ஓவியங்கள் பேசிய ரகசியம்
16 May 2026, 8:19 pm

ஓவியங்கள் பேசிய ரகசியம்

பள்ளி விடுமுறையில் ஆசிரியர் ஊட்டி மலர்க் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றிருந்தார் .

இன்றைக்கு பள்ளி திறந்த முதல்நாள் . ஊட்டிமலர்க் கண்காட்சியின் நினைவுகளை ஆசிரியர் ஞாபகப்படுத்தி பேச்சை ஆரம்பித்தார்.

குழந்தைகள் உற்சாகமாக பேச ஆரம்பித்தனர். ச

ரி! சரி! “குழந்தைகளே, மலர்க்கண்காட்சியை பார்த்தீர்கள் அல்லவா! அதை ஓவியமாக வரையுங்கள் பார்க்கலாம் என்றார் ஆசிரியர் “ அடுத்த ஒரு மணி நேரம், அந்த வகுப்பறை மௌனமானது.

மாணவர்கள் வண்ணப் பென்சில்களும், மெழுகு வண்ணக் கோல்களையும் கொண்டு வரைய ஆரம்பித்தனர்.

ஆசிரியர் ஒவ்வொரு மேசையாக நடந்து சென்றார். முகிலனின் காகிதத்தில் ஒரு விசித்திரமான அழகு இருந்தது.

பூங்காவில் பார்த்த அத்தனை வண்ணங்களையும் விட, அவன் கைகளில் இருந்த கருப்பு வண்ணக் கோல் தான் அதிகம் தேய்ந்திருந்தது.

“முகிலா, ஏன் இவ்வளவு கருப்புப் பூக்கள்?” என்று ஆசிரியர் வினவினார்.

முகிலன் தன் வரைபடத்தைத் தடவிப் பார்த்தபடி சொன்னான், “ஐயா, அங்கு சென்றபோது ரோஜாக்களும், டாலியாக்களும் சிரித்துக் கொண்டிருந்தன.

ஆனால், என் தேடல் மட்டும் முடியவே இல்லை.

‘ஏன் ஒரு கருப்புப் பூ கூட இல்லை சார்?’ அந்த ஏக்கத்தை, அப்படியே வரைந்துவிட்டேன் சார்” ஆசிரியர் வியந்து போனார்.

இல்லாத ஒரு பொருளின் மீதான காதல், இருக்கும் பொருளின் அழகை விடத் தீவிரமானது என்பதை அந்தச் சிறுவன் உணர்த்தினான்.

அடுத்த மேசையில் கவின் வரைந்திருந்த பட்டாம்பூச்சிகள் காகிதத்தை விட்டு வெளியே பறந்துவிடும் போலத் தெரிந்தன. “

பூக்களை விட பட்டாம்பூச்சிகள் ஏன் இவ்வளவு அதிகம் கவின்?” “ஐயா, பூக்கள் அழகானவைதான், ஆனால் அவை அங்கேயே அமர்ந்திருக்கின்றன.

அந்தப் பட்டாம்பூச்சி ஒரு பூவின் இதழில் அமர்ந்து, அடுத்த கணமே ஒரு சிலிர்ப்போடு ‘சட்டென’ பறக்குமே,.

அந்த காட்சியை அப்படியே வரைய ஆசைப்பட்டேன் சார்.” என்றான். அவனது உள்ளம் நிலையான அழகை விட, நகர்ந்து கொண்டே இருக்கும் வாழ்வின் வேகத்தைக் கொண்டாடியது தெரிந்தது. அன்புவின் ஓவியத்தில் பூக்கள் மிகச் சிறியதாக இருந்தன.

ஆனால், அந்தப் பூக்களின் காலடியில் விரிந்திருந்த புல்தரை மிக நுணுக்கமாக வரையப்பட்டிருந்தது.

“பூக்களை ஏன் இவ்வளவு சிறியதாக வரைந்தாய்?” “சார், எல்லோரும் பூக்களின் அழகைப் பார்த்தார்கள் ஆனால், அந்தப் பூக்களையும் நாங்கள் அமர்வதற்கு இடம் கொடுத்த புல்தரையையும் இணைத்து வரந்துவிட்டேன் சார் என்றான் நீலாவின் ஓவியத்திலோ மலர்களுக்கு மேலே பரந்து விரிந்த நீல வானம் ஆதிக்கம் செலுத்தியது.

“வானத்தை ஏன் இவ்வளவு பெரிதாக வரைந்தாய் நிலா?” “ஐயா, பூக்கள் சிறியவைதான். ஆனால் அவை அந்தப் பெரிய வானத்தைப் பார்த்து ரசிப்பதாக எனக்குத் தோன்றியது.

ஆசிரியர் தன் இருக்கைக்குத் திரும்பினார். மாணவர்கள் வரைந்த ஓவியங்களை மீண்டும் ஒருமுறை கவனித்துப் பார்த்தார். அங்கே ஒரு பெரிய உண்மை ஒளிந்திருந்தது. முகிலன் தனது ஏக்கத்தால் அந்த இடத்தைப் பூர்த்தி செய்தான்.

கவின் தனது துடிப்பால் அந்த இடத்தை நிரப்பினான். அன்பு தனது நன்றியுணர்வால் அடித்தளத்தை வரைந்தான்.

நீலாவோ தனது பரந்த மனப்பான்மையால் வானத்தை வரைந்தாள். வகுப்பறை அமைதியாக இருந்தது.

ஆனால், குழந்தைகளின் ஓவியங்கள் சத்தமிட்டு ஒரு செய்தியைச் சொல்லின: குழந்தைகள் தங்களுக்குரிய மகிழ்ச்சியை எப்போதும் நிரப்பத் தவறுவதில்லை!” ஆசிரியரின் இதழ்களில் ஒரு புன்னகை அரும்பியது.

இன்று அவர் பாடம் நடத்தவில்லை, மாணவர்களிடம் பாடம் கற்றுக் கொண்டார். அதுவும் ஒரு சுகம்தானே என்றபடி அடுத்த வகுப்பிற்கு சென்றார்.