தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அஞ்சலி: சவுகார் ஜானகி - காவியத் தலைவி

22 Aug 2026, 9:04 pm
அஞ்சலி: சவுகார் ஜானகி - காவியத் தலைவி

அஞ்சலி: சவுகார் ஜானகி - காவியத் தலைவி

கலைமாமணி ஆர். பிச்சுமணி அய்யரின் வீணை இசையோடு தொடங்கும் பாக்கியலட்சுமி (1961) திரைப்படத்தின் ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ எனும் அசாத்தியப் பாடல் பி. சுசீலா அவர்களது மந்திரக் குரலில் ஒலிக்கும்போதே திரையில் ஒளிரும் சௌகார் ஜானகி அவர்களது முகத்தை எப்படி மறக்க முடியும்... ‘கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றால் தோழி’ என்ற சரணத்தில், ‘கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி’ என்ற கேள்விக்கு அற்புதமான இசைக் கலைஞர் சத்யம் அவர்களது ஷெனாய் பதில் சொல்கிறேன் என்று தொடங்கி இழைத்து இழைத்து உருக வைத்துப் பிறகு, உனக்கே தெரியுமே, என்ன சொல்ல என்கிற மாதிரி விக்கித்து நிற்கும் இடத்தில் சௌகார் ஜானகி வெளிப்படுத்தும் உணர்வுகள் அபாரமானவை. தனக்கு வாய்த்த விதவிதமான பெண் பாத்திரங்களில் அந்தந்தச் சூழலுக்கான உணர்ச்சிகளை அத்தனை நேர்த்தியாக நடிப்பில் கொண்டு வந்தவர் மறைந்துவிட்டார்.

திரையுலகப் பிரவேசமும் போராட்டங்களும்

ராஜமுந்திரி நகரத்தில் பிறந்த ஜானகி, துணிவுமிக்க பெண்ணாகத் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டு அகில இந்திய வானொலியில் ‘ஏ’ பிரிவு கலைஞராக இயங்கியிருக்கிறார். புகழ்பெற்ற திரை தயாரிப்பாளர் - இயக்குநர் பி. என். ரெட்டி அவராக அறிந்து வாய்ப்புகொடுக்க அழைத்த

போது தெலுங்கு பிராமணக் குடும்பம் அவரைத் திரை உலகுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. அதுமட்டுமல்ல, வேகவேகமாக அவருக்குத் திருமணமும் நடத்தி முடித்தனர்.

காலச்சூழலில் கைக் குழந்தை, கணவர் உடன் வர, அவராக பி. என். ரெட்டி அவர்கள் வீட்டுக் கதவைச் சென்று தட்டியிருக்கிறார் ஜானகி; “இப்போது வாய்ப்பு தாருங்கள், நடிக்க வருகிறேன்” என்று! தனது படத்தில் வாய்ப்பு முடிந்திருந்தாலும், வேறு ஒரு தயாரிப்பாளரை அழைத்து பரிந்துரை செய்திருக்கிறார். முதல் படம், சௌக்காரு எனும் தெலுங்குப் படத்தில், என். டி. ராமராவ் நாயகன், ஜானகி கதாநாயகி. ஏற்கெனவே வி. என். ஜானகி திரையுலகில் அறியப்பட்டிருந்ததால், குழப்பம் வேண்டாம் என்று இவர் சௌகார் ஜானகி என்று அழைக்கப்படலானார்.

வறுமையின் துரத்தலில் திரைக்கு வந்தவர், மேடை நாடகங்களிலும் தொடர்ந்து நடித்து வந்திருக்கிறார். சவாலான பாத்திரங்களில் திறமையாகத் தோன்றி நடித்துக் கொண்டாடப்பட்டிருக்கிறார்.

