இறால் ஆலை வாயு கசிவு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
24 Jun 2026, 1:09 am
<p><strong>இறால் ஆலை வாயு கசிவு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு </strong></p><p>சென்னை, ஜூன் 23- திருவள்ளூர் மாவட்டம், பெரிய பாளையம் அருகே உள்ள தனியார் இறால் மற்றும் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா நச்சு வாயு கசிவு விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட இந்த விபத்தில், கடந்த இரு நாட்களில் 8 பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களில் ஷிபானி, ஜுமான் ஜுவாங், கீதா ஜுவாங்கா, பூர்ணிமா ஜுவாங்கா, சாம்பாபதி ஜுவாங்கா, பார்வதி ஜுவாங்கா, சீதா ஹாஸ்தா ஆகிய 7 பேர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் ஆவர். மற்றொரு பெண்ணின் உடல் அடையாளம் காணப்பட்டு வருகிறது. வாராந்திர விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று, இரவு ஷிப்ட் முடிந்து தொழிற்சாலை வளாகத்தின் தரைத்தளத்திற்கு மேல் உள்ள விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த 18 முதல் 26 வயதிற்குட்பட்ட வெளிமாநில இளம் பெண் தொழிலாளர்கள் இந்த விபத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். நச்சு வாயுவை நீண்ட நேரம் சுவாசித்ததால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், முக வீக்கம் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, சிலர் மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி விழுந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் லேசான அறிகுறி உள்ள 120-க்கும் மேற்பட்டோர் 15 கி.மீ தொலைவிலுள்ள திருமண மண்ட பத்தில் தங்க வைக்கப்பட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வரு கின்றனர். இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஆர். சுனில் குமார் மற்றும் தன்னார்வலர்கள் உடனடியாக வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய 20 ஆம்புலன்ஸ்களை ஏற்பாடு செய்து உதவினர். தேர்வாய் சிப்காட் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு, ஆலையிலிருந்த 3 அம்மோனியா சிலிண்டர்களைப் பாதுகாப்பாக அகற்றினர். தற்போது ஒடிசா, அசாம், ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 70 தொழிலாளர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் நிலைமை சீரியஸாக இருந்தவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வேல்ஸ் மருத்துவமனையிலிருந்து மாற்றப்பட்ட மற்றொரு தொழிலாளியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஏ. அரவிந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தாரேஸ் அகமது கூறுகையில், நச்சு வாயு கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட ஆலையில் சுற்றுச்சூழல் தணிக்கை நடத்தவும், மாவட்டம் முழுவதும் உள்ள இது போன்ற தொழிற்சாலைகளில் அவசரகால பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவான தணிக்கை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
