சீத்தாராம் யெச்சூரி நினைவுச் சொற்பொழிவு வரலாறு என்பது நம்பிக்கை அல்ல; சான்று! - பேரா. ரொமிலா தாப்பர்
yesterday

சீத்தாராம் யெச்சூரி நினைவுச் சொற்பொழிவு வரலாறு என்பது நம்பிக்கை அல்ல; சான்று! - பேரா. ரொமிலா தாப்பர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பொதுச்செயலாளர் - மார்க்சிய அறிஞர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் இரண்டாம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு, அக்டோபர் 25 அன்று புதுதில்லி ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில் நடைபெற்றது. பண்டைய இந்திய வரலாற்றியலின் தலைசிறந்த அறிஞரான பேராசிரியர் ரொமிலா தாப்பர், “வரலாற்றியலும் தொடக்ககால இந்திய வரலாறும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். வரலாற்றை யார் எழுதினார்கள், எந்தச் சான்றுகளைக் கொண்டு, எந்த நோக்கத்தோடு எழுதினார்கள் என்று ஆராயும் துறைதான் “வரலாற்றியல்”. காலனிய ஆட்சியாளர்கள் கட்டமைத்த தவறான வரலாற்றையே இன்று இந்துத்துவா சக்திகள் புதுச்சட்டை போட்டு முன்வைப்பதை அவர் ஆழமாக அம்பலப்படுத்தினார். அவரது உரையின் சுருக்கம் : தொகுப்பு : எஸ்.பி.ஆர்.

இந்தப் பொருள் குறித்து சிலகாலத்துக்கு முன் சீத்தாராமோடுஒருமுறை சுருக்கமாக உரையாடியிருக் கிறேன். அதை விரிவாக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்றைய உரை ஒருவகையில் அந்த உரையாடலின் தொடர்ச்சி.

இளம் வயதில் பண்டைய இந்திய வரலாற்றைப் படிக்க முடிவு செய்தபோது, அதிகம் பேர் ஆர்வம் காட்டாத ஒரு துறை யில், யாருடைய தொந்தரவும் இல்லாத அமைதியான ஆய்வு வாழ்க்கையையே கற்பனை செய்தேன். ஆனால் நடந்தது நேர்மாறானது. பண்டைய வரலாறு குறித்துபுதிய கேள்விகளை எழுப்பிய எங்களில் சிலர், சமூக ஊடகங்களில் ஓயாமல் தாக்கப்படுகிறோம். காரணம், காலனிய அதிகாரிகள் கட்டமைத்த கடந்த காலத்தைநாங்கள் கேள்வி கேட்கிறோம். அதே கட்டமைப்பைத்தான் இன்று இந்துத்துவா போன்ற சித்தாந்தங்கள் தொடர்கின்றன. நவீன காலத்துக்கு முந்தைய வரலாறு இன்று கடும் சர்ச்சைக்குரிய தாகிவிட்டது. அதே சமயம், எங்கள் எழுத்துகளைப் படித்து, அவை பயனுள்ள புதிய திசைகளைக் காட்டுவதாகக் கருதுவோரும் ஏராளம். இது எப்படி நடந்தது என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். இந்திய வரலாற்றுக்கான காலனிய விளக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கிய தலைமுறையைச் சேர்ந்தவள் நான். விடுதலைக்குப் பிறகு, நம்பகமானசான்றுகளின் அடிப்படையிலும் பகுத்தறிவு விளக்கங்களின் அடிப்படையிலும் வரலாற்றை அணுகும் போக்குவலுப்பெற்றது. வரலாற்று விளக்கங்கள் தொடர்பாக செல்வாக்கு செலுத்தியவர்கள்யார், அவர்கள் ஏன் அப்படிச்சிந்தித்தார்கள் என்று நாங்கள் ஆராயத் தொடங்கினோம். இதுதான் வரலாற்றியல்.

