ஸ்டெர்லைட் படுகொலை ஏழு ஆண்டுகளாகியும் கிடைக்காத நீதி - கே. அர்ஜுனன்
yesterday

ஸ்டெர்லைட் படுகொலை ஏழு ஆண்டுகளாகியும் கிடைக்காத நீதி - கே. அர்ஜுனன்

“சுட்டேன், சுட்டேன், துப்பாக்கியில் குண்டுகள் தீரும் வரை சுட்டேன்” என்று கொக்கரித்தான் ஜெனரல் டயர். 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன்வாலாபாக் பூங்காவில், ரவுலட் சட்டத்திற்கு எதிராக ஒன்று கூடிய மக்களைப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காக்கை–குருவிகளைப் போல் சுட்டு வீழ்த்தினர். அதிகாரப்பூர்வமாக 379 பேர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது நடந்தது அடிமை இந்தியாவில்.

இதற்குச் சற்றும் குறையாமல், திரும்பிய பக்கமெல்லாம் காவல்துறையின் அதிரடிப் படை

கள் கண்ணில் பட்டவர்கள் மீது கண்மூடித்தன மாகத் தாக்கின. கொலை செய்யும் நோக்கத்துடன் குறிவைத்து நடத்திய துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது சுதந்திர இந்தியாவில், சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில்.

தூத்துக்குடி படுகொலை

2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட த்தின் நூறாவது நாளில், ஜனநாயக வழியில் ஒன்றுகூடிய மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் இரு பெண்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 17 வயது மாணவி ஸ்னோலின் வாயில் சுடப்பட்ட கொடுமையும், நூற்றுக்கணக்கானோர் கை–கால் இழந்து காயப்பட்டதும் என அந்த ஒரு நாளிலேயே தூத்துக்குடியைப் பெரும்வன்முறைக் காடாக மாற்றியது.அரசியலமைப்புச் சட்டம் பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை உள்ளிட்ட பல உரிமைகளைவழங்கியிருந்தாலும், ஜனநாயக வழியில் போராடும் உரிமைகள் பறிக்கப்படுவதும், நியாயமான கோரிக்கைகள் மறுக்கப்படுவதும் தொடர்கின்றன. வேதாந்தா நிறுவனத் திற்கு ஆதரவாக அரசும் காவல்துறையும் நிராயுதபாணிகளானமக்களை ஆயுதங்கள் மூலம் தாக்கிப் படுகொலை செய்தன.

களத்தில் இறங்கிய மார்க்சிஸ்ட் கட்சி

உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது; அன்றைய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி முதல் மாநிலத் தலைவர்கள் வரை அனைவரும் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றனர். பல பொதுநல அமைப்புகளும் ஜனநாயக இயக்கங்களும் அப்போராட்டத்திற்கு ஆதரவாக நின்றன. துப்பாக்கிச்சூடு தொடர்பாக 243 முதல் தகவல் அறிக்கைகளும், 13 பேர் கொல்லப்பட்டது குறித்து ஐந்து அறிக்கைகளும் பதிவு செய்யப்பட்டன. 23.5.2018 அன்று தமிழ்நாடு அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் அன்றைய தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே. எஸ். அர்ஜுனன் பெயரில் சிபிஐ இணை இயக்குநர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பப் பட்டது. 18.6.2018 அன்று மதுரை உயர் நீதி மன்றக் கிளையில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு, 14.8.2018 அன்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. வழக்கை எடுக்காமல் சிபிஐ காலதாமதம் செய்ததால் அதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னரே விசாரணை தொடங்கியது; இன்றும் அது நடைபெற்றுவருகிறது.

அருணா ஜெகதீசன் ஆணையம் சொன்னது...

