சென்னை விரைவு செய்திகள்
16 Feb 2026, 2:37 pm

வேளச்சேரி- பரங்கிமலை ரயில் சேவை மார்ச் 31-க்குள் துவங்கப்படும் தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை, பிப்.16- மார்ச் 31-க்குள் வேளச்சேரி - பரங்கி மலை பறக்கும் ரயில் சேவையும், மே 15க்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையமும் திறக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், புறநகர் ரயில் சேவையை மேம்படுத்தவும் தெற்கு ரயில்வே மிக முக்கியமான இரண்டு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இது குறித்த முக்கிய அறிவிப்புகளைத் தெற்கு ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாஃபர் அலி பேட்டி அளித்துள்ளார். நீண்ட நாட்களாக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளச்சேரி முதல் பரங்கி மலை வரையிலான பறக்கும் ரயில் இணைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தச் சேவை வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு செயல்பாட்டுக்கு வரும்போது, வேளச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் எளிதாகப் புறநகர் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்த முடியும். தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக இந்தப் பேருந்து முனையத்திற்கு அருகிலேயே புதிய ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையம் வரும் மே 15-ஆம் தேதிக்குள் திறந்து வைக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. வேளச்சேரி - பரங்கிமலை இணைப்பு மூலம் ஐ.டி ஊழியர்கள் மற்றும் தினசரி பயணிகள் போக்குவரத்து நெரிசலின்றிப் பயணிக்கலாம். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படுவதன் மூலம், பயணிகள் ரயிலில் இருந்தே நேரடியாகப் பேருந்து முனையத்திற்குச் செல்ல முடியும். இது பயண நேரத்தையும் அலைச்சலையும் பெருமளவு குறைக்கும்.இந்த இரண்டு திட்டங்களும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் சேத்துப்பட்டு பசுமை பூங்காவின் முன்னேற்றப் பணிகள் குறித்து அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார்.

லத்தூர், சித்தாமூர், அச்சிறுப்பாக்கத்தில் ரூ.5 கோடியில் 31 அரசு கட்டிடங்கள் திறப்பு

சென்னை, பிப்.16- செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர், சித்தா மூர் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட 25 ஊராட்சி களில், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் ரூ.4.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 31 புதிய கட்டிடங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், காஞ்சிபுரம் எம்பி செல்வம் மற்றும் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். லத்தூர் ஒன்றியத்தில் 11 கட்டிடங்கள், சித்தாமூரில் 10 கட்டிடங்கள் மற்றும் அச்சிறுப்பாக்கத்தில் 10 கட்டிடங்கள் எனப் புதிய அங்கன்வாடிகள், நியாயவிலைக் கடைகள் மற்றும் பள்ளி வகுப்பறைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன. இந்நிகழ்வில் திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காவலரைத் தாக்கிய பாஜக, தேமுதிக நிர்வாகிகள் கைது

சென்னை, பிப்.16- சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபான பாரை மூடச் சொன்ன தனிப்படை காவலர் சலீமைத் தாக்கிய வழக்கில் பாஜக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சனிக்கிழமை இரவு பணியில் இருந்த காவலர் சலீம், அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்ததையடுத்து நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பாரை மூடுமாறு கூறியுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த குன்றத்தூர் பாஜக நிர்வாகி ஜெகநாதன், தேமுதிக நிர்வாகிகள் மகாதேவன், சரவணன் மற்றும் அவர்களது நண்பர்களான தனசேகரன், ரவி ஆகியோர் காவலருடன் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த காவலர் அளித்த புகாரின் பேரில், கடும் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த காரைப் பறிமுதல் செய்தனர்.

வேலூரில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகை பறிப்பு

வேலூர், பிப்.16- வேலூரில் மொபட்டில் சென்ற இரண்டு பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை (பிப்.14) பள்ளஇடையம்பட்டியைச் சேர்ந்த ரமணி மற்றும் அடுக்கம்பாறையைச் சேர்ந்த ஷாலினி ஆகிய இருவரிடமும் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் மொத்தம் 5.75 சவரன் நகைகளைப் பறித்துச் சென்றனர். இது குறித்து பாகாயம் மற்றும் வேலூர் தாலுகா போலீசார் நடத்திய சிசிடிவி ஆய்வில், இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் என்பது உறுதியானது. இவர்கள் டெல்லியில் இருந்து ரயிலில் இருசக்கர வாகனத்தை வரவழைத்து, எண் பலகை இல்லாமல் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சிசிடிவி தடயங்களின் அடிப்படையில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த அக்குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படையினர் தற்போது தில்லியில் முகாமிட்டுள்ளனர்.

