புதிர் விளையாட்டு
4 Jul 2026, 9:17 pm

புதிர் விளையாட்டு

சிட்டுக்குருவிகளே இன்று உங்களின் ஊகத் திறனுக்கான இன்னொரு கதையைப் பார்ப்போம். வேடிக்கை என்னவென்றால் இந்தக் கதையில் ஒரு சிட்டுக்குருவியே வருகிறது!

சிறுத்தையின் பிறந்த நாளில் சிட்டுக்குருவி தந்த பரிசு!

காட்டுக்கு ராஜா சிங்கம் என்று நிறைய கதைகளில் கேட்டிருப்பீர்கள். ஆனால் நாம் இப்போது பார்க்கிற காட்டில் அப்படிப்பட்ட பரம்பரை அரசர் யாரும் கிடையாது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்டின் காவல் பொறுப்பாளரை எல்லா விலங்குகளும் பறவைகளும் சேர்ந்து தேர்ந்தெடுக்கிற தேர்தல் முறை இருந்தது. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் ஒரு சிறுத்தை. அது தன் பணிகளை நல்லபடியாகச் செய்து அனைவரின் அன்பையும் பெற்றிருந்தது. சிறுத்தையின் பிறந்தநாள் நெருங்குவதைக் காட்டின் உயிரினங்கள் தெரிந்துகொண்டன. அதைக் கொண்டாட முடிவு செய்தன. அதற்காக ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு பறவையும் விதவிதமான பரிசுப் பொருள்களைச் சேகரித்தன. மயில் அழகான தோகைகளையும், முயல் சுவையான கேரட்டுகளையும், குரங்கு தித்திக்கும் பழங்களையும் கொண்டு வந்தன. சின்னஞ்சிறு சிட்டுக் குருவிக்கு என்ன பரிசு தருவது என்று ஒரே குழப்பமாக இருந்தது. காடு முழுக்கப் பறந்து தேடியது. வழியில் இதுவரை பார்த்திராத ஒரு மரம் வளர்ந்திருந்தது. அதன் அடியில் ஒரு விந்தையான பொருள் கிடந்தது. மரத்திடமே “உன் பெயர் என்ன, இந்தப் பொருளின் பெயர் என்ன, என்று கேட்டுத் தெரிந்துகொண்டது. இயற்கையான அன்பளிப்பு போல இருந்த அந்தப் பொருளைச் சிட்டுக்குருவி எடுத்துக்கொண்டது. தூக்குவதற்குக் கடினமாக இருந்தாலும், காவல் பொறுப்பாளர் மகிழ்ச்சியடைவார் என்ற எண்ணத்தால் சிரமத்தைக் கருதாமல் அந்தப் பொருளைக் கொண்டு சென்றது. சிறுத்தை பரிசுகள் அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தது. அவற்றை வழங்கிய உயிரினம் ஒவ்வொன்றுக்கும் நன்றி கூறியபடி சுற்றி வந்தது சிட்டுக்குருவி கொண்டு வந்த பொருளைப் பார்த்ததும் வியப்படைந்தது. “குருவியாரே! இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். பந்து போல இருக்கிறது. வெளியே கரடுமுரடாக ஓடு இருக்கிறது. நமக்கு இரண்டு கண்கள் இருக்கின்றன, இதற்கோ மூன்று கண்கள் உள்ளன,” என்று சொன்னது சிட்டுக் குருவி புன்னகையோடு, “ஆம், கரடு முரடான இந்தப் பொருளுக்குள் மூன்று நற்பயன்கள் இருக்கின்றன,” என்று கூறியது. “புதிர் போடாதே குருவி. அந்த நற்பயன்கள் என்ன,” என்று சிறுத்தை கேட்டது. அதற்குள்ளாக மற்ற பல விலங்குகளும் பறவைகளும் கூடிவிட்டன. அவர்கள் எல்லோரையும் பார்த்துச் சிட்டுக்குருவி பின்வருமாறு பேசியது: “முதலாவது, இதன் உள்ளே தாகம் தீர்க்கும் சுவையான குடிநீர் இருக்கிறது. இரண்டாவது, பசியை ஆற்றும் வெண்மையான உணவு இருக்கிறது. மூன்றாவது, அவற்றைப் பயன்படுத்திய பிறகு இந்த ஓடு மழைக் காலத்தில் என்னைப் போன்ற சிறு உயிர்கள் நனையாமல் ஒதுங்குவதற்கான கூடாரமாகவும் பயன்படும்!” இளநீர்களே, இதோ உங்களுக்கான புதிர். சிட்டுக் குருவி சிறுத்தைக்குப் பரிசளித்த, இயற்கையின் அன்பளிப்பு எது?

விடை

சரியான விடை தேங்காய். அதைக் கச்சிதமாகக் கண்டுபிடித்த சிட்டுகள் அனைருக்கும் பாலர் பூங்கா வாழ்த்துகள், கண்டுபிடிக்க முயற்சி செய்தவர்களுக்குப் பாராட்டுகள்.