சோமாலியாவில் குழந்தைகளின் பசி நெருக்கடி தீவிரம்: யுனிசெஃப் எச்சரிக்கை
22 Aug 2026, 7:40 pm

சர்வதேச உதவித் தொகைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவில் குழந்தைகள் மத்தியில் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாடு தீவிரமடைந்து வருவதாக ஐ.நா.வின் யுனிசெஃப் எச்சரித்துள்ளது.

2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உடல்நலச் சிக்கல்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு சுமார் 19 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச உதவித் தொகை வெட்டால், சோமாலியாவில் 200-க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் ஊட்டச்சத்து மையங்கள் மூடப்பட்டுள்ளன. கடுமையான நிதி நெருக்கடி நீடித்தால், நாடு முழுவதும் மேலும் 618 சுகாதார மையங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

கடும் வறட்சியால் கால்நடைகள் உயிரிழந்து, பயிர்கள் அழிந்து, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். ஏற்கெனவே சுமார் 33 லட்சம் சோமாலியர்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், நாட்டின் 1.9 கோடி மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், சோமாலியாவின் சில பகுதிகளில் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சமாளிப்பதற்கான நிதி இந்த ஆண்டு 80 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

இதனால், ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 10 லட்சம் குழந்தைகள், இளம்பெண்கள் மற்றும் பெண்கள், அத்தியாவசிய ஊட்டச்சத்து சேவைகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.