மறக்க முடியாத கதாபாத்திரங்களும் நடிப்பும்

‘புதிய பறவை’ படத்தில் இரட்டை வேடங்களில் அமைந்த வாய்ப்பு அவருக்குப் பெரும்புகழ் சேர்த்தது. எதிர்பாராத நேரத்தில் சிவாஜி கணேசனின் எதிரில் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற ஒயிலான தோற்றத்தில் பார்வையால் ஆயிரம் அதிர்ச்சிகளை அள்ளி வீசும் காட்சியில் பின்னியிருப்பார். புதிராக நகரும் படத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது. அந்தப் பாத்திரத்திற்கு இவரை சிவாஜிதான் பரிந்துரைத்திருக்கிறார்; அப்போது சுவாரசியமற்று இருந்தவர்கள் படம் முடிந்து திரைக்கு வந்தபோது பெருவியப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

ஒரு பெரிய தொழிலதிபரின் மிடுக்கான மனைவியாக ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் வெவ்வேறு உணர்ச்சிக் கலவைகளில் காட்சிக்குக் காட்சி வித்தியாசமாக அந்த உணர்வு களைப் பிரதிபலித்திருப்பார் ஜானகி. வீட்டு வேலைக்காரனாக இருக்கும் இளைஞன் சிவகுமாரிடம் அளவற்ற பாசம் ஏன் காட்டுகிறார் கணவர் என்று அவர் ஆவேசம் கொண்டு சிவாஜி கணேசனோடு மோதும் காட்சி, புகழ்பெற்ற பெரிய நடிகருக்குச் சமமாக நடித்த பெருமையைத் தந்தது. கடைசி காட்சியில் பிள்ளை பெறாத தாயாக சிவகுமாரை மகனாக ஏற்றுத் தழுதழுத்துப் போவார்.

‘காவியத் தலைவி’ அவரது சொந்தத் தயாரிப்பில் வெளியான வித்தியாசமான திரைக்கதை; இரட்டை வேடங்களில் தாயாகவும், மகளாகவும் அசத்தியிருப்பார் ஜானகி. கவிஞர் கண்ணதாசனின் ‘ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு’ எனும் பாடல், மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் மேதைமை மிக்க இசையில் படத்தின் கதையை ஓரிடத்தில் குவிய வைத்து உணர்த்திவிடும்.

‘பாபு’ திரைப்படத்தில் அவருக்கு வாய்த்த வேடம், அவரது நிஜ வாழ்க்கையைப் போலவே அமைந்துவிட்டது என்று எழுதுகின்றனர். எந்த வசதிமிக்க குடும்பத்திற்கு கார் பழுதுபட்ட ஒரு மழை நேரத்தில் கை ரிக்சா ஓட்டியாக உதவி செய்வாரோ, கணவனைப் பறிகொடுத்து மகளோடு நடுத்தெருவில் குடிசை வாழ்க்கையில் மானம் காக்கப் போராட வேண்டிய தருணத்தில் அந்தத் தாய்க்கு உதவி செய்பவராகப் போய் சிவாஜி நிற்பார். அந்தக் கருணையை ஏற்றுக்கொள்ளவும் இயலாமல், குழந்தைக்காகத் தட்டிவிடவும் முடியாமல் மன்றாடும் இடத்திலிருந்து படத்தின் இறுதிக் காட்சி வரை ஜானகியின் நடிப்பு அபாரமாக அமைந்திருக்கும்.

‘நீதி’ திரைப்படம் முற்றிலும் எதிரெதிர் நிலைகளில் ஒன்றாகவே உள்ளும் புறமுமாக வாழ வேண்டிய கட்டங்களில் ஜானகியும் சிவாஜியும் தோன்றும் படம். பொறுப்பற்ற விபத்திற்குக் காரணமாகிக் கணவனைக் கொன்ற லாரி ஓட்டுநரை எப்படி தனது பாதுகாவலனாக ஒரு விதவை ஏற்றுக்கொள்ள முடியும்? நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக அது சாத்தியம் என்று அமைக்கப்பட்ட வித்தியாசமான திரைக்கதையிலும் மின்னினார் ஜானகி.

நகைச்சுவையும் மாறுபட்ட பரிமாணங்களும்

அழுகை ராணி என்று தனக்கு முத்திரை குத்தப்பட்டதை அவரே வெறுத்துப் பேசி இருக்கிறார். சொல்லப்

போனால், பாமா விஜயம், எதிர் நீச்சல், தில்லு முல்லு போன்ற படங்களில் நகைச்சுவை பாத்திரங்கள் கிடைத்தபோதெல்லாம் கலக்கியிருக் கிறார் ஜானகி.பாமா விஜயம் படத்தில் ஒரு நடிகையின் நுழைவால் அல்லோலகல்லோலப் படும் குடும்பம், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று ஜம்பம் காட்டிக்கொள்ளும் மூன்று மருமகள்கள் மோதிக்கொள்ளும் குடும்பத்தில் சௌகார் ஜானகி தனித்துத் தெரிவார்; பால சந்தரின் பாராட்டுப் பெற்ற நடிகை அவர்.எதிர் நீச்சல் படத்தில் அடுத்தாத்து அம்புஜத்தைக் காட்டியே கணவர் ஸ்ரீகாந்த்திடம் வம்பு செய்து கொண்டிருக்கும்பாத்திரத்தில் வெளுத்துக்கட்டினார். அந்தப் பாடல் காட்சி இரண்டு அசடுகளில் யார் அதிக அப்பாவி என்பதற்கானபோட்டியாக ஒளிரும். பாலச்சந்தரின் படம் அதுவும்.

