அறிவியல் கதிர் - சிதம்பரம் இரவிச்சந்திரன்
11 Jul 2026, 9:16 pm

அறிவியல் கதிர் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

பிளாஸ்டிக்குகள் எரிபொருளாக மாறும்போது...!

தெருக்களில் குப்பைகளை எரிப்பது வளரும் நாடுகளில் சாதாரண நிகழ்வாக இருந்தாலும், வீட்டில் பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பது ஆரோக்கியத்திற்குப் பேரபாயத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ (Nature Communications) இதழில் வெளியான உலகளாவிய ஆய்வு, 26 நாடுகளைச் சேர்ந்த ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்டது. இதில் 16% பேர் வீட்டில் தெரிந்தே பிளாஸ்டிக்கை எரிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். தூய எரிபொருளைப் பெற இயலாத எளிய குடும்பங்களுக்குப் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், உறைகள் ஆகியவை வேறு வழியின்றி ‘கடைசி ஆற்றல் மூலமாக’ மாறுகின்றன என்று கால்கரி பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் பிஷல் பரத்வாஜ் கூறுகிறார். பிளாஸ்டிக்குகளை எரிக்கும்போது ‘டைஆக்சின்கள்’, ‘ஃபுயுரன்கள்’ மற்றும் கன உலோகங்கள் போன்ற நச்சுகள் வெளியேறி உணவுக் கலப்படத்தை ஏற்படுத்துகின்றன. இப்பகுதிகளில் சேகரிக்கப்பட்ட முட்டை மாதிரிகளில் நச்சு கலந்திருப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. ஆற்றல் வறுமை, போதிய படிப்பறிவின்மை மற்றும் மோசமான கழிவு மேலாண்மை ஆகியவை இப்பிரச்சனைக்குக் காரணங்கள் என்று பெர்த் கர்ட்டின் கழக இயக்குநர் பேராசிரியர் பெட்டர் ஆஷ்வொர்த் குறிப்பிடுகிறார். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு அமைப்பு (OECD) கணிப்புப்படி, உலகளாவிய பிளாஸ்டிக் மாசு 2060-இல் மூன்று மடங்காக உயரும். இதற்குத் தீர்வாக, அரசுகள் கழிவு மேலாண்மைத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். மானியங்கள் மூலம் சமையலுக்கான தூய எரிபொருளை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும். கல்வி சார்ந்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுடன், தூய வழியில் பிளாஸ்டிக்கை எரிக்க உதவும் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிவதே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையும். வேகமான நகரமயமாக்கலுக்கு இடையே, அரசும் சமூகமும் உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

கடலுக்கடியில் இயங்கும் உலகின் முதல் தரவு மையம்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க, உலகின் முதல் நீருக்கடியில் இயங்கும் தரவு மையத்தைச் சீனா வெற்றிகரமாகச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. ஷாங்காய் கடலோரப் பகுதியில் 10 கிலோமீட்டர் தொலைவில், 10 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள ‘ஷாங்காய் லிங்காங் தரவு மையம்’ 2026 மே மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. 24 மெகாவாட் திறனுடைய இத்திட்டத்தை ‘ஹை க்ளவுடு’ நிறுவனமும், ‘சீனா தகவல் தொடர்புகளுக்கான கட்டுமானம்’ நிறுவனமும் இணைந்து மேற்கொண்டுள்ளன. அருகிலுள்ள காற்றாலை பண்ணையிலிருந்து இதற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. கடல்நீரின் இயற்கையான குளிர்ச்சியைப் பயன்படுத்துவதால், நிலப்பரப்பில் உள்ள பாரம்பரிய மையங்களை விட இது ஐந்தில் ஒரு பங்கு ஆற்றலை மட்டுமே செலவிடுகிறது. சாதாரண மையங்களில் சர்வர்களைக் குளிரூட்ட 25% முதல் 40% வரை மின்சாரம் வீணாகிறது. மேலும், 2030-க்குள் தரவு மையங்களின் ‘நீரின் கால் தடம்’ (Water footprint) 9.3 டிரில்லியன் லிட்டராக அதிகரிக்கும் என ஐநா பல்கலைக்கழகத்தின் நீர், சூழல் கழகம் எச்சரித்துள்ளது. 2018-இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஸ்காட்லாந்தில் இத்தகைய முன்னோடித் திட்டத்தைச் சோதித்தாலும், சீனா இதனை வணிகரீதியாகச் சூழல் நட்புத் தொழில்நுட்பமாக மாற்றியுள்ளது. சந்தை தேவை, கடல்சார் பொறியியல் மற்றும் அரசின் கொள்கை ஆதரவே சீனாவின் இந்த அதிவிரைவு வெற்றிக்குக் காரணம் என்று ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் ஹாங்ஜியாங் டாங் கூறுகிறார். இதற்காகச் சீனா 177 மில்லியன் பவுண்ட் முதலீடு செய்துள்ளது. இம்மையத்தால் கடல்நீரின் வெப்பநிலை சற்றே உயர்ந்தாலும், அது ஆபத்தான அளவில் இல்லை என்று கடல்சார் உயிரியல் ஆய்வாளர் பேராசிரியர் ரிக் ஸ்டாஃபோர்டு கூறுகிறார். சீனாவின் இந்தச் சூழல் காக்கும் முயற்சி உலகிற்கே ஒரு சிறந்த முன்மாதிரியாகும்!

