரூ.6.60 கோடி வட்டியில்லா கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 ஆயிரம் வியாபாரிகள் உறுப்பினராக பதிவு செய்ய அதற்கான விண்ணப்பங்களை வழங்கி, அவை பரிசீலனையில் உள்ளன. இதுவரை யாரும் உறுப்பினராகாமல் இருந்தால் உடனடியாக உறுப்பினராக பதிவு செய்ய முன் வர வேண்டும். சாலையோர வியாபாரிகளிடம் மாநகராட்சியால் வசூல் செய்யப்பட்டு வந்த தினசரி கட்டணம், விதி எண் 270-ன் கீழ், முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்’’ என்றார். நிகழ்வில், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டல குழுத் தலைவர்கள் சி.மேத்தா, புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
