100 நாள் வேலைத் திட்டத்தைச் சிதைக்காதே! ‘விபி-ராம்ஜி’ சட்டத்தைக் கைவிடு! - எம். சின்னதுரை
1 Jul 2026, 9:33 pm

100 நாள் வேலைத் திட்டத்தைச் சிதைக்காதே! ‘விபி-ராம்ஜி’ சட்டத்தைக் கைவிடு! - எம். சின்னதுரை

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கிராமப்புற வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களை சந்தித்து போராட்டத்திற்கு அணிதிரட்டிய சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ‘விபி-ராம்ஜி’ (VB-G RAM G - விக்சித் பாரத் - ரோஸ்கர் மற்றும் அஜீவிகா மிஷனுக்கான உத்தரவாதம்) திட்டத்தைப் பீகார், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களே முழுமையாக எதிர்க்கின்றன. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான நிதிப் பகிர்வுச் சுமை நெருக்கடியே இதற்குக் காரணம் என்று அவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது, இத்திட்டத்தை ரத்து செய்யக் கூடாது; அதே பெயரிலேயே செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சரால் முன்மொழி யப்பட்டுச் சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போதைய தவெக அரசு, இத்திட்டம் சம்பந்தமாகக் கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதி காப்ப தையும், ஒன்றிய அரசின் திட்டத்தை அமல்படுத்த முயற்சிப்பதையும் தவிர்த்திட; தடுத்திட வேண்டும்.

நிதிப் பகிர்வுச் சுமை நெருக்கடியும் மாநிலங்களின் குமுறலும்

முந்தைய 100 நாள் வேலைத் திட்டத்தில் தொழிலாளர்களின் 100% ஊதியச் செலவையும் ஒன்றிய அரசே முழுமையாகப் பொறுப்பேற்று வழங்கியது. ஆனால், புதிய ‘விபி - ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நிதிப் பகிர்வு 60:40 என்ற விகிதத்தில் மாற்றப்பட்டுள்ளது (வடகிழக்கு மற்றும் மலைப்பகுதி மாநிலங்களுக்கு 90:10). அதாவது, தொழிலாளர் ஊதியத்தில் 40% பங்கை அந்தந்த மாநில அரசுகளே தங்கள் சொந்தக் கருவூலத்திலிருந்து செலுத்த வேண்டும். புதிய விதியின்படி, ஒன்றிய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலான நிதியை மட்டுமே விருப்ப அடிப்படையில் நிர்ணயம் செய்கிறது. இந்த நிதி வரம்பைத் தாண்டி ஏற்படும் அனைத்து கூடுதல் செலவுகளையும் மாநில அரசுகளே முழுமையாக ஏற்க வேண்டும். 125 நாட்கள் வேலை வழங்க ஒன்றிய அரசு போடும் சட்டங்களைக் கண்டு மாநில அரசுகள் அஞ்சுகின்றன.

ஒன்றிய அரசின் தற்போதைய ஒதுக்கீட்டின்படி மாநிலங்கள் சந்திக்கும் நெருக்கடிகள்:

பீகார்: மாநிலத்திற்கான ஒதுக்கீடு ₹4,477 கோடி. ஆனால், 125 நாட்கள் முழுமையாக வேலை வழங்க வேண்டும் என்றால் பீகார் அரசுக்கு ₹15,939 கோடி தேவைப்படும். மத்திய பிரதேசம்: வழங்கப்பட்டுள்ள நிதி ₹4,168 கோடி. இத்தொகையைக் கொண்டு வெறும் 43 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்க முடியும். 125 நாட்களை எட்ட வேண்டும் எனில், அம்மாநில அரசு ₹20,037 கோடி வரை செலவிட வேண்டியிருக்கும். ஜார்க்கண்ட்: ஒதுக்கீடு ₹1,804 கோடி. இது வெறும் 41 நாட்களுக்கு மட்டுமே போதுமானது. முழுமையாக 125 நாட்கள் வேலை வழங்க ₹9,293 கோடி தேவைப்படும் என்பதால், இச்சுமையைத் தாங்க முடியாது என அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாகக் கவலை தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு ஏற்படும் பெரும் பாதிப்புகள்

