தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கம்யூனிசத்தின் மீதான நேசமும், தோழர் செல்லப்பிள்ளையின் கம்பீரமும்! - சமுத்திரக்கனி

27 May 2026, 8:22 pm
கம்யூனிசத்தின் மீதான நேசமும்,  தோழர் செல்லப்பிள்ளையின் கம்பீரமும்! - சமுத்திரக்கனி

கம்யூனிசத்தின் மீதான நேசமும், தோழர் செல்லப்பிள்ளையின் கம்பீரமும்! - சமுத்திரக்கனி

பொதுவுடைமைக் கொள்கைகளையும், எளிய மக்களின் உரிமைகளையும் தன் வாழ்நாள் முழுவதும் நெஞ்சில் ஏந்திப் போராடிய மாமனிதர், சேத்தூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவரும், ஜமீன் எதிர்ப்புப் போராளியுமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் எஸ்.பி. செல்லப்பிள்ளை ஆவார். 2026 மார்ச் 16 அன்று அவர் காலமானார். இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் நடைபெற்ற அவரது உருவப் படத்திறப்பு மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில், திரை இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பானதொரு உரையை ஆற்றினார். சொந்த ஊரான சேத்தூரில் கம்யூனிச இயக்க மேடைகளில் தான் வளர்ந்த விதம், தோழர் செல்லப்பிள்ளையின் அசைக்க முடியாத ஆளுமை மற்றும் கம்பீரம் உட்பட தோழர் சமுத்திரக்கனி அவர்கள் உணர்வுப்பூர்வமாக ஆற்றிய உரையின் பகுதிகள்:

கம்யூனிச இயக்கத் தலைவரும், ஜமீன் எதிர்ப்புப் போராளியும், சேத்தூர் பேரூராட்சி யின் முன்னாள் தலைவருமான மதிப்பிற்கு ரிய தோழர் எஸ்.பி. செல்லப்பிள்ளை அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா வில் பங்கேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, எனது சொந்த மண்ணில், என்னை உருவாக்கிய ஒரு மேடையில் வந்து நிற்பதை ஒரு பெரும் பேறாகக் கருதுகிறேன்

என்னை வளர்த்த கம்யூனிஸ்ட் மேடைகள்

இந்த மேடைக்கு வரும்போது எனக்குப் பழைய நினைவுகள் யாவும் நெஞ்சில் நிழலாடுகின்றன. கம்யூனிஸ்ட் மேடைகள் தான் என்னை வளர்த்த மேடை கள்; என்னை உருவாக்கிய மேடைகள். நான் கல்லூரி யில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், ‘அறிவொளி இயக்கம்’ என்ற ஒன்றைத் தொடங்கி, “கல்லாமையை இல்லாமையாக்குவோம்” என்று முழங்கிக்கொண்டு, தெருத்தெருவாகச் சென்று வீதி நாடகங்கள் போட் டோம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி னோம். அப்படித் தெருக்களில் நாடகம் போட்டு வளர்ந்த நான், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அதே மண்ணில், அதே கொள்கை மேடையில் வந்து நிற்பதற்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தி ருக்கிறது.

எனக்குச் சிவப்பு நிறம் என்றால் மிகவும் பிடிக்கும். ஏன் சிவப்பு எனக்குப் பிடிக்கும் தெரியுமா? சிவப்பு நிறத்தைப் பார்த்தால் கெட்டவன் பயப்படுவான், திரு டன் பயப்படுவான், ஏமாற்றுபவன் பயப்படுவான், எல்லாவற்றிற்கும் மேலாக அதிகார வர்க்கம் பயப்படும்! ஏழை எளியவர்களை ஒடுக்க நினைக் கும் அதிகார மமதை கொண்டவர்கள் சிவப்பைக் கண்டு அஞ்சுவார்கள். அதனால்தான் எனக்குச் சிவப்பு மிகவும் பிடிக்கும்.