தில்லு முல்லு படத்தில் மீனாட்சி துரைசாமி பாத்திரம் இவருக்காகவே உருவாக்கப்பட்டது போல் இருக்கும். தேங்காய் சீனிவாசனும் ஜானகியும் சந்தித்துக்கொள்ளும் ஒவ்வொரு காட்சியும் திரையரங்குகளில்கரவொலிகாதைப் பிளக்கும். ஒரு கட்டத்தில் “இதற்கு மேல் உன்னிடம் மாட்டிக்கொண்டு முழிக்க முடியாது” என்று தன்னைத்தாயாக நடிக்க அழைத்திருக்கும் ரஜினிகாந்திடம், “என்னை கொன்னுட்டே... என்னை கொன்னுட்டே... என்னைவிட்டுரு” என்று அவர் கைகூப்பும் காட்சி பெரிதும் ரசிக்கப்படும் ஒன்று. அசாத்திய கற்பனையோடு புரட்டிஎடுத்திருப்பார்.

எம்.ஜி.ஆருடன் மறக்க முடியாத தருணங்கள்

ஒளிவிளக்கு திரைப்படம் தயாரிப்பில் இருக்கையில் மீனா குமாரி பாத்திரத்திற்கு யாரும் தேர்வாகவில்லைஎன்றுஅறிந்தபோது இவராக எம்.ஜி.ஆரை அழைத்து வாய்ப்பு கேட்டிருக்கிறார். வி. என். ஜானகிதான்தொலைபேசியைஎடுத்தாராம்; பிறகு எம்.ஜி.ஆர் பேசிவிட்டு, “அதற்கென்ன மகிழ்ச்சி நீங்களே நடியுங்கள்” என்றுநடிக்கவைத்தாராம்.

ப்ரூக்ளின் மருத்துவமனை சிகிச்சை முடிந்து நாடு திரும்பிவந்தபின் இவர் போய் பார்த்தபோது, “எனக்காக மக்கள்செய்தபோது மூலை முடுக்கெல்லாம் ‘இறைவா உன் மாளிகையில்’ பாடல் தான் ஒலித்திருக்கிறது” என்று இவர்நடித்த காட்சியை நினைவூட்டினாராம் எம்.ஜி.ஆர். சௌக்காரு படத்திற்குப் பிறகு தானாக வாய்ப்பு கேட்டு நடித்த மற்றொரு படம் ஒளிவிளக்கு என்று குறிப்பிட்டி ருக்கிறார் ஜானகி.

தனித்துவமான ஆளுமை

தெலுங்கு, தமிழ், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் 400 படங்களுக்குமேல் நடித்திருப்பவர் என்றுசொல்லப்படுகிறது. வீட்டிலேயே ஆங்கிலம்தான் பேச்சுமொழியாம். அங்கிருந்து புறப்பட்டு வாழ்க்கைச் சூழலில் மாற்றங்கள், இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடித்தபின் கணவரைப் பிரிந்துவிட நேர்ந்து தனிமையிலேயேவாழ்க்கையைக் கழித்தவர்.

ஆனாலும், எப்போதும் தனக்கான முடிவுகளைத் தான் தீர்மானிப்பவராக, புலம்பல் தவிர்த்து வாழ்க்கையைஎதிர்கொண்டவராக இருந்திருக்கிறார் என்பது அவரது நேர்காணல்களில் வெளிப்படுகிறது. முரண்பட்டகருத்துகளும் சில வெளிப்படுத்தியிருக்கிறார்; வயது மட்டுமல்ல காரணம், காலம்காலமாகக்கடத்தப்பட்டு வரும்பழமைச் சிந்தனைகளுக்குள் இருந்து விடுபடுவது எளிதல்ல என்பதாகவும் பார்க்க முடியும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.