வீடு, மனை கண்காட்சி சென்னையில் பிப்.20 அன்று தொடங்குகிறது

சென்னை, பிப்.16- இங்நதிய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பான கிரெடாய் சென்னை நடத்தும் 18-வது பதிப்பான ‘பேர்ப்ரோ 2026’ வீட்டு, மனை கண்காட்சி, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்ரவரி 20 முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 80-க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்களின் 500-க்கும் மேற்பட்ட திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இது குறித்து கிரெடாய் சென்னைத் தலைவர் முகமது அலி கூறுகையில், இக்கண்காட்சி சொத்து வாங்குவதில் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத் தன்மையையும் வழங்கும் என்றார். சுமார் 50,000 பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் இக்கண்காட்சியில், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கான வணிக இடங்களும் இடம்பெறுகின்றன. சென்னையில் உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் அனைத்து பிரிவுகளிலும் நிலவும் சீரான தேவை காரணமாக, குடியிருப்பு வீடுகளுக்கான சந்தை வலுவாக உள்ளது என்று ‘பேர்ப்ரோ 2026’ ஆலோசகரும், கிரெடாய் சென்னையின் முன்னாள் தலைவருமான எஸ். சிவகுருநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியில் அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள், வீட்டு மனைகள் மற்றும் வணிக இடங்கள் என மிகச்சிறந்த திட்டங்கள் ஒரே இடத்தில் அணிவகுக்கின்றன. இது வீடு வாங்குபவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் மிகுந்த நம்பிக்கையை அளிப்பதோடு, அவர்கள் தெளிவான மற்றும் சரியான முடிவுகளை எடுக்க உதவும் என்று குறிப்பிட்டார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று முதல் தொடர் போராட்டம்

சிதம்பரம், பிப். 16- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆசிரி யர், ஊழியர் மற்றும் ஓய்வூ தியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு, நிலு வையில் உள்ள கோரிக்கை களை வலியுறுத்தி செவ்வா யன்று (பிப்.17) முதல் மீண்டும் தொடர் போராட்டம் நடத்தவுள்ளதாக அறி வித்துள்ளது. கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சி.சுப்பிரமணியன் வெளி யிட்ட அறிக்கையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள், பணப்பயன்கள் மற்றும் ஓய்வூதியத் தொகைகளை வழங்க கோரி கடந்த ஜனவரியில் உண்ணாநிலை மற்றும் உள்ளிருப்புப் போராட் டங்கள் நடத்தப்பட்டது. இதன் விளைவாக ஜன. 30ஆம் தேதி முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடை பெற்றது. தமிழக தொழில் நுட்ப இயக்கக இயக்குநர், ச.விசாகன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், கோரிக்கைகள் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை தேவைப்படு வதாக தெரிவிக்கப்பட்ட தால் போராட்டம் பிப்.8-ந் தேதி வரை ஒத்திவைக்கப் பட்டது.

அரசு கொடுத்த வனப்பகுதி நிலத்தில் வீடுகளை கட்டித்தர வேண்டும்

இருளர் மக்கள் கோரிக்கை கிருஷ்ணகிரி,பிப்.16 - சூளகிரி வட்டம், வேப்பனப்பள்ளி அருகே சாணமாவு வனப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு பீர்ஜேபள்ளி கிராமத்தை ஒட்டி 26 இருளர் பழங்குடி குடும்பங்களுக்கு 1.5 சென்ட் வீதம் அரசு இலவச நிலமும் பட்டாவும் தமிழக அரசால் வழங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக அந்த இடத்தில் இருளர் மக்கள் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி மலைகள் சூழ்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதால் பெரும்பாலான நாட்கள் யானைகள் கூட்டமும், சிறுத்தைகளும் அடிக்கடி வந்து செல்கின்றன.26 குடும்பங்களில் 35.க்கும் மேற்பட்ட குழந்தைகளோடு ,சாலை, பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வசிப்பதால் இவர்களுக்கு வனவிலங்குகளால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கொடுத்த நிலத்தில் குடிசையில் வாழ்ந்து வரும் இருளர் மக்களுக்கு சாலை,அடிப்படை வசதிகளோடு கூடிய தொகுப்பு வீடுகளாக கட்டித் தரவேண்டும் என்று அங்குள்ள இருளர் மக்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்கம் விலை குறைந்தது

சென்னை, பிப்.16- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை திங்களன்று சவரனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,15,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் 14,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.265-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.