அஞ்சலி இசைக்கலைஞர் எஸ்.ஜானகி காலத்தை வென்றவள் நீ! - எஸ்.வி.வேணுகோபாலன்
13 Jul 2026, 9:49 pm

அஞ்சலி இசைக்கலைஞர் எஸ்.ஜானகி காலத்தை வென்றவள் நீ! - எஸ்.வி.வேணுகோபாலன்

மறைந்த இசைக்குயில் எஸ். ஜானகியின் பேத்தி அப்சரா விதுலா, தன்னுடைய பாட்டியின் ஈமச் சடங்குகளைச் செய்ததன் புகைப்படப் பதிவுகள் நாளேடுகளில் காண்கையில், இளவயதிலிருந்தே சுதந்திரமாகவும், சமூக விதிகளைத் தகர்க்கத் துடிப்பவராகவும், துணிவு மிக்கவராகவும் திகழ்ந்த மகத்தான அந்தப் பாடகி யின் வாழ்க்கை முழுமை பெற்றிருப்பதாக உணர வைக்கிறது. 17 மொழிகளில் 50,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள அவரது மறைவுக்கு இந்தியா முழுவதுமே துயருற்று மரியாதை செலுத்தி வருகிறது.

தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், இந்தி, ஒடியா, வங்காளி என எந்த மொழியில் அவர் பாடவில்லை! எந்த மாநிலத்திற்குத்தான் அவர் சொந்தமில்லை! முழுமையாகப் பள்ளிக் கல்வி பெறாமல், முறைப்படி சங்கீதம் கற்காமல், அசாத்திய இசை ஞானத்தை இயல்பாகவே பெற்றிருந்த அவரது குரலினிமை, சொற்கள் கடத்தும் உணர்ச்சிகளை அப்படியே பாட்டில் கொண்டு வரும் ஆற்றல், திருத்த மான உச்சரிப்பு எல்லாமே எண்ணற்ற ரசிகர்களை உள்ளார்ந்து ரசிக்கவும், உருகவும் வைத்திருக்கிறது.

குருநாதரின் ஆசியும் சிங்காரவேலனும் ஒரு திரைப்பாடலை ஒரு முறை கேட்டாலே அதை அப்படியே சுருதி பிசகாமல், சொற்கள் நழுவாமல், லயம் பிறழாமல், தாளம் தப்பாமல் பாடும் திறமையை ஐந்து வயதிலேயே பெற்றிருந்ததாக ஜானகி அவர்களே பல மேடைகளில் சொல்லி யிருக்கிறார். தனக்கு இசை கற்றுத் தருமாறு தந்தை ராஜமுந்திரி நகரில் கொண்டு நிறுத்திய நாதஸ்வர வித்வான் பைடி சாமி, இவரது பாடலைக் கேட்ட மாத்திரத்தில் அசந்துபோய் மெச்சினாராம். இசை பயில வருவோருக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு கற்பிக்கும் தியாகய்யரின் புகழ்பெற்ற ‘நகுமோமு’ கீர்த்தனையை உடனே சொல்லித்தந்தார். அடுத்த ஓராண்டில் அந்தக் குருநாதர் மறைந்ததால் அதி கம் கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாமல் போனது.

ஆனால், பின்னாளில் எஸ். எம். சுப்பய்யா நாயுடு இசையில், கு. மா. பாலசுப்பிரமணியத்தின் ‘சிங்கார வேலனே வா’ என்ற அசாத்திய பாடலை, புகழ்பெற்ற நாதசுரக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலத்தின் வாசிப்புக்கு ஏற்பத் தன்னால் பாட முடிந்தது குருநாதர் பைடி சாமிக்குச் சேர வேண்டிய புகழ் என்று ஜானகி நெகிழ்ந்துள்ளார். பாடல்களும் காதல் கதையும் பணியுமாம் என்றும் பெருமை என்பதன் இலக்க ணம் அவர். தனது பாடல்களுக்கான புகழைக் கவிஞர்கள், இசையமைப்பாளர்கள், இசைக்கரு விகளை இசைத்த கலைஞர்கள், ரசிகர்களுக்குப் பிரித்தளித்துவிட்டு ஒரு குழந்தைமை நிறைந்த புன்னகை பூப்பார்.

தனது இறுதி காலம் வரை குறும்புப் பேச்சையும், முக மலர்ச்சியையும், உள்ளம் நிறைந்த சிரிப்பையும் தக்க வைத்துக் கொண்டிருந்தார். ‘பாசம்’ திரைப்படத்தின் ‘ஜல் ஜல் ஜல்’ எனும் சலங்கை ஒலிப் பாடல் அவரது சிறப்பான பாடல் களில் ஒன்று. தான் காதலில் விழுந்து தான் விரும்பிய ராம்பிரசாத்தைக் கணவராக அடைந்த ரசமான செய்தியை, கண்ணதாசனின் இந்தப் பாட லை இசைத்தபடி பாடகர் மனோவிடம் அவர் பகிர்ந்து கொண்டார். சரணத்தில் வரும் “அவன்தான் திருடன் என்றிருந்தேன், அவனை நானும் திருடிவிட்டேன்” என்ற வரியை சுட்டிக்காட்டி, “முழுதாய் அவனைத் திருடி விட்டேன்” என்று தனது காதல் கதையை ரசித்துப் பேசுவார்.

