கண்ணில் ஒளியும் கையில் தெம்பும் இருக்கும் வரை எழுதுவேன் : வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன் உறுதி
24 Sept 2026, 8:27 pm

கண்ணில் ஒளியும் கையில் தெம்பும் இருக்கும் வரை எழுதுவேன் : வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன் உறுதி

சென்னை, செப். 24 –கண்ணில் ஒளியும் கையில் தெம்பும் இருக்கும் வரை தொடர்ந்து எழுதுவேன் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன் உறுதியுடன் தெரிவித்தார்.

தமுஎகச மாநிலத் துணைத்தலைவர் பிரளயன் தலைமையில், ச. செந்தில்நாதன் எழுதிய ‘இலக்கியப் போராட்டங்கள்’ நூலின் வெளியீட்டு விழா, கவிஞர் தமிழ் ஒளியின் 103ஆவது பிறந்தநாளான செப். 21 அன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது.

நூலும் வெளியீட்டுரையும்

சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலைச் சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதியரசர் து. அரிபரந்தாமன் வெளியிட, முதல் பிரதியைத் தமுஎகசவின் முன்னத்தி ஏர் எஸ்.ஏ. பெருமாள் பெற்றுக்கொண்டார். தமுஎகச சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 7 மாவட்டச் செயலாளர்கள் நூலின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

நூலை வெளியிட்டு உரையாற்றிய மேனாள் நீதியரசர் து. அரிபரந்தாமன், 1967ஆம் ஆண்டு ‘சிறுகதைகள் ஒரு மதிப்பீடு’ நூலை வெளியிட்ட சிகரம் செந்தில்நாதன், தனது 84ஆவது வயதில் 37ஆவது நூலாக இந்நூலை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். எம்.கே.தியாகராஜ பாகவதர் மற்றும் எம்.ஆர். ராதாவை கலகக்கார கலைஞர்களாகவும், எழுத்தாளர் விந்தன் மற்றும் கவிஞர் தமிழ் ஒளியை உயர்வான இடத்திலும் இந்நூல் சித்தரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வ.ரா. எனப்படும் வ.ராமசாமி ஐயங்கார் குறித்த பதிவுகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தலைவர்கள் வாழ்த்தும் சிறப்பு நிகழ்வுகளும்

விழாவில் தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆயிஷா ஜலால், பகத்சிங் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, மாநிலக்குழு உறுப்பினர் இரா.தெ.முத்து, பதிப்பாளர் சந்தியா நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் மூத்த எழுத்தாளர் சிகரம் செந்தில்நாதனைப் பாராட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். தமுஎகச தொடக்க காலத்தில் செயலாள

ராகச் செயல்பட்ட பாரதிவிசயன், வீ. அரசு, செம்புலப்பரணியன், குணசேகரன் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கவுரவிக்கப்பட்டனர்.

நூலாசிரியரின் ஏற்புரை

விழா நிறைவில் ஏற்புரையாற்றிப் பேசிய நூலாசிரியர் சிகரம் ச. செந்தில்நாதன், இலக்கியப் போராட்டங்களைப் போலவே நீதிமன்றங்களில் நடத்திய சட்டப் போராட்டங்கள் குறித்தும், தமிழ்நாட்டின் ஆன்மீக வரலாறு குறித்தும், முற்போக்கு எழுத்தாளர்களை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தும் வகையிலும் அடுத்தடுத்து ஆறு நூல்களை எழுதும் திட்டம் தனக்கு உள்ளதாகத் தெரிவித்தார்.

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் மருத்துவமனையாக மாற்ற முயன்றதை எதிர்த்தும், எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றோம்” என்று அவர் நினைவுகூர்ந்தார். நிறைவாக, “என் கண்களில் ஒளியும் கையில் தெம்பும் இருக்கும் வரை எழுதுவேன் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார். மத்திய சென்னை மாவட்டத் தலைவர் பரிசல் சிவசெந்தில்நாதன் நன்றி கூறினார்.