கம்யூனிசம் என்பது மிகவும் எளிமையானது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், எல்லா ரும் எல்லாவற்றையும் பெற வேண்டும் என்பதுதான் அதன் தத்துவம். கம்யூனிஸ்ட் என்பவர் காற்று மாதிரி இருக்க வேண்டும், ஆகாயம் மாதிரி இருக்க வேண்டும், மழை மாதிரி இருக்க வேண்டும். யாரிடம் என்ன கேட்டா லும் பாரபட்சமில்லாமல் வாரி வழங்கும் இயற்கை யைப் போன்றது கம்யூனிசம்.

தமிழ்ப் பண்பாட்டின் கம்யூனிஸ்ட்டுகள்

இந்த உலகத்தின் முதல் கம்யூனிஸ்ட் யார் என்று என்னைக் கேட்டால், நான் ‘திருமூலர்’ என்றுதான் சொல்வேன். கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முன்பே, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று மானுட ஒருமையைப் பாடியவர் அவர். “பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும்” என்று சமத்துவத்தை முழங்கிய வள்ளுவனும் ஒரு கம்யூனிஸ்ட்தான். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலகப் பொதுவுடைமை பேசிய கணியன் பூங்குன்றனாரும் கம்யூனிஸ்ட்தான். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று சக உயிர்களின் பசிப் பிணி கண்டு உருகிய வள்ளலார் கம்யூனிஸ்ட்தான். நம் முண்டாசுக் கவிஞன் பாரதியும், புரட்சிக் கவிஞன் பாரதிதாசனும் கம்யூனிஸ்ட்டுகள்தான்.

நான் கண்ட முதல் கதாநாயகன்

அந்தப் பெருமைமிக்க கம்யூனிச வரிசையில் தான் நான் நமது அப்பா எஸ்.பி. செல்லப்பிள்ளை அவர்களைப் பார்க்கிறேன். நான் பார்த்தபோதெல் லாம் என் கண்ணுக்கு அவர் அப்படித்தான் தெரிந்தார். என் வாழ்வில் நான் தெளிவாகப் பார்த்த முதல் கதா நாயகன் அவர்தான்.

சேத்தூர் பகுதியே ஒரே போர்க்களமாக, பதற்ற மாக இருந்த ஒரு காலகட்டம் அது. எனக்கு அப்போது மிகச் சிறிய வயது. அந்தச் சூழலில் அப்பாவைப் பார்ப்ப தற்கான ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு பக்கம் ஒரு பெரும் கூட்டம், மறுபக்கம் இருக்கிறவர்களை வெட்டிச் சாய்க்க வேண்டும் என்று துடித்துக்கொண்டி ருக்கிறது; இன்னொரு பக்கம் மற்றொரு பெருங் கூட்டம், இந்தத் தரப்பை வெட்டி வீழ்த்த வேண்டும் என்று வெறியோடு நிற்கிறது. இரு தரப்புக்கும் நடுவே சமாதானம் செய்வதற்காகப் பல அரசு அதிகாரிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அப்போது அப்பா தூரத்தில் இருந்து சைக்கிளில் வருகிறார். சைக்கிள் தான் அவருடைய வாகனம். அந்தக் காட்சி இன்னும் என் கண்ணிலேயே நிற்கிறது. சைக்கிளில் அப்பா வருவதைப் பார்த்த உடனே, இந்தத் பக்கம் இருந்த கலவரக் கூட்ட மும் அமைதியாக எழுந்து நிற்கிறது; அந்தப் பக்கம் இருந்த கூட்டமும் அமைதியாக எழுந்து நிற்கிறது; அங்கிருந்த அரசு அதிகாரிகளும் எழுந்து மாரி யாதை செலுத்துகிறார்கள். அப்போதுதான், தோழர் செல்லப்பிள்ளை அவர்கள் தோளில் அணிந்திருந்த அந்தச் சிவப்புத் துண்டினுடைய வீரியத்தை, அது கொடுத்த அந்த கம்பீரத்தை என்னால் உணர முடிந்தது. அதை நினைத்து எனக்குள் மிகவும் பெரு மையாக இருந்தது.

