குறும்படங்கள் வெளியீடு
9 Oct 2026, 2:26 am

குறும்படங்கள் வெளியீடு

அவிநாசி, அக்.8–அவிநாசியில் விதைச்சொல் பதிப்பகம் சார்பில் தனியார்திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில், தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் குறும்படங்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் கமலக்கண்ணன் இக்குறும்படங்களை வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் ’கூத்தாடிகளின் தெரு’ குறும்படத்தின் இயக்குநரும் எழுத்தாளருமான பேராசிரியர் போ.மணிவண்ணன் பங்கேற்று பேசியதாவது: ”குடும்பக் கருத்துவேறுபாடு காரணமாக கணவன்-மனைவி பிரிவது, குழந்தைகளின் மீது நிகழ்த்தப்படும் கடுமையான உளவியல் வன்முறையாக மாறுகிறது. இத்தகைய சூழலை தவிர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ’கூத்தாடிகளின் தெரு’ குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல, அவிநாசிஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி விபிஷினி மற்றும் அவரது குழுவினர் இயக்கிய’மௌனம் பேசும் மரணம்’ குறும்படமானது, சாதிப்பதற்காக பிறந்த நாம் எக்காரணம் கொண்டும் தற்கொலை முடிவை எடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அவிநாசி அரசு கல்லூரித் தமிழ் பேராசிரியர் சரவணன் மற்றும் இயக்குநர் சூர்யா இணைந்து இயக்கிய ’தேடல்’ குறும்படமானது, முதல் தலைமுறை பட்டதாரிகள் வறுமையிலும் போராடி வெற்றி பெறுவது குறித்த தன்னம்பிக்கையை இளைஞர்களிடையே விதைக்கும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் ’கூத்தாடிகளின் தெரு’ குறும்படத்தின் படத்தொகுப்பாளர் சந்தோஷ் சந்தீப், இசையமைப்பாளர் வினோத்குமார், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.முன்னதாக, புத்தகத் திருவிழா துவக்க விழாவில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலசெயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், மாவட்டத் தலைவர் சம்பத், மாவட்டச் செயலாளர் கணேசன், வழக்கறிஞர் விஜய் ஆனந்த் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.