ஆராய்ச்சி ஒதுக்கீட்டில் பெரும் பள்ளம் அதிர வைக்கும் ஒப்பீடு - க.சுவாமிநாதன்
29 Dec 2025, 3:24 pm
<p><strong>ஆராய்ச்சி ஒதுக்கீட்டில் பெரும் பள்ளம் அதிர வைக்கும் ஒப்பீடு </strong></p>
<p>2047 இல் இந்தியா “வளர்ந்த நாடாக” மாறிவிடும் என பெருங்கனவை ஒன்றிய அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த கனவு ஈடேற வேண்டுமானால் அறிவியல் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளுக்கு அதில் முக்கியப் பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் “பெருங் கனவும் - இந்திய ஆராய்ச்சியின் பெரும் பள்ளமும்” என்ற சசிதரூர் கட்டுரை (தி இந்து 29.12.2025) தரும் தகவல் அதிர வைக்கிறது. இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான (R & D) நிதி ஒதுக்கீடு கடந்த சில ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GDP) 0.6% லிருந்து 0.7 % க்கு இடையிலேயே ஊசலாடி வருகிறது. இது அரசு மட்டுமின்றி தனியார் துறைகளும் சேர்ந்து ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக செலவிடும் தொகைகளை சேர்த்த கணக்குதான். அதாவது 1% கூட இல்லை. பிற நாடுகளோடு ஒப்பிடும்போது ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடு மிகப் பரிதாபமான நிலையில் உள்ளது. இதே விகிதங்கள் இஸ்ரேல் 5.4%, அமெரிக்கா 3.5%, சீனா 2.4% என்ற அளவில் உள்ளன. தேசங்களோடு ஒப்பிடும்போது ஏற்படும் அதிர்ச்சியை விட இன்னொரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம், ஒரே ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி ஒதுக்கீடோடு ஒப்பிடும் போது இந்தியாவின் மொத்த ஆராய்ச்சி & வளர்ச்சிக்கான ஒதுக்கீடு குறைவாக இருப்பதுதான் அது. சீனாவின் பெரும் தொழில் நுட்ப நிறுவனமான ஹூவாய் (HUAWEI) 2023 இல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக ரூ.23400 கோடிகளை செலவழித்துள்ளது. கடும் உலக வர்த்தகப் போட்டி, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் குறிப்பாக செமி கண்டக்டர் துறையில் தொடுக்கப்படும் தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள எவ்வாறு சீன நிறுவனங்கள் ஆயத்தம் ஆகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம். ஆனால் ஒரே ஒரு நிறுவனம் செய்யும் ஆராய்ச்சிக்கான செலவுகளை விட 140 கோடி மக்களைக் கொண்ட இந்திய தேசத்தின் ஆராய்ச்சி செலவினம் குறைவாக இருக்கிறது. எவ்வளவு பெரிய அவலம்! தனியார் துறை வளர்ந்தால் ஆராய்ச்சி முனைப்புகள் வளரும் என்ற பிரமைகளும் இந்தியாவில் தகர்ந்துள்ளன. வளர்ந்த நாடுகளில் ஆராய்ச்சி செலவினத்தில் தனியார் துறை 66 சதவீதம் பங்கு வகிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவிலோ நிலைமை தலை கீழாக இருக்கிறது. ஒன்றிய அரசு, மாநில அரசுகள், உயர் கல்வி, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குதான் ஆராய்ச்சி செலவினங்களில் 64 சதவீதம் ஆக உள்ளன. இந்தியத் தனியார் துறை, ஆராய்ச்சி முதலீடுகளில் மிகவும் பின் தங்கிக் கிடக்கிறது. ஆனாலும் ஒன்றிய ஆட்சியாளர்களின் “விக்சித் பாரத்” முழக்கம் மட்டும் காதுகளை கிழிக்கின்றது. </p>
