4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை உ.பி., பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
11 Apr 2026, 5:30 am

4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை உ.பி., பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடில்லி உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கடந்த மார்ச் 16ஆம் தேதி 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஹரி ஹரன், 'இந்த சம்பவம் மிகக் கொடுமை யானது. பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு 2 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததால், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி இந்த வழக்கைக் வெறும் கொலை வழக்காக மட்டுமே விசாரிக்க காவல்துறை முயன்றது. ஆனால், குழந்தை உயிருடன் இருந்ததற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. வீடியோ மிகவும் கொடூரமாக உள்ளது.

சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்தே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் பொருள் திணிக்கப்பட்டதாக உடற்கூறாய்வு அறிக்கை கூறுகிறது. சிறுமியின் தந்தை ஒரு தினக்கூலி தொழிலாளி. அதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலை யத்திற்குச் சென்றபோது, அவர்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, காவல்துறை அவர்களைத் தாக்கி, இந்தச் சம்பவம் குறித்து மௌனம் காக்குமாறு மிரட்டியுள்ளது.

ஆரம்பத்தில் போலீஸார் சட்டம் அல்லது பாலியல் வன்கொடுமை பிரிவுகள் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என அவர் வாதிட்டார். தொடர்ந்து உத்தரப்பிரதேச அரசு வழக்கறிஞர், 'குற்றவாளிகள் எங்களை துப்பாக்கியால் சுட முயன்றதால், என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர்' என மழுப்பலாக வாதிட்டார்.

அரசு தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு, 'குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறையினரைச் சுட்டதாகவும், பதிலுக்கு சுட்டதில் அவர் காயமடைந்ததாகவும் கூறப்படும் "என்கவுன்டர்" கதையை இந்த நீதிமன்றம் ஏற்க வேண்டுமா? காவல்துறையின் பிடியில் இருந்த ஒருவரிடம் துப்பாக்கி எப்படி வந்தது? என்கவுன்டர் தந்திரக்கதையை எழுதிவிட்டு நீங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறீர்கள். எங்களை முட்டாளாக்க வேண்டாம்.

நீதிமன்றக் கண்காணிப்பிலான காலக்கெடுவுடன் கூடிய சிறப்பு விசாரணைக் குழு அல்லது மத்திய புலனாய்வு விசாரணை அவசியம். காசியாபாத் காவல் ஆணையர், நந்திகிராம் காவல் நிலைய அதிகாரி ஆகியோர் திங்கட்கிழமை (ஏப்ரல் 15) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தின் அடையாளத்தை எங்கும் வெளியிடக் கூடாது. குடும்பத்தினரைத் தனி பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும்' என கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும், காவல் ஆணையர் மற்றும் விசாரணை அதிகாரி தவிர, உத்தரப் பிரதேச அரசு, சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி, சிகிச்சை அளிக்க மறுத்த இரண்டு தனியார் மருத்துவமனைகள் (கஜன் சிவ மல்டி ஸ்பெஷாலிட்டி கேர், செயின்ட் ஜோசப் (மரியம்) மருத்துவமனை), மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு, விளக்கம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.