ஜூலை 1 முதல் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்தால் தமிழ்நாட்டிற்குப் பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, ஆண்டுக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமையாக அமையும். தேசிய அளவிலான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கான பங்கு முன்னதாகச் சுமார் 10% ஆக இருந்தது, புதிய திட்டத்தின் கணக்கீட்டு விதிகளால் 4.1% ஆகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்காக ₹7,585.49 கோடி நிதியை இடைக்காலமாக ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு தனது 40% பங்கான ₹5,305.04 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இரு அரசுகளின் பங்கையும் சேர்த்தால் ஒட்டுமொத்தமாக ₹13,262.61 கோடி நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு தொழிலாளிக்கு ஒரு நாள் வேலை வழங்கச் சராசரியாக ₹479.49 செலவாகிறது. இத்தொகையைக் கொண்டு மாநிலத்தில் சுமார் 27.68 கோடி மனித வேலைநாட்களை மட்டுமே உருவாக்க முடியும். மாநிலத்தில் சுமார் 64.59 லட்சம் ஜாப் கார்டு வைத்துள்ள குடும்பங்கள் உள்ளனர் (2024-25 இல் 73.32 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டது). கிடைக்கப் பெறும் மொத்த நிதியை வைத்து கணக்கிட்டால், நடப்பாண்டில் ஒரு குடும்பத்திற்குச் சராசரியாக 39.69 நாட்கள் மட்டுமே வேலை வழங்க முடியும். ஏற்கனவே 2025-26 ஆம் ஆண்டு 12,524 ஊராட்சிகளிலும் 35 கோடி மனித சக்தி நாட்கள் தொழிலாளர் வரவு செலவு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. அதனை நிறைவேற்ற ₹16,782.15 கோடி தேவை. ஆனால் ஒன்றிய அரசு நிதிப் பாக்கியையும் வழங்காமல், பொய் விளம்பரங்களை அள்ளி விடுகிறது.

தொழில்நுட்பக் கொடுமையும் ஏமாற்றமும்

2026-27 நிதியாண்டிற்காக ஒன்றிய அரசு ₹95,692 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாயக் காலங்களில் 60 நாட்கள் இடைவேளையைத் தவிர, மீதமுள்ள 305 நாட்களில் 125 நாட்கள் வேலைக்கான உத்தரவாதம் என ஏட்டில் எழுதி ருசி பார்க்கச் சொல்கிறது. 318 வகையான அனுமதிக்கப்பட்ட வேலைகளின் தற்காலிகப் பட்டியலை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வருகைப்பதிவிற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள முக அடையாளத்தைக் கண்டறியும் தொழில்நுட்பம் மற்றும் கண் கருவிழி ஸ்கேன் செய்யும் முடிவால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் இத்தொழில்நுட்பப் பதிவின் போது துயரமான மரணச் சம்பவமும் நடந்துள்ளது. இந்தத் தொழில்நுட்ப கட்டாயம் தொழிலாளர்களை வேலையிலிருந்து விலக்குவதற்கும், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதற்கும் வழிவகுத்துள்ளது.

உழைக்கும் மக்களின் 4 அம்சக் கோரிக்கைகள்

1. வி பி ஜி ராம் ஜி திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, வலுப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் ஒன்றிய அரசு கொண்டு வர வேண்டும். 2. தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சம் 200 நாட்கள் வேலையும், தினக்கூலியாக ₹700-ம் வழங்கப்பட வேண்டும். இவவூதியம் ஆண்டுதோறும் சந்தை பணவீக்கத்திற்கு ஏற்ப சரி செய்யப்பட வேண்டும். 3. ஊதியம் மற்றும் வருகைப்பதிவு முறைகளில் உள்ள, தொழிலாளர்களை விலக்கு அளிக்கும் முக அடையாளம் காணும் தொழில்நுட்பங்களைத் திரும்பப் பெற வேண்டும். 4. கிராமங்கள் முழுவதும் திட்டத்தைச் செயல்படுத்துவதிலும், சமூகத் தணிக்கை, நிதிச் செலவீனம் ஆகியவற்றின் வெளிப்படைத்தன்மையை ஆய்வு செய்வதிலும் கிராம சபைகளை முக்கியப் பங்குதாரராக மாற்றி அதிகாரம் அளிக்க வேண்டும். எளிய மக்கள் மீது இரக்கமற்ற தாக்குதலை நடத்தும் பாஜக ஒன்றிய அரசின் உத்தரவை எதிர்த்து, 2026 ஜூலை 1 ஆம் தேதி தமிழ்நாடெங்கிலும் பாட்டாளி வர்க்கப் படை ஒன்று திரண்டு முழக்கமிட்டு மக்கள் கோரிக்கையை வென்றெடுப்போம்!