கடன் வட்டிக்காக பள்ளிச் சிறுமியை வீட்டுச் சிறை வைத்த கொடூரம்! நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்
1 hour before
<p><strong>கடன் வட்டிக்காக பள்ளிச் சிறுமியை வீட்டுச் சிறை வைத்த கொடூரம்! நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்</strong></p><p>திண்டுக்கல், ஜூலை 6 - வத்தலக்குண்டு அருகே, தனியார் நிதி நிறுவனம் ஒன்று, பெற்றோரின் கடனுக்காக, பிளஸ் 2 படிக்கும் சிறுமியை வீட்டுச்சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நிதி நிறுவன உரிமையாளர், ஊழியர்கள் மற்றும் சுய உதவிக் குழுத் தலைவியை கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. வத்தலகுண்டு அருகேயுள்ள மல்லணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராமு (50). இவரது மனைவி சசிகலா (45). சசிகலா, தனியார் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ. 40 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதனிடையே, கடந்த மாதம் பெய்த கனமழைக்கு வீடு சேதமடைந்ததைத் தொடர்ந்து, அவரால் கடன் தவணையை உரிய நேரத்தில் செலுத்த முடியாத நிலையில், அடுத்த தவணையுடன் சேர்த்து செலுத்துகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால், தவணை வசூலுக்குச் சென்ற சுய உதவிக்குழு நிதி நிறுவன ஊழியர் தியாகராஜன் மற்றும் குழுத் தலைவி நாகலட்சுமி ஆகியோர், பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததுடன், பள்ளிக்குச் செல்லத் தயாராக இருந்த சசிகலாவின் மகளான பிளஸ் 2 படிக்கும் சிறுமியை, பிணையாக இழுத்துச் சென்று, குழுத் தலைவி நாகலட்சுமியின் வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், சசிகலாவின் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரையும் கடன் வசூலுக்காக எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. சிபிஎம் நேரில் ஆய்வு இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர். பாலாஜி, ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின் ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் மல்லணம்பட்டிக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். நடவடிக்கை வேண்டும் மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர். பாலாஜி ஆகியோர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் சுய உதவிக்குழு நிதி நிறுவனங்கள் பல்வேறு அத்துமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அதிக வட்டி வசூலித்து ஏழை, எளிய மக்களை சுரண்டி வருகின்றன. அந்த வகையில் தான், ரூ. 40 ஆயிரம் கடனுக்காக சிறுமியை வீட்டுச் சிறை வைத்துள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதால், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குழுத் தலைவி நாகலட்சுமி மற்றும் நிதி நிறுவன ஊழியர் தியாகராஜன் ஆகியோரை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் அவர்கள் வலியுறுத்தினர். காவல்துறை வழக்கு இதனிடையே, பாதிக்கப்பட்ட சசிகலா அளித்த புகாரின் பேரில், நிதி நிறுவன ஊழியர் தியாகராஜன் மற்றும் குழுத் தலைவி நாகலட்சுமி ஆகியோர் மீது ஆள்கடத்தல், கந்துவட்டிக் கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வத்தலகுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.</p>