நான்கு ஆண்டுகால விசாரணைக்குப் பின், 2022இல் 3000 பக்க அறிக்கையை அப்போதைய திமுக அரசிடம் ஆணையம் வழங்கியது. உயிரிழந்த, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும், துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான எஸ்பி, டிஐஜி உள்ளிட்ட 17 காவல் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் அது பரிந்துரைத்தது. ஆனால் சிபிஐ நான்கு ஆண்டுகள் விசாரணை நடத்தியும், இறுதியில் தாக்கல் செய்த அறிக்கையில் ஒரே ஒரு காவல் ஆய்வாளர் மீது மட்டுமே குற்றம்சாட்டப்பட்டு, ஒன்றிய ஆட்சியாளர்களின் கார்ப்பரேட் விசுவாசம் வெளிப்பட்டது.

திமுக ஆட்சியின் போது, நீதிமன்ற விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பகுதி இழப்பீடு மட்டும் வழங்கப்பட்டதாகவும், நீதிபதியின் அனைத்துப் பரிந்துரைகளையும் அமல்படுத்துவது சட்டப்பூர்வக் கடமை அல்ல எனவும் அரசுத் தரப்பு கூறியது. அந்த அடிப்படையில், பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மறுத்துவிட்டது. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதாகப் பிரச்சாரம் செய்த திமுக, ஆட்சிக்கு வந்தபின் அரசியலுக்காகப் பேசியதை மறந்து, அதிகாரிகளைக் காப்பாற்றும் நிலைக்கு மாறியது.

அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் ஒரே நிலையில்..!

தூத்துக்குடி படுகொலையையும் ஸ்டெர்லைட் மூடலையும் முன்வைத்து ‘அரசியல்’ செய்த அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும், ஆட்சிக்கு வந்தபின் தங்கள் நிலையை மாற்றிக்கொள்வதே தொடர்கதையாக உள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொலைக்காட்சியில் பார்த்தே தெரிந்துகொண்டதாகக் கூறிய அன்றைய அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. வேதாந்தா நிறுவனத்திடமிருந்து நூற்றுக்கணக்கான கோடி நிதி பெற்ற பாஜக, ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவே பேசி வருகிறது. திமுக ஆட்சியின் தவறுகள் அனைத்தையும் திருத்தவே வந்ததாகக் கூறும் தவெக, ஆட்சிக்கு வந்தபின்காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றும் வகையில் முந்தைய திமுக அரசைப் போலவே உயர் நீதிமன்றத்தில் மேல் நடவடிக்கை எதுவும் இல்லை எனக் கூறியிருப்பது எந்தவிதத்திலும் மாற்றம்அளிப்பதாக இல்லை; ஏமாற்றமே மிஞ்சு கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதர வளிப்பதிலும், தவறிழைத்தஅதிகாரிகளைக் காப்பாற்றுவதிலும் அதிமுக, திமுக, தவெக, பாஜக ஆகிய அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலையில்உள்ளன என்பதை இச்சம்பவம் தெளிவாக்குகிறது.

அன்றைக்கு அடிமை இந்தியாவில் ஜாலியன்வாலாபாக் படுகொலை குறித்து விசாரிக்க பிரிட்டிஷ் அரசு ஹண்டர் தலைமையில் குழு அமைத்தபோதும், ஜெனரல் டயரின் நடவடிக்கைகள் மன்னிக்கப்பட்டு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; மாறாக அன்றைய பஞ்சாப் மாகாண சபை அவரைப் புகழ்ந்து ‘பஞ்சாப்பின் காப்பாளர்’ என்று பொறிக்கப்பட்ட வாளைப் பரிசாக வழங்கியது. நூறு ஆண்டுகளுக்கு முன் அடிமை இந்தியாவில் நிகழ்ந்த அநீதி, இன்று சுதந்திர இந்தியாவிலும் வடிவம் மாறி மீண்டும் நிகழ்ந்திருப்பதுதான் வேதனை தருகிறது. இதற்கு எந்தவிதத்திலும் குறைவின்றி, தமிழக–ஒன்றிய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் ஸ்டெர்லைட் வன்முறைப் பிரச்சனையில் அமைந்திருப்பது வேதனையானது.

செப்.17 சிபிஎம் போராட்டம்

இத்தகைய நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தபடி காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆணையத்தின் பரிந்துரைப்படி முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி பொதுமக்கள் 101 பேர் மீது புனையப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்பீர்!