வரலாற்றுக்கும் ஓர் அறிவியல் முறை உண்டு

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, நிகழ்வுகள் எங்கே, எப்போது நடந்தனஎன்று சொல்வதே வரலாறாக இருந்தது. அதன் பிறகு இரண்டு கூர்மையான கேள்விகள் எழுந்தன: நிகழ்வுகள் ஏன், எப்படி நடந்தன? அவற்றின் விளைவுகள் என்ன?ஒரு சமூகத்தின் கட்டமைப்பு, பொருளாதாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றைத் தனித்தனி அறைகளாகப் பார்க்காமல்,அவற்றுக்கு இடையிலான தொடர்பு களோடு ஆராய வேண்டியதானது. வர லாற்று ஆதாரங்களை எழுதியவர்கள்யார்,அவர்களுக்கு ஏதேனும் உள்நோக்கம் இருந்ததா என்று கேட்பதும் முக்கியமானது.

“அறிவியலுக்கு ஒரு முறை உண்டு; வரலாற்றுக்கு எப்படி முறை இருக்க முடியும்?” என்று பலர் கேட்கிறார்கள். இருக்கிறது. ஆய்வுப் பொருளைத் தீர்மானிப்பது, நூல்களும் தொல்பொருள்களும் உள்ளிட்ட ஆதாரங்களைக் கண்டறிவது, அவற்றின் நம்பகத்தன்மையைச் சோதிப்பது, சான்றுகளை நிகழ்வோடு பொருத்தித் தர்க்கரீதி யான காரண விளக்கம் தருவது – இதுதான் அந்த முறை. நிரூபிக்கப்பட்ட,நம்பகமான சான்றுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற பிடிவாதம்தான் தொழில்முறை வரலாற்றாசிரியரை, தனிப்பட்ட கருத்துகளையே வரலாறு என்று எழுதுபவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.

வரலாற்று விளக்கத்தில் ஒரு சித்தாந்தத்தைப் பயன்படுத்துவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த விளக்கம் நம்பகமான சான்றுகளின் அடிப்படையில் அமைய வேண்டும்; ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு முன் கேள்விகளுக்குத் திறந்தமுறையில் பதில் சொல்வதாக இருக்க வேண்டும். சான்றுகளை முதலில் பகுப்பாய்வு செய்யாமல் எந்தச் சித்தாந்தமும் வரலாற்றை விளக்க முடியாது.

பாடநூலுக்குள் புகும் “பாப்” வரலாறு

சரிபார்க்கப்பட்ட சான்றுகள் இல்லாமல், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் “பாப்” வரலாற்றை இதுவரை புறக்கணித்து வந்தோம். ஆனால் அதுவே பாடநூல்களின் அடிப்படையாகி, ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை முன்னெடுக்கும் நோக்கத்தோடு பாடத்திட்டத்திலும் அதிகாரப்பூர்வ வரலாற்றிலும் சேர்க்கப்படும்போது, தொழில்முறை வரலாற்றாசிரியர்அதை மதிப்பிட்டே ஆக வேண்டும்.

இந்துத்துவா பரப்பும் வரலாற்றின் இயல்புகள் இவை: இந்துப் பெரும்பான்மை வாதத்தைக் கடந்த காலத்தின் முதன்மைக் காரணியாக்குவது;அதையே “இந்து தேசத்தின்” வரலாறாக்குவது; அதன் அடிப்படையில் இந்து ராஷ்டிரத்தை நியாயப்படுத்துவது.இதற்காக, தொடக்க காலத்தில் இந்து சமூகம் இன்பமயமான நீண்ட பொற்காலத்தில் வாழ்ந்ததாகவும், முஸ்லிம்ஆட்சியாளர்கள் வந்த பிறகே இந்துக்கள் பலிகடாக்களானதாகவும் சொல்லப்படுகிறது. தொழில்முறை வரலாற்றாசிரியர்களின் ஆய்வுகளில் இதற்குஎதிரான வலுவான சான்றுகள் உள்ளன. ஆனால் அவை புறக்கணிக்கப்படுகின்றன, அல்லது பாரபட்சமானவைஎன்று ஒதுக்கப்படுகின்றன.

