2030 வரை பருத்தி இறக்குமதி வரி விலக்கை நீட்டிக்க ஒன்றிய அரசுக்கு ‘சைமா’ கோரிக்கை!
31 Oct 2026, 11:30 pm

2030 வரை பருத்தி இறக்குமதி வரி விலக்கை நீட்டிக்க ஒன்றிய அரசுக்கு ‘சைமா’ கோரிக்கை!

கோயம்புத்தூர், அக். 31 -பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி விலக்கை, டிசம்பர் 31 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், ஜவுளித்துறையின் நீடித்த வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை பாதுகாக்க இந்த வரி விலக்கை 2030-ஆம் ஆண்டு வரை முழுமையாக நீட்டிக்க வேண்டும் என்று ‘சைமா’ எனப்படும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (SIMA) வேண்டுகோள் விடுத்துள்ளது.

மூலப்பொருள் பற்றாக்குறையால் ஜவுளித்துறை கடும் பாதிப்பு

இதுதொடர்பாக ‘சைமா’ தலைவர் துரை பழனிசாமி சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவில் கிராமப்புற உழைப்பாளிகள், குறிப்பாக 50 சதவீத பெண்கள் உள்பட சுமார் 4.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பருத்தி சார்ந்த ஜவுளித்துறை, மூலப்பொருள் பற்றாக்குறையால் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. 2013-14 பருத்தி பருவத்தில் 398 லட்சம் பேல்களாக இருந்த நாட்டின் பருத்தி உற்பத்தி, தற்போதைய 2026-27 பருவத்தில் 280 லட்சம் பேல்களாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உள்நாட்டு ஆலைகளின் தேவையோ 360 லட்சம் பேல்களாக உள்ளதால், சுமார் 100 லட்சம்பேல்கள் அளவுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தரமான பருத்தி தடையின்றி கிடைப்பது அவசியம்!

இச்சூழலில், ஜவுளித் தொழில்துறையின் கோரிக்கையை ஏற்று, அக்டோபர் 31 வரை அமலில் இருந்த 11 சதவீத பருத்தி இறக்குமதி வரி விலக்கை மேலும் இரு மாதங்களுக்கு, அதாவது டிசம்பர் 31 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2025-26 பருவத்தில் வழங்கப்பட்ட தற்காலிக வரி விலக்கு காரணமாக 72 லட்சம் பேல்கள் பருத்தி இறக்குமதி செய்யப்பட்டு, ஆலைகளில் வேலை இழப்பு தவிர்க்கப்பட்டதுடன் ஏற்றுமதி ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டன. நூல் தயாரிப்பு செலவில் பருத்தியின் பங்கு70 சதவீதமாகவும், ஆடைகளில் 35 சதவீதமாகவும் உள்ள நிலையில், சர்வதேச சந்தைக்கு நிகரான விலையில் தரமான பருத்தி தடையின்றி கிடைப்பது மிகவும் அவசியமாகும்.இந்தியாவில் ஹெக்டேருக்கு பருத்தி உற்பத்தி திறன் வெறும் 430 முதல் 440 கிலோ என்ற அளவில் மிகக் குறைவாக உள்ளது. உலக சராசரி 815 கிலோவாகவும், 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஹெக்டேருக்கு 1,500 கிலோவுக்கு மேலாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஊக வணிகத்தைத் தடுக்க விலை நிலைத்தன்மை வேண்டும்

விதைத் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள், போதிய சாகுபடி முறைகள் இல்லாதது மற்றும் பருவநிலை மாற்றங்களால் பருத்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைய இன்னும் 7 முதல் 10 ஆண்டுகள் ஆகலாம். எனவே, பருத்தி மீது இறக்குமதி வரி விதிப்பது தொழில்துறையையும் தொழிலாளர்களையும் கடுமையாகப் பாதிக்கும்.எனவே, விலை ஊக வணிகத்தைத் தடுக்கவும், விலை நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், சர்வதேச ஏற்றுமதி ஒப்பந்தங்களை தடையின்றி மேற்கொள்ளவும் அனைத்து வகையான பருத்திகளுக்கும் வரும் 2030-ஆம் ஆண்டு வரை இறக்குமதி வரியிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். மேலும்,உள்நாட்டு பருத்தி இருப்பு மற்றும் விலையை ஒன்றிய அரசு அவ்வப்போது கண்காணித்து உழவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்