2016 முதல் 2026 வரை நீட் தேர்வுக்கு எதிரான போரில் 10 ஆண்டுகளாக களத்தில் இந்திய மாணவர் சங்கம் - சி.மிருதுளா
31 Aug 2026, 8:59 pm

2016 முதல் 2026 வரை நீட் தேர்வுக்கு எதிரான போரில் 10 ஆண்டுகளாக களத்தில் இந்திய மாணவர் சங்கம் - சி.மிருதுளா

2026-ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற நீட் (NEET-UG) தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள்வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மாணவர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இடதுசாரி மாணவர் அமைப்புகளான இந்திய மாணவர் சங்கம், ஏ.ஐ.எஸ்.எப் மற்றும் சி.ஜெ.பி போன்ற அமைப்புகள் இணைந்து “பிரதான் கோ பேக்” (Pradhan Go Back) என முழக்கமிட்டு, வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று வலுவான போராட்டங்களை நடத்தின. மாணவர்களின் இந்தத் தொடர் எதிர்ப்பைத்தொடர்ந்து, 2026 ஜூலை 25 அன்று ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமாசெய்தார். 10 ஆண்டுகால போராட்ட வரலாற்றில்மாணவர் சக்தியின் இந்த வெற்றி ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகியது மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. தமிழ்நாடு நீட் விவகாரத்தில் மற்றமாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதை நாம் மறுதலிக்க முடியாது. பழம்பெரும் கட்சிகள் துவங்கி புதிய கட்சிகள் வரை நீட் விவகாரத்தை பேசாமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது. அரசியல் கட்சிகளுக்கு இந்த நிர்பந்தத்தைஉருவாக்கியவர்கள் இந்திய மாணவர் சங்க அமைப்பினர்தான் என்றால் மிகையல்ல.

நீட் திணிப்பும் இந்திய மாணவர் சங்கத்தின் தொடக்க கால எதிர்ப்பும்

இந்திய அரசு மற்றும் மருத்துவக் கவுன்சில்சார்பில் 2012-இல் நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. மாநில உரிமைகள் மற்றும் கல்வி முறைகளின் வேறுபாடுகளைசுட்டிக்காட்டி பல்வேறு மாநிலங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், 2013-இல் உச்சநீதிமன்றம் இத்தேர்வு அரசியலமைப்புக்கு எதிரானது என ரத்து செய்தது. ஆனால், 2016-இல் உச்சநீதிமன்றம் தன் முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்து, நீட் தேர்வை நாடு முழுவதும் கட்டாயமாக்கி உத்தரவிட்டது.நீட் தேர்வு மாநில உரிமைகளையும் கிராமப்புற மாணவர்களின் உரிமைகளையும் பறிக்கிறது எனக்கூறி, 2016 முதலே களப் போராட்டங்களை இந்திய மாணவர் சங்கம் தொடங்கியது. நீட்டை ரத்து செய்யக்கோரி மாநிலம்தழுவிய மறியல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. 2017-இல் நடைபெற்ற கருப்பு பேட்ஜ் அணியும்போராட்டத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அதிமுக, பாஜக தவிர்த்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்திய மாணவர் சங்கம் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவுதெரிவித்தனர்.

போராட்டத்தை மேலும் வலுப்படுத்த அனைத்து அரசியல் கட்சியினுடைய மாணவர் அமைப்புகளையும் ஒன்றிணைத்து 2017ஆகஸ்ட் 27-ல் “அனைத்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு” உருவாக்கப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளர்களாக இந்திய மாணவர் சங்கம் மற்றும் திமுக மாணவர் அணியின் மாநில செயலாளர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

அனிதா மரணம் மற்றும் மாபெரும் போராட்டங்கள்

மாணவி அனிதாவின் மரணத்திற்குப் (செப் 1, 2017) பிறகு நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் வேகமெடுத்தது. அரியலூரிலும் மதுரையிலும் சாலைமறியல் நடைபெற்றதுடன், 12 நாட்கள் தமிழ்நாடுமுழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. வகுப்புப் புறக்கணிப்பு, பேரணி, முற்றுகை என பல வடிவங்களில்போராட்டம் தொடர்ந்தது. 12 நாட்களில் 137 கல்லூரிகள், 46 பள்ளிகள்என 183 நிறுவனங்களில் இந்திய மாணவர்சங்கம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் சட்டமன்றம் நோக்கிநடைபெற்ற பேரணி தமிழகம் முழுவதும்பேசக்கூடியதாக அமைந்தது. இப்போராட்டங்களை மாநிலம் முழுவதும் வழிநடத்திய இந்தியமாணவர் சங்கத் தலைவர்களும் தோழர்களும் அப்போதைய அரசால் சிறையில் அடைக்கப்பட்டனர். நீட் தேர்வுக்கு எதிராக ஓட்டு வாங்க மட்டுமே மேடைக்கு மேடைப் பேசும் கட்சிகள், தங்கள் தொண்டர்கள்எத்தனை பேர் சிறைக்குச் சென்றார்கள் என்று பட்டியலிட முடியுமா? அத்தனை அடக்குமுறைகளையும் மீறி அன்றுமாணவர் நலன் காக்கும் போராட்டத்தில் களத்தில் நின்ற அமைப்பு இந்திய மாணவர் சங்கமே ஆகும்.

நீட் தேர்வு குளறுபடியால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து, 2018-இல் சென்னைசி.பி.எஸ்.இ வளாகம் முற்றுகையிடப்பட்டது. 2019-ல் மாணவி பிரதீபா மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 11 மாணவத் தோழர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 2021 செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற ‘ஆயிரம் அனிதாக்கள் பேரணி’ அனைவரின்கவனத்தையும் ஈர்த்தது. மேலும், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகுஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி ஆளுநருக்குப் பேனா அனுப்பும்போராட்டம் உள்ளிட்டவற்றை இந்திய மாணவர் சங்கம் நடத்தி தனது கோரிக்கையை வென்றெடுத்தது.

தேசிய தேர்வு முகமையின் முறைகேடுகளும் தொடரும் போராட்டங்களும்

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு மற்றும் மதிப்பெண் முறைகேடுகளுக்கு எதிராக தேசியத் தேர்வு முகமையை (NTA) கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை மிகுந்த முக்கியத்துவம்வாய்ந்துள்ளது. 2017-ல் அமைக்கப்பட்ட என்.டி.ஏ வின் முறைகேடுகள் காரணமாக இந்த அமைப்பைக் கலைக்கவேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுப்பெற்று வருகிறது. தேர்வு முறையில் மாற்றங்களைப்பரிந்துரைக்க அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுக்களின் பரிந்துரைகள் கூட முறையாகநடைமுறைப்படுத்தப்படவில்லை.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமனதாக நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநில சுயாட்சியைப் பாதுகாக்கவும் கல்வி உரிமையை மீட்டெடுக்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. இன்றுதமிழகம் முழுவதும் அனிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெறும் நீட் எதிர்ப்பு பேரணி மற்றும் கருத்தரங்கத்திற்கு அனைவரும் ஆதரவுஅளிக்க வேண்டும். 10 ஆண்டுகளைக் கடந்தும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டக் களம் தணியவில்லை. மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் கல்வி உரிமையையும் சமூக நீதியையும் பாதுகாக்க இந்திய மாணவர் சங்கம் தனது போராட்டத்தைத் தொடர்ந்துமுன்னெடுக்கும்.