‘அவர்கள்’ படத்தின் ‘காற்றுக்கென்ன வேலி’ பாடலில் வரும் “மங்கை உள்ளம் பொங்கும் போது விலங்குகள் ஏது” என்ற கண்ணதாசனின் வரிகளைக் கொண்டாடுவார். ‘அவளுக்கென்று ஒரு மனம்’ படத்தில் இடம் பெற்ற ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ பாடலில், ஒருதலைக் காதல் என்று அறியாமல் பரவசப்படும் பெண் மனத்தை ஜானகி தனது அசாத்திய குரல் வளத்தில் சித்திரமாகத் தீட்டியிருப்பார். திரையுலக ஜாம்பவான்களுடன் ஜானகி பி. பி. ஸ்ரீனிவாஸ் - ஜானகி இணைந்து பாடிய ‘பொன் என்பேன் சிறு பூ என்பேன்’ ஓர் இசைச் சிற்பம். டி. எம். சவுந்திரராஜனுடன் இணைந்து அவர் பாடிய பல பாடல்கள் வானொலியில் திரும்பத் திரும்ப விரும்பிக் கேட்கக் கூடியவை.

மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதனின் கற்பனைத் திறன் மிகுந்த மெட்டில் அமைந்த ‘காதலின் பொன் வீதியில்’ பாடல் ஜானகியின் காதல் குரலுக்குச் சான்று. இசைஞானி இளையராஜாவின் முதல் படத்தின் முதல் பாடல் பதிவே ஜானகி பாடிய ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ தான். அந்தப் படத்தின் மூன்று பாடல்களுமே ஜானகிக்குப் பெரும் புகழ் சேர்த்தவை. அடுத்தடுத்து ராஜாவின் இசையில் எண்ணற்ற இனிய பாடல்களைப் பாடினார். ‘முதல் மரியாதை’ திரைப்படத்தின் ‘ராசாவே உன்னை நம்பி’ பாடல் ஓர் இளம்பெண்ணின் உள்ளத் துடிப்பை, சொல்ல முடியாத உணர்ச்சி களின் கொந்தளிப்பை அபாரமாக வெளிப்படுத்தி யிருக்கும். ‘

மௌன ராகம்’ படத்தின் ‘சின்னச் சின்ன வண்ணக் குயில்’, ‘ஜானி’ படத்தின் ‘காற்றில் எந்தன் கீதம்’ ஆகிய பாடல்கள் இன்றும் ரசிகர்களின் நெஞ்சில் வாழ்கின்றன. சக கலைஞர்களைக் கொண்டாடிய பண்பு ஒரு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் திறமையைக் கண்டறிந்து, “நீ திறமை வளர்த்துக் கொண்டு திரையுலகில் வந்தால் பெரிய உயரத்தை எட்டுவாய்” என்று பாராட்டியவர் ஜானகி. பிற்காலத்தில் இருவரும் சேர்ந்து பாடிய ‘பவுர்ணமி நிலவில் பனி விழும் இரவில்’ முதல் ‘இது மௌனமான நேரம்’, மற்றும் வித்யாசாகர் இசையில் ‘மலரே மௌனமா’ வரை ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றும் இனிப்ப வை. ‘அடிமைப் பெண்’ படத்தில் பி. சுசீலாவோடு இணைந்து பாடிய ‘காலத்தை வென்றவன் நீ’ பாடலின் நிறைவில் வரும் ஹம்மிங் ஒரு சர்க்கஸ் வித்தை போல அமைந்து பேரருவி போல் பொழி ந்து ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்தில் நிறுத்தியது.

“சக பாடகியர் எல்லோரும் என் தோழியர், எங்களுக்குள் எப்போதும் சினேகம் தான்” என்று நட்பின் அருமையை ஜானகி போற்றினார். ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் நாதசுர இசைக்கு இணையாகப் பாடத் தன்னைப் பரிந்துரைத்தவர் பி. லீலா என்பதை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்வார். ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் இளம் பாடகி அல்கா அஜித் ‘நாதம் என் ஜீவனே’ பாடலை அழகாகப் பாடியபோது, சித்ரா சில திருத்தங்கள் சொல்ல, குறுக்கிட்டு “என்னை விட நல்லா பாடிட்டே” என்று மெச்சியவர் ஜானகி.

பாடல் பதிவில் ஒருபோதும் காகிதத்தில் எழுதி வைத்த பாடலைப் பார்த்துப் பாடுவதில்லை, மனத்தில் வாங்கிக் கொண்டு ஸ்வரங்கள் உள்பட அப்படியே பாடும் திறனைப் பெற்றிருந்தவர். உடல் நலம் நலிவுற்றிருந்த நாள்களிலும் ஒரே டேக்கில் பாடலைச் சிறப்பாகப் பாடிவிட்டு வந்த சுவாரசி யமான அனுபவங்கள் கொண்டவர். எளிமையின் கம்பீரம் அவரது வாழ்க்கை; இசையின் கொண்டா ட்டம் அவரது புன்னகை. காற்றில் கலந்துவிட்ட அவர் என்றும் இசைக் காற்றாகவே உலவிக் கொண்டிருப்பார்..