திருச்சி விரைவு செய்திகள்
28 Mar 2026, 4:13 pm

கபிஸ்தலம் அருகே ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்

பாபநாசம், மார்ச் 28- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே உம்பலாப்பாடி, மேட்டுத் தெருவில், தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழு 1 பிரிவு 1, அலுவலர் அஸ்லபா தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கபிஸ்தலத்திலிருந்து திருவையாறு நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தில், கபிஸ்தலத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரிடம் முறையான ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.1,06,400-ஐ பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். உதவி தோட்டக் கலை அலுவலர்கள் வரதராஜன், ராஜா, முதுநிலை வருவாய் ஆய்வாளர் சுந்தரேசன் உடனிருந்தனர்.

ஓடும் காரில் தீ விபத்து: 6 பேர் உயிர் தப்பினர்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 28- திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் கீழ கார்த்திகைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவர், திருச்சி மாநகரில் பொருட்கள் வாங்குவதற்காக தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டார். காரில் மொத்தம் ஆறு பேர் இருந்தனர். அந்த கார் திருப்பராய்த்துறை டோல்கேட் அருகே வந்தபோது எஞ்சினில் இருந்து புகை வந்தது. உடனே கார்த்திகேயன் காரை நிறுத்திவிட்டு அதை அணைக்க முயன்றார். ஆனால் திடீரென தீ பிடித்து கார் முழுவதும் பற்றி எரிந்தது. இது பற்றி குளித்தலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்கு முன்னதாக கார் முற்றிலும் எரிந்தது. இதுபற்றி பெட்டவாய்த்தலை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு 2 லாரிகள், ஜேசிபி பறிமுதல்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 28- திருச்சிராப்பள்ளி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குண்டூர் - புதுக்கோட்டை மெயின் சாலையில், வெள்ளியன்று இரவு கனிமவளத் துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, லாரியை ஓட்டி வந்த திருவெறும்பூர் தாலுகா, துவாக்குடி மலை தெற்கு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (44) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், மணப்பாறையை அடுத்த வையாம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துப்பாரி - வடக்கு அம்மாபட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அங்கே சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்த காவல்துறையினர் அங்கிருந்த டிப்பர் லாரி மற்றும் மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட ஜேசிபி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 4 யூனிட் கிராவல் மணலும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வடக்கு அம்மாபட்டியைச் சேர்ந்த திருப்பதி (37), அண்ணா நகரைச் சேர்ந்த தெக்கமலை (36), மணப்பாறையைச் சேர்ந்த பால்ராஜ் (40), ஜேசிபி ஓட்டுநர் சுரேஷ் மற்றும் உரிமையாளர் அழகர் ஆகிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்மார்ட் மீட்டரை தனியார் மயப்படுத்துவதை கைவிட கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, மார்ச் 28- தமிழ்நாடு மின்சார வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி அஜந்தா ஹோட்டலில் மாநிலத் தலைவர் ஜெ.எல். பாஸ்டின்ராஜ் தலைமையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. திருச்சி மின் வட்டச் செயலாளர் சிவச்செல்வன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் சேக்கிழார் உரையாற்றினார். கூட்டத்தில், அலுவலர்களுக்கு, பொறியாளர்களுக்கு, தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் நான்கு ஆண்டுக்கு ஒருமுறை என்ற கால அளவில் வழங்க வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி 9,613 கேங்மேன் பணியாளர்களையும் ஒரே நேரத்தில் கள உதவியாளர்களாக பதவி மாற்றம் செய்திட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் உள்ளிட்ட தனியார் மயப்படுத்துதலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் பழனி நன்றி கூறினார்.

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

அருமனை, மார்ச் 28- குமரி மாவட்டம், அருமனை அருகே இடைக்கோடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார். வன்னியூர் பரக்குன்று துவரச்சன் விளையை சேர்ந்தவர் வினு(30) .இவர் அப்பகுதிகளில் மது விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இடைக்கோடு அம்பச்சன் விளை பகுதியில் மது விற்பனை செய்வதாக தெரிய வந்தது. அருமனை போலீசார் வினுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இவரிடமிருந்து 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள்

கரூர், மார்ச் 28- தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, கரூர் மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட கணினி முறை குலுக்கல் மார்ச் 25 அன்று நடத்தப்பட்டது. அதனடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட 5,332 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சம்மந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால், முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியிலும், கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு. ரவிகுமார் பார்வையிட்டார். இந்த பயிற்சி வகுப்பின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மோகன்ராஜ் (கரூர்), பிரபாகரன் (அரவக்குறிச்சி), மதியழகன் (கிருஷ்ணராயபுரம்), இந்துமதி (குளித்தலை) மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.31 லட்சம் பறிமுதல்