இந்த வாசிப்பை ஏற்காத அனைவருக்கும், சமூக–பொருளாதார வரலாற்றை ஆராயும் அனைவருக்கும் இன்று “மார்க்சியர்” முத்திரை குத்தப்படுகிறது – அவர்கள் உண்மையில் மார்க்சியர்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமலே! அனைத்துத் தரப்புச் சமூக அறிவியலாளர்களும் சான்றுகளைப் பகுப்பாய்வு செய்கிறார்கள்; எந்தவரலாற்று விளக்கத்துக்கும் அதுவே முதல் படி என்பது உணரப்படுவதில்லை. இன்றைய அதிகாரப்பூர்வ வரலாறுகளில் இருப்பது தேங்கிப்போன, வறண்டவரலாற்றியல். இந்தியாவின் சமூக மாற்றம் குறித்து நடந்த மார்க்சிய, வெபரிய (வெபரிய - ஜெர்மானிய சமூகவியலாளர் மாக்ஸ் வெபர் அவர்களது சிந்தனை வழி) விவாதங்கள் எதன் சுவடும் அவற்றில் இல்லை.

தொல்லியல் முதல் மரபியல் வரை

வரலாறு மெல்ல மெல்லச் சமூக அறிவியல்களில் ஒன்றானது. மானுடவியல், சமூகவியல், மக்கள்தொகையியல் போன்ற துறைகளோடு இணைந்த பல்துறை ஆய்வுகள் வளர்ந்தன. இன்று வேத காலத்தை ஆய்வு செய்யும்போது, வேதநூல்களோடு நின்றுவிடுவதில்லை. பொருள்சார் பண்பாட்டுக்குத் தொல்லியல், மொழி ஆய்வுக்கு மொழியியல்புதிய பண்பாட்டைஉருவாக்க ஒன்றுகூடிய மக்கள் யார் என்று கண்டறிய மரபியல் – அனைத்தும் தேவை. இதற்கு, இந்தப் பல்வேறுதுறைகளோடும் அவை வழங்கும் சான்றுகளின் தன்மையோடும் வரலாற்றாசிரியருக்குப் பரிச்சயம் வேண்டும். அதேபோல, வரலாறு எழுதுவதாகக் கூறிக்கொள்ளும் எவருடைய சித்தாந்தப் பின்புலம் என்ன என்பதையும் அறியவேண்டும்.

ஒரு விளக்கம் சான்றுகளின் அடிப்படையில் அமைந்ததா, அல்லது ஆசிரியரின் சித்தாந்த விசுவாசத்தை வெளிப்படுத்து வதற்கானதா? அது கடந்த காலத்தை விளக்குவதற்காக மட்டும் சொல்லப்படு கிறதா, அல்லது நிகழ்காலம் சார்ந்த உள்நோக்கம் கொண்டதா? கடந்த காலத்தில் ஒருபோதும் இல்லாத அள வுக்கு இன்று வரலாறு பொதுவெளியில்பயன்படுத்தப்படுவதால், இவை அடிப்படையான கேள்விகள். காலனிய காலத்தில்வரலாற்று எழுத்து நமக்கு அறிமுகமான விதத்திலும், தவறு என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்த வரலாறு சற்றே வேறு மொழியில் அலங்கரிக்கப்பட்டுத் தொடர்வதிலும் தான் இதற்கான விடை இருக்கிறது.

“கீழைத்தேய எதேச்சதிகாரம்” என்ற கற்பிதம்

இருநூறு ஆண்டுகளுக்கு முன், ஆசியா முழுவதும் “கீழைத்தேய எதேச்சதிகாரிகளின்” பிடியில் இருந்ததாக ஐரோப்பியர்கள் கருதினர். (கீழைத்தேயம் என்றால் கிழக்கத்திய நாடுகள் - அதாவது ஆசியநாடுகள்) பரந்த விவசாயிகள் உழைத்து உருவாக்கிய செல்வத்தை அதிகார வர்க்கம் எதேச்சதிகாரியிடம்கொண்டு சேர்த்தது; அது மாற்றமே இல்லாத தேங்கிய சமூகம்; எனவே அதற்கு வரலாறேதேவையில்லை என்பது அவர்கள் பார்வை.மாற்றம் ஐரோப்பிய வரலாற்றுக்கு மட்டுமே உரியது; ஆசியா உறைந்து கிடந்தது என்றனர்.மார்க்ஸ், புராதனப் பொதுவுடைமையி லிருந்து அடிமைமுறை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் என உற்பத்திமுறைகள் மாறிச் செல்வதை விளக்கினார். எல்லாச்சமூகங்களும் இதே பாதையில் செல்கின்றனவா என்பது கேள்வி. ஒரு வாசிப்பை மார்க்சியம் என்று சொல்ல, இந்த முறைகள் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலுக்குப் பொரு ந்துமா என்று சோதிக்கவேண்டும். 1970, 80-களில் குப்தர்களுக்குப் பிந்தைய காலம் நிலப்பிரபுத்துவக் காலமா என்ற பெரும் விவாதம்இந்தியாவில் நடந்தது. அது இறுதி விடையைத் தரவில்லை; ஆனால் “இருண்ட காலம்” என்று ஒதுக்கப்பட்டகாலகட்டம் குறித்துப் புதியஆய்வுகளைத் தூண்டியது. ஒரே மாதிரியைத் திரும்பத் திரும்பச் சொல்வதற்கும், காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றங்களைத் தேடுவதற்கும் இடையிலான வேறுபாடு இதுதான்.

“இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வே இல்லை”?

இந்தியாவில் வரலாற்று உணர்வே இல்லை, கிரேக்க – ரோமானியர்களைப் போன்ற வரலாற்று நூல்களே இல்லை என்று காலனிய அறிஞர்கள் கூறினர். ஆனால் “இதிகாசம்” என்ற சொல்லே கடந்த காலத்தைப் பதிவு செய்யும் ஒருவழியைக் குறிக்கிறது. விஷ்ணு புராணம், புராணக் கதையில் தொடங்கி, மகதம் முதல் குப்தர்கள் வரையிலானஓரளவு நம்பகமான வம்சாவளிகள் வரைக்கும் சொல்லப்படுகிறது.பாணபட்டர் எழுதிய ஹர்ஷசரிதம், சந்தியாகர நந்தி எழுதிய ராமசரிதம் போன்றவாழ்க்கை வரலாறுகள் வெறும் புகழ்பாடல்கள் அல்ல. அரசனின் பெரும் படை முகாமிட்டதால் கிராம மக்கள் பட்ட துன்பத்தை ஹர்ஷசரிதம் பதிவுசெய்கிறது. எருமை மீது சவாரி செய்த உள்ளூர்த் தலைவர்களின் கிளர்ச்சியை ராமசரிதம் குறிப்பிடுகிறது; இதைச் சிலர் விவசாயிகள் கிளர்ச்சியாகவும், சிலர் நிலப்பிரபுக்களின் எதிர்ப்பாகவும் வாசிக்கின்றனர்.பன்னிரண்டாம் நூற்றாண்டில் கல்ஹணர் எழுதியகாஷ்மீர் வரலாறான “ராஜதரங்கிணி”, ஆட்சிமுறை குறித்த ஆழ்ந்த சிந்தனை கொண்ட உயர்தர வரலாற்று நூல்.சுல்தானிய, முகலாய அரசவைகளில் பாரசீக மொழியில் வரலாறுகள் எழுதப்பட்டன. ஃபிரோஸ் ஷா துக்ளக், படிக்கவே முடியாத கல்வெட்டுகளைக் கொண்ட அசோகர் தூணைத் தில்லியில் தன் கோட்டையின் உச்சியில் நிறுவினார். முகலாயர்கள் நினைவுக் குறிப்புகள் எழுதினர்; சமஸ்கிருத நூல்களைப் பாரசீகத்தில் மொழிபெயர்த்தனர். கடந்த காலச்சின்னங்களுக்கு மரியாதை அளிப்பதன் மூலம் புதிய ஆட்சியாளர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொண்டனர். இத்தனைக்குப் பிறகும் இந்தியாவில் வரலாற்று உணர்வே இல்லை என்று எப்படிச்சொல்ல முடியும்?

