அப்பாவி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் - உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்
22 Jul 2026, 7:48 pm

அமைதியாகப் போராடிய அப்பாவி மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கொடூரமான தடியடித் தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

"அமைதியாகப் போராடிய அப்பாவி மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கொடூரமான தடியடித் தாக்குதலை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) கடுமையாகக் கண்டிக்கிறது. இந்தத் தாக்குதலில் பல மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட சட்டத் துறையைச் சேர்ந்தவர்களும் காயமடைந்துள்ளனர்.

அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது அளவுக்கு மீறிய மற்றும் விகிதாசாரமற்ற வன்முறையைப் பிரயோகித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதுடன், ஜனநாயகச் சமூகத்தில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடி, பாரபட்சமற்ற மற்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட விசாரணை நடத்தி, அளவுக்கு மீறிய வன்முறைக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு, சட்டத்தின்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துகிறது.

மேலும், காயமடைந்த அனைத்து மாணவர்களுக்கும், சட்டத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் உரிய மருத்துவச் சிகிச்சை மற்றும் தேவையான உதவிகளை உறுதிசெய்வதுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

காயமடைந்த அனைவருடனும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உறுதுணையாக நிற்பதோடு, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள், மனித கண்ணியம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.