மேடைத் தமிழ் தொலைக்காட்சித் தமிழாக மாறிய போதும் மாறாத அனுபவம் — ‘பாப்பையாவின் தமிழ்’ - சு.வெங்கடேசன், எம்.பி
26 Sept 2026, 8:19 pm

மேடைத் தமிழ் தொலைக்காட்சித் தமிழாக மாறிய போதும் மாறாத அனுபவம் — ‘பாப்பையாவின் தமிழ்’ - சு.வெங்கடேசன், எம்.பி

தொலைக்காட்சி ஊடகம் 1990-களின் தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. தாராளமயப் பாதையில் இந்தியா அடியெடுத்துவைத்த அந்த மாற்றம், பண்பாட்டுத் துறையிலும் முக்கியமான முரண்களை உருவாக்கியது. அத்தகைய காலகட்டத்தில்தான் நாங்கள் கல்லூரியை முடித்து வெளியே வந்தோம். மதுரையில் அப்போது ஆளுமைமிக்க பேராசிரியர்கள் பலர் — ஒருபுறம் தமிழறிஞர் தமிழண்ணல்; இன்னொருபுறம் ஐயா தமிழ்க்குடிமகன்; மற்றொருபுறம் ஐயா சாலமன் பாப்பையா. ஒவ்வொருவருக்கும் தனித்த பாதையும், கட்சி சாராத தனித்த அரசியல் நிலைப்பாடும், மக்களை அணுகும் தனித்த விதமும், இலக்கியக் கண்ணோட்டமும் இருந்தன.

நாங்கள் பேச்சாளர்களாக வரத் தொடங்கியபோது எங்கள்முன் இருந்த கேள்வி: ‘நீ தமிழண்ணல் திசையா? சாலமன் பாப்பையா திசையா?’ என்பதே. இந்தக் கேள்விக்குள் தடுமாறிய நாங்கள், இருவரிடமும் மாணவர்களாக இருக்கவே விரும்பினோம்; இருவரும் வெவ்வேறு வகையில் எங்களை ஈர்த்தார்கள். ஒருபுறம் சமரசமற்ற அறிவுநுட்பமும் ஆழமான புலமையும்; மறுபுறம் மக்கள் மனதை வென்றெடுக்கும் வெகுமக்கள் மொழி — இவ்விரண்டும் முக்கியம் என்பதை எங்கள் ஆசிரியர்கள் வழியே உணர்ந்த காலம் அது.

மேடையிலிருந்து வீட்டுக்குள்

1980-களின் இறுதியிலிருந்து 1995 வரை, சுமார் எட்டு ஆண்டுகள் பாப்பையா அவர்களின் பட்டிமன்றங்களில் பேசியவர்களில் நானும் ஒருவன். திருப்பரங்குன்றத்தில் அப்போது தொடங்கியிருந்த கலை இரவு நிகழ்ச்சிகளில் அவரது உரையில் இருந்த ஆவேசம் மிக வலிமையானது. அது காட்சி ஊடகத்துக்குள் நுழைந்தபோது ஒரு மாற்றத்தைப் பெற்றது — ‘குளோஸ்-அப்’ (close-up) காட்சியில் ஒருவருக்கு ஒருவர் பேசும் மனிதராக மாறியபோது, அவரது மொத்த வடிவமும் மாறியது.

பல்லாயிரம் வெகுமக்களை நேரில் பார்த்துப் பேசியவர், தன்முன் பார்வையாளரே இல்லாத தொலைக்காட்சி அரங்கிலும் வெற்றிகரமாகப் பேசக்கூடியவராகத் தன்னை மாற்றிக்கொண்டார். மேடையில் ஆவேசமாகப் பேசியவர், தொலைக்காட்சி வழியே வீட்டுக்குள் சென்று குடும்பங்களோடு — குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் — உரையாடும் மனிதராக மாறினார். மதங்களின் திருவிழாக்களுக்குள் மதங்களைக் கடந்த தமிழைக் கொண்டு சென்றார். பல்லாயிரம் பேரின் மனதை வென்ற அதே தமிழ், தொலைக்காட்சித் திரையிலும் அதே வெப்பத்துடன் மக்களைச் சென்றடைந்தது.

