தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மூடநம்பிக்கைகளை உடைத்து அறிவியலைப் பரப்பும் விழிப்புணர்வு நாவல்! - எம்.ஜே.பிரபாகர்

12 Jul 2026, 9:57 pm
மூடநம்பிக்கைகளை உடைத்து  அறிவியலைப் பரப்பும் விழிப்புணர்வு நாவல்!  - எம்.ஜே.பிரபாகர்
<p><strong>மூடநம்பிக்கைகளை உடைத்து அறிவியலைப் பரப்பும் விழிப்புணர்வு நாவல்! - எம்.ஜே.பிரபாகர்</strong></p><p>பெண் குழந்தைகள் சிறுமியிலிருந்து இளம் பெண்களாக மாறும் பருவமடைதல் (Puberty) காலகட்டம், அவர்களது உடல் மற்றும் மன வளர்ச்சியில் மிக முக்கியமானது. ஆனால், இன்றைய நவீன யுகத்திலும் மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகளும், கட்டுப்பாடுகளும், போதிய சுகாதார வசதியின்மைகளும் பெண் குழந்தைகளைப் பெருமளவில் பாதித்து வருகின்றன. “மாதவிடாய் என்பது தீட்டல்ல; அதுவோர் இயற்கை நிகழ்வு” என்பதைப் பெற்றோர்களுக்கும் சமூகத்திற்கும் உரக்க உணர்த்துகிறது எழுத்தாளர் மோனிஷா எழுதிய ‘சிவப்புக் கறை’ என்னும் சிறு நாவல். பள்ளிக்குக் கிளம்பும்போது தன் வெள்ளை உடையில் விழுந்த ‘சிவப்புக் கறையைக்’ கண்டு அதிர்ச்சியடையும் ஒரு சிறுமியின் கதையோடு இந்நூல் தொடங்குகிறது. “தீட்டுப்பட்டுவிட்டது, இனி பள்ளிக்குச் செல்லக் கூடாது” என்று கட்டளையிடும் தாய்க்கும், “இன்றைக்குப் பள்ளியில் நடனப் போட்டி இருக்கிறது, நான் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும்” என்று அடம்பிடிக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இக்கதை. தகவல் அறிந்து வீட்டிற்கு வரும் பள்ளி ஆசிரியர், மாதவிடாய் காலங்களில் சமைக்கக் கூடாது, வெளியே போகக் கூடாது என விதிக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தும் அறிவியலுக்கு முரணானவை என்பதை உரிய உதாரணங்களுடன் தாய்க்கு விளக்குகிறார். இருப்பினும், தாயின் பிடிவாதத்தை மீறி, அக்காவின் உதவியுடன் பெற்றோருக்குத் தெரியாமல் பள்ளிக்குச் சென்று நடனப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசை வெல்கிறாள் அச்சிறுமி. எதிர்பாராத விதமாக அங்கு வரும் பெற்றோர்கள், தன் மகளின் வெற்றியைக் கண்டு வியப்பதோடு, தாங்கள் அறிவியல் பூர்வமாகச் சிந்திக்காமல் மூடநம்பிக்கையின் பக்கம் நின்றது தவறு என்பதையும் உணர்ந்து கொள்கிறார்கள். தாய்-மகள் உரையாடல் வடிவில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூலை மிக அற்புதமாக வடித்திருக்கிறார் நூலாசிரியர் மோனிஷா. பள்ளிகளில் தூய்மையான கழிப்பறைகள், நேப்கின்களை அப்புறப்படுத்தும் வசதிகள் (Incinerators) இல்லாததால் மாணவிகள் சந்திக்கும் நடைமுறைச் சவால்களையும், பொது இடங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் இக்கதை விவாதிக்கிறது. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மாதவிடாய் சார்ந்த தீட்டு என்னும் கற்பிதங்களை உடைத்து, அறிவியல் மனப்பான்மையை வளர்க்க உதவும் இப்புத்தகம் அனைத்துப் பள்ளி நூலகங்களிலும், இல்லங்களிலும் கண்டிப்பாக இடம்பெற வேண்டிய ஒரு மிகச்சிறந்த விழிப்புணர்வுப் படைப்பாகும். சிவப்புக் கறை ஆசிரியர்: மோனிஷா வெளியீடு: விங்ஸ் பதிப்பகம், சென்னை. விலை: ₹75/- தொடர்புக்கு: 9600398660</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.