இரவும் பகலும் இல்லாத புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘LHS 3844b’ என்ற பூமி அளவிலான புதிய எக்ஸோ கிரகத்தை (Exoplanet) ஆய்வு செய்துள்ளனர். நமது சூரிய குடும்பத்திலிருந்து 48.5 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்தக் கிரகத்தில் சூரிய உதயமோ அல்லது சூரிய அஸ்தமனமோ நிகழ்வதில்லை. இதன் ஒரு பகுதி எப்போதும் நிரந்தரப் பகலாகவும், மறுபகுதி எப்போதும் அடர்ந்த இருளாகவும் நீடிக்கிறது. இத்தகைய ‘டைடலி லாக்டு’ (Tidally locked) கிரகங்கள், தங்களின் தீவிரமான காலநிலைகளுக்கு மத்தியிலும், முன்பு நினைத்ததை விட அதிக அளவில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழலைக் கொண்டிருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகளின் புதிய மாதிரி கட்டமைப்பு தெரிவிக்கிறது.

கடிகாரமே இல்லாமல் நேரத்தைக் காட்டும் ‘குட்டிப் பிரபஞ்சம்’!

பர்மிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 24,000 மீக்குளிர் அணுக்களைப் (Ultracold atoms) பயன்படுத்தி, ஆய்வகத்தில் ஒரு செயற்கை ‘குட்டிப் பிரபஞ்சத்தை’ உருவாக்கியுள்ளனர். வெளிப்புறக் கடிகாரத்தின் உதவி ஏதுமின்றி, ஒரு குவாண்டம் அமைப்பிற்குள் ஏற்படும் மாற்றங்களில் இருந்தே நேரம் என்பது இயற்கையாக உருவாக முடியும் என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர். பிரபஞ்சத்தை வெளிப்புற நேரம் இல்லாத ஒரு தனித்த குவாண்டம் நிலையாக விவரிக்கும் புகழ்பெற்ற ‘வீலர்-டெவிட் சமன்பாட்டிற்கு’ (Wheeler-DeWitt equation) இந்த ஆய்வு முடிவுகள் வலுசேர்க்கின்றன. இந்த சோதனையின்போது அணுக்கள் லேசர் தடுப்பு மூலம் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

கடலடியில் 125 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘கோப்ளின் சுறா’ கண்டுபிடிப்பு!

ஆழ்கடலில் அதன் இயற்கையான வாழிடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் 125 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘கோப்ளின் சுறா’ (Goblin shark) ஒன்றை விஞ்ஞானிகள் வரலாற்றிலேயே முதன்முறையாகப் படம் பிடித்துள்ளனர். இதன் மூலம் இந்த அரிய வகைச் சுறாக்கள் வாழும் ஆழத்தின் எல்லை 1,200 மீட்டரிலிருந்து 2,000 மீட்டர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள ஜார்விஸ் தீவுக்கு அருகிலும், மற்றொன்று டோங்கா அகழிக்கு அருகிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பழங்காலச் சுறா குடும்பத்தில் இன்று அழியாமல் எஞ்சியிருக்கும் ஒரே இனம் இந்த கோப்ளின் சுறாக்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

200 டிபி தரவுகளைச் சேகரித்த ‘சன்ரைஸ் III’ விண்வெளி ஆய்வகம்!

சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ‘சன்ரைஸ் III’ (Sunrise III) பலூன் விண்வெளி ஆய்வகம், தனது ஆறரை நாள் பயணத்தில் 200 டெராபைட் (TB) அளவிலான அறிவியல் தரவுகளைச் சேகரித்துள்ளது. வளிமண்டலத்தின் அடுக்கு மண்டலத்தில் 35 கிலோமீட்டர் உயரத்தில் பறந்தபடி, இந்த பலூன் வழியிலான ஆய்வகம் சூரியனின் மிகத் தெளிவான படங்களை எடுத்துள்ளது. இந்தத் தரவுகள் சூரியனின் செயல்பாடுகள், அதன் காந்தக் கட்டமைப்புகள் மற்றும் சூரிய சூறாவளிகள் (Solar tornadoes) குறித்த புதிய புரிதல்களையும், சூரியனின் நடத்தையை இன்னும் துல்லியமாகக் கணிக்கும் மாதிரிகளையும் மேம்படுத்த உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.