அன்று மேட்டுப்பட்டியில் நான் பார்த்த வீராசாமி மாமா, நாராயணன் மாமா என எல்லாரும் அன்றைக்கு எப்படி இருந்தார்களோ, 35 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த அதே பொறுமை, அதே அமைதி, அதே புன்னகையோடு இன்றும் இருக்கிறார்கள். இவர்கள் தான் எங்களுக்குப் பெரிய பலம். நான் திரையுல கில் ஒவ்வொரு முறை புகழின் உச்சிக்குப் போகும் போதும், உங்களையெல்லாம் தான் நினைத்துக் கொள்வேன். உலகநாதன் அண்ணாச்சி போன்ற மாமனிதர்களை நான் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது கடந்து வந்திருக்கிறேன்.

அப்பா செல்லப்பிள்ளை அவர்கள் தலையிட்ட உடனே அந்தப் பெரும் கலவரப் பிரச்சனைகள் எல்லாம் சுமுகமாக முடித்து வைக்கப்பட்டது. சேத்தூர் பகுதியே ஒரு அமைதிப் பூங்காவாக மாறியது. பெண் கள் அச்சமில்லாமல் வெளியே நடமாடினார்கள். கல வரக் காட்சிகள் எல்லாம் முடிவுக்கு வந்து, மக்கள் மனதிலிருந்த பயம் எல்லாம் நீங்கியது. உடனே எனக்கு அவருடைய வீட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. வீடு தேடிப் போய் உள்ளே நுழைந்தேன். அந்த ஓட்டு வீட்டுக்கு வெளியே ஒரு பெரிய திண்ணை போன்ற இடம் இருக்கும். எல்லா ரோடும் அண்ணன், தம்பி, மாமா, மச்சான் என்றுதான் பழகுவார். என் ஐயா என்னை அவரிடம் அழைத்துப் போவார். என் ஐயா அவரை ‘அண்ணே’ என்றுதான் கூப்பிடுவார். அவர்கள் இருவரும் பேசுவதை உற்று கவனிப்பேன். அதிலிருந்துதான் கம்யூனிசத்தின் மேல் எனக்கு மிகப்பெரிய காதலும் ஈர்ப்பும் உண்டானது.

கம்யூனிஸ்ட் ஆக முயற்சி செய்கிறேன்

கம்யூனிசம் பற்றிப் பேசும்போது, சோவியத் மாமேதை ஸ்டாலின் ஒருமுறை குறிப்பிட்ட வாசகம் எனக்கு நினைவுக்கு வருகிறது. “நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” என்றார் அவர். நூறு சதவீதம் கம்யூனிஸ்ட்டாக யாரும் இருக்க முடியாது. ஆனால், அதை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதுதான் முக்கியம். அப்படித்தான் நாம் ஒவ்வொருவரும். எங்கெல்லாம் அநியாயங்கள் நடக்கிறதோ, அதை எதிர்த்து யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ, அவர்கள் அத்தனை பேரும் நம் சகோதரர்கள் தான். அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர் எவரோ, அவர் நம் நண்பர், நம் சகோ தரர். அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும்.

தோழர் செல்லப்பிள்ளை அப்பா மாதிரி பல கம்யூ னிஸ்ட்டுகள் சுவாசித்த காற்றும், அவர்கள் ஓட்டிய சைக்கிள்களும் தான் இன்னமும் இந்த இயக்கத்தை முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். மூன்று மாதங்களுக்கு முன்னால் அப்பாவைச் சந்திக்க வந்தேன். கையைப் பிடித்துக் கொண்டு, “என்னை அடையாளம் தெரியுதாப்பா?” என்று கேட்டேன். “தெரியுது” என்றார். அதே சிரிப்பு, அதே பொறுமை. அது எனக்குப் பேரன்பின் வெளிப்பாடு.

அக்கா (தோழர் செல்லப்பிள்ளை மகள்) என்னிடம் சொன்னார்கள், “நீ நடித்த படங்கள் என்றால் அப்பா தவறாமல் பார்ப்பார்” என்று. அவர் எங்கு இருந்தாலும் அந்தத் தொடர்பு எங்களுக்கிடையே இருந்து கொண்டே இருந்தது. அவர் சுவாசித்த கொள்கைக் காற்றை நானும் சுவாசிக்கிறேன் என்பது எனக்குப் பெருமை.

தோழர் செல்லப்பிள்ளை காட்டிய வழியில் நாமும் பயணிப்போம். எல்லாருக்கும் எல்லாம் கிடைக் கட்டும்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.