கொள்கையை வாழ்க்கையாக்கியவர்

அது வெறும் மேடைப் பேச்சாக இல்லை; அவர் வாழ்க்கை முழுவதையும் அந்தச் சிந்தனையோடு வாழ்ந்தார். மதங்களின் தடைகளையும் அடையாளங்களையும் கடந்த மனிதராக இருந்தார். தன் இரு குழந்தைகளுக்கும் தியாகமூர்த்தி, விமலா என்ற சமயச்சார்பற்ற பெயர்களைச் சூட்டினார். அவரது இறப்பின்போது உடலில் சமய நூல்கள் இல்லை; திருக்குறள்தான் இருந்தது. இறுதிச் சடங்கும் எந்த மதச் சடங்குமின்றி இயற்கையான முறையில் நடந்தது. கொள்கையை வாழ்க்கையாக மாற்றிச் சமூகத்துக்கும் வழங்கிய தமிழறிஞர் சாலமன் பாப்பையா என்றும் போற்றுதற்குரியவர்.

அவர் எங்களைத் தட்டிக் கொடுத்திருக்கிறார்; கோபப்படுத்தியிருக்கிறார்; சமாதானப்படுத்தியிருக்கிறார். ‘ஏன் இவ்வளவு ஆவேசமாகப் பேசுகிறாய்?’ என்று மேடையிலேயே என்னைத் திட்டியிருக்கிறார். சமூகம் ஒரு முக்கியமான முரணைச் சந்தித்த காலத்தில், பொறுப்புள்ள தோழனாக எங்களை வழிநடத்தினார்.

அவர் வாழ்க்கையில் பொதுவுடைமைத் தலைவர்களின், கருத்துகளின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. ஜீவாவையும், கே.டி.கே. தங்கமணியையும், மதுரையில் பொதுவுடைமை இயக்கத்தைக் கட்டியெழுப்பிய தலைமுறையையும் பற்றி அவர் பேசக் கேட்டுச் சிலிர்த்தவர்கள் நாங்கள். ஜீவாவின் தமிழையும், கே.டி.கே.வின் போர்க்குணத்தையும், அடித்தட்டு மக்களின் குரலை மதுரையில் பொதுவுடைமை இயக்கம் விடாது ஒலிக்கச் செய்ததையும் அவரது தமிழில் கேட்பது அரிய வாய்ப்பு. ஒரு மாற்று வேட்டிகூட இல்லாமல் அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்த அவர், அக்கல்லூரிக்குப் பிரச்சினை வந்தபோது ‘நான் ஒதுங்கி நிற்கும் பேராசிரியன் அல்ல; ஒரு போராளி’ என்று எல்லாவற்றையும் திரட்டி அதை மீட்க முன்நின்றார். இந்தப் போராட்ட உணர்வு அவர் வாழ்நாள் முழுதும் தொடர்ந்தது. அந்தப் போராளித்தன்மையையும் தமிழையும் ஒருசேரக் கற்றுத்தந்த ஆசிரியர் அவர்.

அடித்தட்டு மக்களின் பட்டா

கடைசி ஓராண்டில் அவரை மூன்று–நான்கு முறை வீட்டில் சந்தித்தேன். அப்போதெல்லாம் அவர் வலியுறுத்திய முக்கிய விஷயம், அவர் பகுதிக்கு அருகில் பல ஆண்டுகளாகப் பட்டா இன்றி வாழ்ந்துவந்த சுமார் 30–50 அடித்தட்டுக் குடும்பங்களின் பிரச்சினை. ‘அவர்கள் 30, 40 ஆண்டுகளாக அங்கே இருக்கிறார்கள். பலரிடம் சொல்லிவிட்டேன்; யாரும் செய்யவில்லை. உன்னால்தான் முடியும். எப்படியாவது அவர்களுக்குப் பட்டா வாங்கிக் கொடுக்க வேண்டும்’ என்று உரிமையோடு அப்பணியை என்னிடம் ஒப்படைத்தார்.

அதற்குமுன், தன் புறநானூறு நூல் வெளியீட்டு நிகழ்வுக்குச் சென்னைக்கு என்னை அழைத்தார். பார்வையாளனாகவே வருவேன் என்றேன்; ‘இல்லை, நீ வந்து பேச வேண்டும்’ என்றார். அந்நிகழ்வில் அவரை முன்வைத்தே நான் சொன்னேன்: ‘எத்தனை முறை எங்கள் பேப்பர்களைத் திருத்தி மார்க் போட்டிருக்கிறீர்கள்? இன்று எங்களிடம் மாட்டிக்கொண்டீர்களா? எல்லாத் தேரும் வடத்தில் இழுபட்டுத்தான் ஆக வேண்டும். வாங்க!’ தோள் அளவு வளர்ந்த பிள்ளைகளைத் தோளில் தட்டாமலே சொல்லிக்கொடுக்கும் மொழியையும் அவரிடம் கற்றேன்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஏறக்குறைய 37 பேருக்குப் பட்டா கிடைத்தது; அதை அவரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தேன். ஆனால் இன்னும் 17–20 பேருக்குக் கிடைக்கவில்லை. அதைச் சொன்னபோது, ‘நீ வாங்கிக் கொடுத்தது நல்லது; ஆனால் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். சிலருக்கு மட்டும் கிடைத்து இன்னொரு பகுதியினருக்குக் கிடைக்காமல் போனால் அது சரியல்ல. ஒரு வீட்டைக்கூட விட்டுவிடக் கூடாது’ என்றார். அந்த மக்களின் முழு நலனே அவர் கவலையாக இருந்தது. அவர் ஒப்படைத்த அப்பணியைத் தொடர்ந்து செய்துமுடிக்கும் முயற்சியை மேற்கொள்வேன்.

