வானகிரி மீனவர்கள் 14 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை மீன்பிடி தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் சங்கம் கண்டனம்
12 Nov 2025, 3:20 pm
<p><strong>வானகிரி மீனவர்கள் 14 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை மீன்பிடி தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் சங்கம் கண்டனம்</strong></p>
<p>மயிலாடுதுறை, நவ.12 - மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படை கைது செய்ததை மயிலாடுதுறை மாவட்ட மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் (சிஐடியு) வன்மையாக கண்டித்துள்ளது. இதுதொடர்பாக மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டச் செயலாளர் சி.வி ஆர்.ஜீவானந்தம் விடுத்துள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த நவ.3 ஆம் தேதி அதிகாலை வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ராமையன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த விசை படகு நவ.4 அன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகே கடலில் பழுதடைந்தது. இதைத் தொடர்ந்து அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகின் உதவியோடு ஜெகதாப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் விசைப்படகை பழுது நீக்கி கடந்த நவ.8 அன்று ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத், அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்குமார் மற்றும் தரங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்து, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி ஆகிய 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து உள்ளனர். அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர். கடலில் மீன்வளம் குறைந்து வரும் சூழலில், வறுமையில் உள்ள மீனவ மக்களை சிறை பிடிப்பது படகுகளை பறிமுதல் செய்வது மிகவும் கண்டனத்துக்குரியது. கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் விடுவிக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.</p>
