திருச்சி விரைவு செய்திகள்
27 Feb 2026, 5:32 pm

குடிநீர் உறைகிணற்றில் மின் வயர் திருட்டு வீரபாண்டியில் ஒருவர் கைது

தேனி ,பிப்.27- வீரபாண்டியில் உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி க்கு சொந்தமான குடிநீர் உறை கிணற்றில் அமைக்கப் பட்ட மின் மோட்டாரில் மின் வயரை திருடியவரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு சொந்த மான குடிநீர் உறை கிணறு உள்ளது .மின் மோட்டார் அமைக்கப்பட்டு பழனிசெட்டிபட்டி பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது .நீரூற்று நிலையில் இரண்டில் ஒன்றில் தண்ணீர் வரவில்லை என்ற புகாரைத் தொடர்ந்து பேரூராட்சி பணியாளர்கள் சென்று பார்த்த போது ,ஒருவர் வயரை வெட்டி சுருட்டி கொண்டிருந்தார் .அவரை பிடித்து வீரபாண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர் .விசாரணையில் கூழையனூரை சேர்ந்த கருப்பையா மகன் நந்தேஷ்குமார் (36) என்பது தெரியவந்தது .

தொழிலாளி கொலை : 7 பேருக்கு ஆயுள் தண்டனை

தேனி,பிப்.27- பெரியகுளம் அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தேனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது பெரியகுளம் அருகே எண்டபுளி காட்டுநாயக்கர் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி முருகன்(44). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த அக்கம்மாள்(40) என்பவருக்கும் இடப்பிரச்சினை ஏற்பட்டது. இதில் இருதரப்புக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. 2020-ம் ஆண்டு நவ.14-ம் தேதி தீபாவளி அன்று முருகன் தனது தெருவில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அக்கம்மாள் இங்கு பட்டாசு வெடிக்கக்கூடாது என்று ஜாதியைச் சொல்லி திட்டியதால் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. இதில் அக்கம்மாள் தரப்பைச் சேர்ந்த ராஜா(18), சரவணன்(22), சந்தோஷ்(18), கோபிநாத்(22), வைரவேல்பாண்டி(21), பூர்ணவேல்(23) ஆகியோர் முருகனை தாக்கி கீழே தள்ளினர். இதில் அவர் மரணமடைந்தார். புகாரின் பேரில் பெரியகுளம் போலீஸார் 7பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு தேனி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞராக இசக்கிவேல் ஆஜரானார். விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி அனுராதா ஏழு பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஏலக்காய் வியாபாரியை மிரட்டிய ரவுடி கைது

போடி, பிப். 27 போடியில் ஏலக்காய் வியாபாரியை மிரட்டிய ரவுடியை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். போடி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் முகமது நாசர் மகன் முகமது ஹாஜி (30). இவர் ஏலக்காய் வியாபாரம் செய்து வருகிறார். வெள்ளிக்கிழமை கிருஷ்ணாநகர் பகுதியில் மோட்டார் பைக்கில் சென்றுள்ளார். அப்போது போடி வருவாய் ஆய்வாளர் தெருவில் வசிக்கும் லட்சுமணன் மகன் ஹிதேந்திரா (23) என்பவர் வழிமறித்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஹிதேந்திராவை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஹிதேந்திரா மீது பல்வேறு காவல் நிலையங்களில் 12 வழக்குகள் உள்ளது. காவல் நிலைய ரவுடிகளின் பட்டியலிலும் ஹேதேந்திரா உள்ளார்.