நாகர்கோவில், மார்ச் 28- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் தலா 18 பறக்கும் படை களும், 18 நிலையான கண்காணிப் புப் படைகளும் 8 மணி நேரச் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மார்ச் 27 முதல் 28 ஆம் தேதி காலை வரையிலான சோத னையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மேலும் ரூ.52,800 கைப்பற்றப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் தற்போது வரை மாவட்டம் முழுவதும் மொத்தம் ரூ.31,01,210 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக மாவட்டத் தில் அதிகபட்சமாகக் குளச்சல் தொகுதியில் ரூ.8,69,150-ம், கிள்ளியூர் தொகுதியில் ரூ.6,90,790 பறி முதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் ரூ.5,49,370, நாகர்கோவில் தொகுதியில் ரூ.4,30,400, கன்னியாகுமரி தொகுதியில் ரூ.3,02,500 மற்றும் பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.2,59,000 என மொத்தம் 31 லட்சத்து 1 ஆயிரத்து 210 ரூபாய் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றதற்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,பொதுமக்கள் பெருந்தொகை யைக் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்களை உடன் வைத்திருக்கவேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள்

கரூர், மார்ச் 28- தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, கரூர் மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட கணினி முறை குலுக்கல் மார்ச் 25 அன்று நடத்தப்பட்டது. அதனடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட 5,332 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சம்மந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால், முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியிலும், கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு. ரவிகுமார் பார்வையிட்டார். இந்த பயிற்சி வகுப்பின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மோகன்ராஜ் (கரூர்), பிரபாகரன் (அரவக்குறிச்சி), மதியழகன் (கிருஷ்ணராயபுரம்), இந்துமதி (குளித்தலை) மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குமரி சோதனைச் சாவடிகளில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பெண் போலீசார்

நாகர்கோவில், மார்ச் 28- தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிக்காக போலீசார் 3 ஷிப்ட் முறைகளில் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக பகல் நேரங்களில் மட்டுமே சோதனைச்சாவடி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்த பெண் போலீசார், தற்போது இரவு நேர பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இரவு நேர பணியில் பெண் போலீசாருக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சோதனைச் சாவடிகளில் கழிவறை வசதி இல்லாததால், பெண் போலீசார் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பகல் நேரங்களில் அவசர தேவைகளுக்காக சோதனைச்சாவடியை சுற்றியுள்ள வீடு களில் உள்ள கழிவறைகளை பெண் போலீசார் பயன்படுத்தி வந்தனர். ஆனால், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். பெண் போலீசாரின் இந்த அவல நிலை குறித்து சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கவலை தெரிவித்து உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், தேர்தல் பாதுகாப்பு பணி முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பெண் போலீசாரை இரவு பணியில் அமர்த்தும் போது அவர்களுக்கு தேவையான குறைந்தபட்ச அடிப்படை வசதிகளான கழிவறை மற்றும் பாதுகாப்பு வசதிகளை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். வசதிகள் செய்துதர முடியாத பட்சத்தில், பெண் போலீசாரை இரவு பணியில் அமர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளனர். தேர்தல் ஆணையமும், மாவட்ட காவல்துறையும் தலையிட்டு, களப்பணியில் உள்ள பெண் போலீசாரின் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கீழக்கரையில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பது எப்போது?: பொதுமக்கள் கேள்வி

இராமநாதபுரம், மார்ச் 28- இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட புது கிழக்கு தெரு பகுதியில், 2023–24 ஆம் ஆண்டுக்கான 15வது ஒன்றிய–மாநில சுகாதார நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும் செலவில் அமைக்கப்பட்ட இந்த சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டு மாதங்கள் கடந்தும், முழுமையான சேவைகள் வழங்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்டிடம் தயாராக இருந்தும், தேவையான மருத்துவ உபகரணங்கள், நிரந்தர மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்யப்படாததே இந்த நிலையம் செயல்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் தொலைதூர மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது. குறிப்பாக முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். “மக்கள் நலனை முன்னிட்டு அரசு திட்டம் அறிவித்து, கோடிக்கணக்கில் நிதி செலவழித்தும், அதனை முறையாக செயல்படுத்தாதது வரிப்பணத்தை வீணடிப்பதாகும்” என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இந்த நிலையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். சில சமூக ஆர்வலர்கள், “கட்டிடம் கட்டுவது மட்டுமே திட்டத்தின் நிறைவு அல்ல; மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாவிட்டால் அதன் பயன் எதுவும் இல்லை” எனக் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து ஆய்வு செய்து, மருத்துவ சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.