ரயில்வே டெக்னீசியன் பணியிடங்கள்: விண்ணப்பத் தேதியை நீட்டிக்க ஆர்.சச்சிதானந்தம் எம்பி வலியுறுத்தல்!
12 Jul 2026, 4:27 pm

இந்திய ரயில்வேயில் டெக்னீசியன் பணியிடங்களுக்கான விண்ணப்பத் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் (RRB) தலைவருக்குத் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 6,557 டெக்னீசியன் (Technician Grade I & Grade III) பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ரயில்வேயின் குறைந்தபட்ச பணியாளர் தேவையை பூர்த்தி செய்ய இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இருப்பினும், ரயில்வே வளர்ச்சி மற்றும் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையையும் மேலும் அதிகரிப்பது அவசியமாகும்.

காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்ப தேதி 30-06-2026 அன்று துவங்கி 29-07-2026 அன்று நிறைவடைகிறது.

இதற்கிடையில், CEN No.02/2026 அறிவிப்பின் பிரிவு 3.2-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கல்வி/தொழில்நுட்பத் தகுதிக்கான இறுதித் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் இளைஞர்களின் எதிர்கால வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. தற்போது விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 29.07.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் உள்ள திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் பயிற்சித் தலைமை இயக்குநர், 2024-2026 ஆம் ஆண்டுக்கான கைவினைஞர் பயிற்சித் திட்ட (CTS) தேர்வுகளை நடத்தி, அதன் முடிவுகளை 10/08/2026 அன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளார். இதனால், 12 நாட்கள் இடைவெளியில் தகுதியான இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது வேலையில்லாத இளைஞர்களின் எதிர்கால வாய்ப்புகளைப் பறிக்கிறது. CEN No.02/2026-க்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் தேதியை 15 நாட்கள் அல்லது அதற்கும் மேலாக நீட்டிக்க வேண்டும் என அவர்கள் கோருகின்றனர். இந்தக் கோரிக்கை நியாயமானதாகும்.

புதிய மாணவர்களும் தேர்வில் பங்கேற்று வளமான எதிர்காலத்தைப் பெறுவதற்கு ஏதுவாக, விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதித் தேதியை 29/08/2026 வரை ஒத்திவைக்க வேண்டும்.