பொன்னேரி நகராட்சி ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி முற்றுகை
12 Dec 2025, 3:12 pm
<p>பொன்னேரி, டிச. 12- திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள், தங்கள் கடைகளுக்கு வந்து அதிக வரி கேட்பதுடன், அடாவடித்தனமாகவும், மரியாதைக் குறைவாகவும் நடந்துகொண்டதாகக் கூறி, நகராட்சி வரி வசூல் ஆய்வாளர் கோபிநாத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முறையாகத் தொழில் வரி செலுத்தி வரும் நிலையில், ஆய்வாளர் கோபிநாத் அத்துமீறி நடந்து கொள்வதாகவும், தங்களின் மரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டி, தொழிலாளர்கள் நகராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், ஆய்வாளர் கோபிநாத்துக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பி, நகர்மன்றத் தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதனிடம் புகார் மனு அளித்தனர். அதிகாரி கோபிநாத் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்து வியாபாரிகளும் இணைந்து பெரும் போராட்டம் நடத்த நேரிடும் என்றும் தொழிலாளர்கள் எச்சரித்தனர்.</p>
