சங் பரிவாரத்தின் வஞ்சக முகத்திரை - எஸ்.பாலா
31 May 2026, 8:27 pm

சங் பரிவாரத்தின் வஞ்சக முகத்திரை - எஸ்.பாலா

சங் பரிவாரத்தைத் தோற்கடிப்பதா அல்லது ஜனநாயகத்தைக் கைவிடுவதா என்ற பிரதானக் கேள்வி இன்று இந்திய மக்கள் முன் எழுந்துள்ளது. இந்தியாவின் இந்த இந்துத்துவா பாசிசச் சூழல் குறித்து ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஏ.ஜி. நூரணி எழுதி, கி. இலக்குவன் தமிழாக்கத்தில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ‘ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும்’ என்னும் நூல். வெளியாகி இருபது ஆண்டுகள் கடந்தும், இன்றைய சூழலை எதிர்கொள்ளும் கருத்தியல் ஆயுதமாக இந்நூல் திகழ்கிறது.

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, வி.எச்.பி, பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகளின் உள்கூட்டு, இரட்டை நிலைப்பாடு மற்றும் தந்திரங்களை இந்நூல் விரிவாக ஆய்வு செய்கிறது. ஆர்.எஸ்.எஸ் தனது தத்துவத்தை அரசியல் அரங்கில் பிரதிபலிக்க உருவாக்கிய ஜன சங்கத்தின் தொடர்ச்சியே பா.ஜ.க ஆகும். ராஷ்டிரிய, தர்மா, சன்ஸ்கிரிதி போன்ற சொல்லாடல்களை வஞ்சகமாகப் பயன்படுத்தி, மனுவாதத்தைக் கலாச்சார நடைமுறையாக ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கிறது. கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உருவாகும் போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பே நேரடியாக ஒரு அரசியல் கட்சியாக மாறக்கூடும் என்ற எச்சரிக்கையையும் நூல் வழங்குகிறது.

காந்தியப் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவர்கள் நடந்துகொண்ட விதம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான அவர்களின் நாசகரச் சிந்தனைகள் என அனைத்தும் அதிகாரப்பூர்வ ஆவணங்களுடன் இதில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. சங் பரிவாரம் மேற்கொண்ட திரிசூல சூழ்ச்சியையும், இந்திய நாஜிப்படையைப் போல பஜ்ரங் தள் நிகழ்த்திய கொடூரங்களையும் நூல் அம்பலப்படுத்துகிறது.

ஜனதா கட்சியில் நீடித்த இரட்டை உறுப்பினர் பிரச்சனை பா.ஜ.க உருவாகக் காரணமாக இருந்த வரலாற்றுப் பின்னணியை விளக்கும் இந்நூல், பா.ஜ.க என்பது வெறும் அரசியல் கட்சி அல்ல; அது ஆர்.எஸ்.எஸ் தத்துவத்தின் நேரடிப் பிரதிபலிப்பு என்பதை நிறுவுகிறது. சங் பரிவாரத்தின் ஆதிக்கக் கொள்கைகளை வீழ்த்த விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய தத்துவார்த்தக் கையேடு இது.