திருச்சி விரைவு செய்திகள்
22 Feb 2026, 3:26 pm

நில உடமை பதிவு செய்ய பிப்.26 வரை சிறப்பு முகாம்

தஞ்சாவூர், பிப்.22- தஞ்சாவூர் மாவட்டத்தில் நில உடமை பதிவு செய்யாத 60 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்ய வசதியாக வரும் பிப்.26 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதால், விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண்மைத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து, தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கோ. வித்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் பிரதம மந்திரியின் நில உடமைக்கான தனித்துவ அடையாள எண் பெற வசதியாக, பிப்.23 (திங்கள்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வரும் காலங்களில் தொடர்ந்து ஒன்றிய, மாநில அரசுகளின் சலுகைகளை பெற்றிட, நில உடமை ஆவணங்களை பதிவு செய்வது, விவசாய அடையாள எண்ணை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை தங்களது நில உடமை விவரங்களை வேளாண் துறையின் வலை த்தளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனைத்துறை கள அலுவலர்களை தொடர்பு கொண்டு, தங்களது நில உடமை ஆவணங்களை வேளாண் துறை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து விவசாயிகளுக்கான அடையாள எண் பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,65,708 விவசாயிகள் உள்ளனர். இதில் 1,05,305 விவசாயிகள் பிரதம மந்திரியின் தனித்துவ அடையாளங்களையும் பெற்றுள்ளனர். இன்னும் 60,403 விவசாயிகள். விவசாய அடையாள எண் பெறாத விவசாயிகள், விவசாயிகளாக கருதப்பட மாட்டார்கள். வரும் காலங்களில் மானியத் திட்டங்கள் பயன்களை பெற இயலாது.பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டம், பயிர் காப்பீடு திட்டம், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பயன்பெற இந்த அடையாள எண் அவசியம். எனவே, தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தங்களுடைய நிலத்தின் கணினிச் சிட்டா, ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது இ-சேவை மையம் அல்லது அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் கல்லூரி மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், பிப்.21- தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி கிராமத்தில் உள்ள ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனொரு பகுதியாக, திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி, தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி இயக்குநர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஒருங்கிணைப்பில் போதை ஒழிப்புப் பேரணி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கேத்தரின் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண், பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனர்.

தஞ்சையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், பிப்.22- தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் பிப்.24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில், விவசாயம் தொடர்பான தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறும்படி தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் நித்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.