தரங்கம்பாடியில் மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி
1 Jun 2026, 11:05 pm
<p><strong>தரங்கம்பாடியில் மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி</strong></p><p>மயிலாடுதுறை, ஜுன் 1- மயிலாடுதுறை மாவட்டத்தின், தலைமை மீனவர் கிராமமான தரங்கம்பாடியில் மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் கபடி குழு சார்பில், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. மே 29ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள் இரவு, பகலாக தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதன் இறுதிப்போட்டி ஞாயிறு இரவு நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த சக்தி பிரதர்ஸ் அணியும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எதிர்நீச்சல் அணியும் மோதின. போட்டியை தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அமெச்சூர் கபடி கழகத் தலைவர் ரஜினி ஆகியோர் தொடங்கி வைத்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் அந்தியூர் சக்தி பிரதர்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகைகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.இந்த மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியை ஆயிரக்கணக்கான விளையாட்டு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். </p>
