அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவசரமாக உளவியல் படிப்பு தொடங்குவதை கைவிடுக! மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் வலியுறுத்தல்
10 Mar 2026, 3:51 pm
<p><strong>அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவசரமாக உளவியல் படிப்பு தொடங்குவதை கைவிடுக! மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் வலியுறுத்தல்</strong></p>
<p>சென்னை, மார்ச் 10- அரசு மருத்துவக் கல்லூரிகளில் உளவியல் படிப்புகளை அவசரகதியில் தொடங்குவதை கைவிட வேண்டுமென்று மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அமைப்பின் பொதுச் செயலாளர் மருத்துவர் எஸ்.காசி விடுத்துள்ள அறிக்கையில், “அரசு மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி மற்றும் எம்.ஏ உளவியல் படிப்புகளைத் தனித் துறையாக துவங்க மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, தனித் துறையை உருவாக்குவதற்கான பணியிடங்களை மறு பணியமர்த்தல் மூலமாக செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய மருத்துவர்கள் இன்றி மருத்துவத் துறை உள்ளது. இந்நிலையில் மறு பணியமர்த்தல் செய்து, உளவியல் படிப்புகளைத் தொடங்குவது ஏற்புடையதல்ல. அதற்கான புதிய பணியிடங்கள், உட்கட்டமைப்புகளை உருவாக்கிய பிறகே, அவ்வகை படிப்புகளைத் தொடங்க வேண்டும். மனநல மருத்துவத்தின் துணை படிப்பாகவே மருத்துவ உளவியல் பிரிவு இருக்க வேண்டும். தற்போது கலைக் கல்லூரிகளில் தனித்துறையாக உளவியல் படிப்புகளை பயிற்றுவிப்பது போதுமானது. ஒருங்கிணைந்த மனநல சேவை வழங்குவதில், மனநல செவிலியர், மனநல சமூக பணியாளர் படிப்புகளை ஊக்குவிக்க வேண்டும். உளவியல் சார்ந்த படிப்பிற்கு மட்டும் கவனம் செலுத்தினால், நோயாளர் சேவையில் எதிர்காலத்தில் சமநிலையற்ற தன்மையை உருவாக்கும். ஒருங்கிணைந்த மருத்துவ சேவை என்பது மருத்துவர், பல்வேறு மருத்துவம் சார்ந்த வல்லுநர்கள் இணைந்து பணியாற்றும் பன்முகத்தன்மை கொண்டது. எனவே, ஒரு குறிப்பிட்ட மருத்துவம் சார்ந்த படிப்பை தொடங்குவதற்கு முன், அது தொடர்பான அனைத்து துறையினரிடமும் கலந்துரையாடல் நடத்தி முடிவெடுக்க வேண்டும். எனவே, அவசரகதியில் உளவியல் படிப்புகளை தொடங்குவதை கைவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.</p>
