ஏரிக்கரையில் தீ வைப்பு: புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
18 Jul 2026, 12:01 am
<p><strong>ஏரிக்கரையில் தீ வைப்பு: புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி</strong></p><p>சங்கராபுரம், ஜூலை 17- சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.குளத்தூர் ஏரியில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் ஏற்பட்ட அடர்ந்த புகைமூட்டத்தால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சங்கராபுரம் – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி எஸ்.குளத்தூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் அதிக அளவில் வளர்ந்திருந்த விழல் புற்களுக்கு, நேற்று மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துவிட்டுச் சென்றனர். இதனால் தீ வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இந்தத் தீ விபத்தினால் ஏற்பட்ட அடர்ந்த புகை, நெடுஞ்சாலையை முழுமையாக ஆட்கொண்டது. இதனால், சுமார் 100 மீட்டர் தூரம் கூட முன்புறம் தெரியாத அளவிற்குப் புகைமூட்டம் நிலவியது. இதன் காரணமாக, சாலையில் சென்ற வாகனங்கள் மெதுவாகச் சென்றதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், விபத்து ஏற்படும் அபாய அச்சத்துடன் வாகன ஓட்டிகள் தவித்தனர். ஏரிகளில் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
