சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.9.54 லட்சம் மோசடி
20 Feb 2026, 2:39 pm
<p><strong>சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.9.54 லட்சம் மோசடி</strong></p>
<p>தஞ்சாவூர், பிப்.20- ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரிடம் இருந்து ரூ.9.54 லட்சம் பணத்தை மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து இணையதளக் குற்றப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த சலீம் முகமது(26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பி.ஈ., முடித்து, சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனிற்கு டெலிகிராம் செயலி வாயிலாக ஒரு லிங்க் வந்துள்ளது. பின்னர் சலீம் முகமதுவை தொடர்பு கொண்டு பேசிய பெண் ஒருவர், தன்னை ராஷ்மிகா சர்மா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார். பின்னர், இதற்காக பதிவு செய்து கொள்ள டெலிகிராமில் ஒரு போலியான லிங்க்கையும் அனுப்பி உள்ளார். இதையடுத்து சலீம் முகமது கடந்த 15.11.2025 முதல் 20.11.2025 வரை 31 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.9.63 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதில் ஒருமுறை மட்டும் லாபம் என்று சலீம்முகமதுவிற்கு ரூ.8,860 மட்டும் அனுப்பி வைத்துள்ளனர். பல நாட்கள் கடந்த நிலையில் எவ்வித லாபத் தொகையும் வரவில்லை. இதுகுறித்து, சலீம் முகமது அந்த டெலிகிராம் லிங்க்கில் தொடர்பு கொள்ள முயன்று, எவ்வித பதிலும் கிடைக்காததால், ரூ.9.54 லட்சத்தை தன்னிடம் இருந்து மோசடி செய்து விட்டனர் என்பதை உணர்ந்துள்ளார். இதுகுறித்து தஞ்சை மாவட்ட இணையதளக் குற்றப்பிரிவில் அவர் புகார் செய்தார். இதன் பேரில், ஆய்வாளர் அறிவழகன் மற்றும் இணையதளக் குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சலீம் முகமது பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த வங்கிகளுக்கு தஞ்சாவூர் இணையதளக் குற்றப்பிரிவினர், மின்னஞ்சல் அனுப்பி விசாரித்ததில், 11 வங்கிகளில் இருந்து சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இணையதளக் குற்றப்பிரிபினர் தரப்பில் கூறுகையில், “நிதி மோசடி, போலி செயலிகள், சமூக வலைதள மோசடிகள், ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்ய சொல்வது போன்ற குற்றங்களைத் தடுக்க, 1930 என்ற உதவி எண்ணுடன், cybercrime.gov.in இணையதளத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். முக்கியமாக, அறியாத அழைப்புகளை ஏற்காமல் இருப்பது, தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வது கூடாது. பொது வைஃபையைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். போலி இணைப்புகளை கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும். மேலும் வங்கியிலிருந்து பேசுகிறோம் ஓடிபி வந்து இருக்கும் என்று வரும் அழைப்புகளை நம்பி ஏமாறக்கூடாது’’ என்றும் தெரிவித்தனர்.</p>