அரசரடி ரயில்வே மைதானம்

மற்றொரு முக்கிய விஷயம் — அரசரடி ரயில்வே மைதானம். அது மக்களுக்கும் மாநகராட்சிக்கும் சொந்தமானது; ஆனால் ரயில்வே நிர்வாகம் அதைத் தனதாக்கிக்கொண்டு, விளையாட்டு வீரர்களுக்கும் நடைப்பயிற்சி செய்வோருக்கும் கட்டணம் விதித்தது. சுமார் 100 கோடி ரூபாய்க்கு அதை விற்கும் முயற்சி நடந்தபோது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நாம் தலையிட்டுத் தடுக்கப் போராடினோம். அந்த இயக்கத்தின் கையெழுத்துப் பிரச்சாரத்தைத் தொடங்கிவைக்கக் கேட்டபோது, ‘அது மக்கள் சொத்து; நான் வந்து நிற்கிறேன்’ என்று முதலில் கையெழுத்திட்டு, முதல் பேட்டியையும் அளித்தார். ‘இது யாருடைய சொத்து? யார் யாருடைய சொத்தை விற்கப் போகிறார்கள்?’ எனக் கேள்வி எழுப்பினார். புகழின் உச்சியிலும், ‘எல்லோருக்கும் நல்லவராக’ அல்ல, ‘நல்லவர்களுக்குத்தான் நல்லவராக இருக்க வேண்டும்’ என்ற நிலைப்பாட்டில் நின்று குரல் கொடுத்தவர் அவர்.

செந்தமிழ்க் கல்லூரியும் நினைவுத் தெருவும்

மதுரையில் நூற்றாண்டுகளாக அறிவு மரபைப் பேணிப் பாதுகாத்துவரும் அமைப்பு செந்தமிழ்க் கல்லூரி — மதுரையில் வாழ்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், தமிழறிஞர்களின் பங்களிப்புகளைப் பதிவுசெய்து போற்றிவருகிறது. பாப்பையாவுக்கான புகழஞ்சலிக் கூட்டத்தை நாங்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்தபோதே, ‘முதல் புகழஞ்சலிக் கூட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்’ என்று அக்கல்லூரியிலிருந்து அழைப்பு வந்தது.

செந்தமிழ்க் கல்லூரியின் பொன்விழா மலரையும், 1973-ஆம் ஆண்டு மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு மலரையும் பார்த்தால் ஒரு முக்கிய உண்மை புலப்படும். அந்தக் குடமுழுக்கு மலரில் பரிதிமாற் கலைஞர், கார்மேகக் கோனார், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட மதுரையின் பேரறிஞர்களைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. மதுரையின் அறிவு மரபு எந்த மதத்துக்கும் சொந்தமானதல்ல — அவர்கள் இந்துக்கள், சைவர்கள், கிறிஸ்தவர்கள் என்பதைக் கடந்து, தமிழர்கள், தமிழறிஞர்கள் என்ற அடிப்படையிலேயே போற்றப்பட்டனர்.

அம்மரபின் தொடர்ச்சியாகச் சாலமன் பாப்பையாவுக்கான முதல் புகழஞ்சலியை நடத்திய செந்தமிழ்க் கல்லூரிக்கு என் வணக்கங்கள். மேடையும் திரையும் மாறினாலும் மாறாத ‘பாப்பையாவின் தமிழ்’ எங்கள் தலைமுறைக்கு அளித்த அனுபவம் என்றும் நிலைத்திருக்கும். அந்நிகழ்வில், ஐயா வசித்த தெருவுக்கு ‘பேராசிரியர் சாலமன் பாப்பையா தெரு’ எனப் பெயரிட வேண்டும் என மதுரை மாநகராட்சி மேயர் டி.நாகராஜன் தெரிவித்தார். வருகிற மாநகராட்சிக் கூட்டத்தில் அதற்கான தீர்மானத்தை மேயர் முன்மொழிந்து, அரசும் அங்கீகரித்து அத்தெருவுக்கு அப்பெயரைச் சூட்ட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

(இது, பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கான புகழஞ்சலிக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் பகுதிகள்.)