குடிநீர் விநியோகம் சீராகாததால் சோலூர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை!
1 hour before
<p>உதகை, அக். 5– சீரான குடிநீர் விநியோகம் வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சோலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தூபகண்டி மற்றும் கொட்லைன் பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படவில்லை என்றும், கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், விநியோகிக்கப்பட்ட தண்ணீரும் மிகவும் கலங்கலாக இருந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><p>பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான பெண்கள், காலிக்குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வராததால், அலுவலகத்திற்குள் சென்று தரையில் அமர்ந்து சுமார் 3 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>பின்னர், அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால், அடுத்தகட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.</p>
