தூய்மைப் பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் தர வேண்டும்
20 Feb 2026, 2:39 pm
<p><strong>தூய்மைப் பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் தர வேண்டும்</strong></p>
<p>சென்னை, பிப். 20 - தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சமாக சம வேலைக்கு சம ஊதியமாவது தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்றக்குழுத் தலைவர் ஆர்.ஜெயராமன் வலியுறுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வெள்ளியன்று (பிப்.20) மேயர் ஆர்.பிரியா தலைமை யில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஆர்.ஜெயராமன் பேசியதன் சுருக்கம் வருமாறு: ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிதி கொடுப்பதில் வஞ்சகம் செய்து வருகிறது. இந்த நெருக்கடியிலும் சிறப்பான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேயர் அறிவித்துள்ள 90 திட்டங்களையும் நிறைவேற்ற ஆயிரத்து 358 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது வர வேற்கத்தக்கது. கல்வித்துறை நிதிநிலை குழு தலைவர் அறிக்கை யில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட பெரும்பாலும் குறைவாகவே உள்ளது. சில துறைகளுக்கு சரிபாதி யாக குறைக்கப்பட்டுள்ளது ஏன்? மாநகராட்சி வரவு செலவு திட்டத்தில் 341 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்யப் போகிறோம்? குறிப்பாக கல்வியும், சுகாதாரமும் மிக மிக அடிப்படையான தேவை கள். கல்விக்கான 14 அறிவிப்புகளை யும் வரவேற்கிறோம். ஆனால் கடந்தாண்டு ரூ.26 கோடி ஒதுக்கிய நிலையில், தற்போது 11 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. மாண வர்கள் தரம் உயர, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 180 உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக மாக நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு ஏற்கத்தக்கது அல்ல. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர அடிப்படை யில் நியமனம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் கோடைக்காலத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மோர் தருவது, ஏற்கெனவே செயல்படுத்தப்படும் உணவு வழங்கும் திட்டம், ஓய்வறை கள் கட்டுவது சிறப்பானது. அதே நேரத்தில், தூய்மை பணியாளர்கள் நீண்டகாலமாக பணி நிரந்தரம் கோரி போராடி வருகின்றனர். அது தொடர்பான அறிவிப்புகள் ஏதும் இல்லாதது வருத்தமளிக்கிறது. தூய்மைப்பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம், சம வேலைக்கு சம ஊதியம் என்ற முறையில் ஊதியத்தை உயர்த்த வேண்டும். ஒப்பந்த முறையில் பணி யாற்றும் மருத்துவர்கள், செவிலி யர்கள், களப்பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஜார்ஜ் டவுன், கத்திவாக்கம் உள்ளிட்ட 10 பேருந்து நிலையங்கள் பொது - தனியார் கூட்டாண்மை மூலம் ரூ.110 கோடி செலவில் மறுகட்டுமானம் செய்யப்படும் என்று மேயர் அறிவித்துள்ளார். பேருந்து நிலையங்களை மேம்படுத்தப் படுத்துவதை வரவேற்கிறோம். அதேசமயம் பொது - தனியார் கூட்டாண்மை என்பது தனியார் லாபம் எடுப்பதற்கான திட்டமாக இருக்கக்கூடாது. இத்திட்டத்தை மாநகராட்சியே செயல்படுத்தினால் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கும். ரோப்கார் திட்டம் மெரினா கடற்கரையில் ரோப் கார் அமைப்பது மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும். ஆனால், பொது - தனியார் பங்களிப்பு முறையில் செயல்படுத்தும்போது, தனியார் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் அபாயமும் உள்ளது. ஏழை எளிய மக்களின் பொழுதுபோக்கும் சுற்றுலா தலமான மெரினா கடற்கரையை, தனியார் லாபம் பெற வழி வகுக்கும் இடமாக மாற்றிவிடக்கூடாது. இதனால் ஏழை எளிய மக்கள் கடற்கரை பக்கம் வருவதையே தவிர்த்து விடுவார்கள். மெரினாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகடை விற்பனை யாளர்கள் உள்ளனர். இவர்களை அங்கிருந்து அகற்றினால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, சாதாரண ஏழை எளிய மக்கள், சிறுகடை வியாபாரிகள், மீனவர்கள் பாதிக்கப்படாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சொத்துவரி விதிக்க வேண்டும் சென்னை முழுவதும் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லாமல், வீடுகளை கட்டி நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். அத்தகையோருக்கு தற்காலிக வரி விதிக்க வேண்டுமென்று மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கோரி வருகிறோம். இதனால் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். மாநகராட்சி வரி விதிக்காத காரணத்தால் குடி யிருப்போருக்கு மின் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு மறுக்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அல்லல்படுகின்றனர். எனவே, தற்காலிக சொத்து வரி விதிக்க வேண்டும். கொடுங்கையூர் எரிஉலையை மூடுக கொடுங்கையூரில் செயல்பட்டு வரும் 50 டன் எரி உலையால் மக்களின் ஆரோக்கியத்திற்கும், உயிருக்கும் மிகப்பெரிய ஆபத்து உருவாகியுள்ளது. வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பும், சுற்றுச்சூழல் வல்லுநர்களும் இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், எரி உலையை நடத்தும் கம்பெனியின் விதி மீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சியின் கண்காணிப்பு இல்லாத நிலை உள்ளது தெளிவாகிறது. எனவே, இந்த எரிஉலையை உடனடியாக மூட வேண்டும். இந்த கம்பெனி மீது விதி மீறலுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்ட விதிகள் மீறப்பட்டது, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கவேண்டும். கொடுங்கையூர் எரிஉலை தினசரி 50 டன் எரிக்கும் சிறிய அள விலான ஆலை. இதில் மட்டுமே இவ்வளவு ஆபத்துகள் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நிலையில், கொடுங்கையூரில் 2100 டன் எரி உலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். வடசென்னை மக்களின் ஆரோக்கியத்தை பாது காக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு எந்தவித கட்டுமானமும் செய்யக்கூடாது என்று தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இதனால் சதுப்பு நிலத்தை சுற்றியுள்ள 17 வரு வாய் கிராமங்களில் வசிக்கும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. எனவே, பசுமைத் தீர்ப்பாயத்தின் தடையை நீக்கவும், மக்களின் வாழ்நிலை பாதுகாக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேயரின் அறிவிப்புகளை வர வேற்கும் அதேநேரத்தில், தனியார் - பொது - கூட்டாண்மை, தனியார் மயம், தொகுப்பு ஊதியம், ஒப்பந்த முறை போன்ற உழைக்கும் மக்களை பாதிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.</p>