கல்வெட்டுகள் சொல்லும் உண்மை

கல்லிலும் செப்பேடுகளிலும் பொறிக்கப்பட்ட ஏராளமான கல்வெட்டுகள், புராணகாலக் கணக்கிலிருந்து வேறுபட்ட, கணிதஅடிப்படையிலான காலவரிசையோடு ஆளும் மரபுகளைப் பதிவு செய்தன. தொடக்கத்திலேயே கல்வெட்டுகளைமுதன்மை ஆதாரமாகக் கொண்டிருந்தால், மத நூல்களை மட்டுமே வைத்து வாசித்ததிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இந்திய வரலாறு கிடைத்திருக்கும்.“தம்மம்” என்ற அறநெறியை முன்வைத்த அசோகரின் கல்வெட்டுகள் முதல், குப்தர்களுக்குப் பிந்தைய கல்வெட்டுகள் வரை – நில உறவுகள், கால்நடை கவர வந்தோரிடமிருந்து கிராமவாசிகள் தங்களைக் காத்தது, வரிகள், வணிகப்பரிவர்த்தனைகள், சாதி உறவுகள், சதி, மதஅமைப்புகளுக்கான கொடைகள் என ஒரு சமூகத்தின் முழுச் சித்திரத்தையும் அவைதருகின்றன. ஆக, வரலாறு எழுது வதற்கான தகவல்கள் குறைவாக இருக்கவில்லை. சமூக, பொருளாதார வரலாற்றுக்கு இவை பெரும் உந்துதல் அளித்தன. சிலகல்வெட்டுகளைக் காலனிய அறிஞர்களே படித்தறிந்திருந்தும், இந்தியாவில் வரலாறே இல்லை என்று அவர்கள் ஏன் இவ்வளவு கடுமையாக வாதிட்டார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.பல கல்வெட்டுகளை எழுதியவர்கள் பிராமணர் அல்லாத எழுத்தர்கள், பாணர்கள், வம்சாவளி பாடுவோர் என்பதால் அவை குறைவான கவனம் பெற்றனவா? எப்படியிருந்தாலும், “வரலாறேஇல்லை” என்று வலிந்து கூறியதன் மூலம், காலனிய நலன்களுக்கு ஏற்ப தாங்களே புனைந்த வரலாற்றைத் திணிப்பது அவர்களுக்கு எளிதானது.

மில்லின் “இரு தேசக் கோட்பாடு”

1817 முதல் வெளியான ஜேம்ஸ் மில்லின் “பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு”, இந்தியா இந்து, முஸ்லிம் என்ற இரண்டு தேசங்களைக் கொண்டது, இவை நிரந்தரப் பகைவர்கள் என்று வாதிட்டது.இது ஒரு விநோதமான கண்டுபிடிப்பு. மதம்நம்பிக்கை சார்ந்தது; ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. ஆனால் ஒருநிலப்பரப்பு, ஒன்றுபட்ட சமூகம், சுதந்திர மான அரசியல் அலகு ஆகியவற்றோடு அடையாளப்படுத்தப்படும்“தேசம்” என்ற கருத்தாக்கம் ஐரோப்பாவில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. தேசத்தை மதத்தோடு இணைத்ததே பெரும் குழப்பம்.

கடந்த காலத்தில் பல வகைப் பகைமைகள் இருந்தன. இஸ்லாத்துக்கு முன்பே இந்து மன்னர்கள் நிலத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் ஒருவரோடு ஒருவர் போரிட்டனர். பிராமணியத்தைக் கேள்வி கேட்ட பௌத்தம், சமணம்,ஆசீவகம் ஆகியவை “நாத்திகர்களின் மதங்கள்” என்று தாக்கப்பட்டன. சமணம் கர்நாடகம், குஜராத்துக்குள் சுருங்கியது; பௌத்தம்நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டது; ஆசீவகம் மறைந்தது.

பிற்காலத்தில் இந்து, முஸ்லிம் மன்னர்களுக்கு இடையிலான மோதல்களும் பெரும்பாலும் நிலத்துக்காகவும் அதிகாரத்துக்காகவுமே நடந்தன. 1576 ஹல்திகாட்டி போர் இதற்குச் சிறந்த உதாரணம். ராணா பிரதாப்பின் படையின் முன்னணியில் நின்றது ஹக்கீம்கான் சூர் தலைமையிலான ஆப்கானியப்படை. முகலாயப் படையை வழிநடத்தி வெற்றி பெற்றவர் ராஜபுத்திர மன்னர் ராஜா மான் சிங். இந்தப்போரைத்தான் இன்று “முஸ்லிம் படையெடுப்பாளர்களுக்கு எதிராக இந்து மதத்தைக் காக்கும் போர்”என்று மாற்றிச் சொல்கிறார்கள். ஒவ்வொரு மோதலையும் மதப் பகைமையாகக் காட்டுவது முற்றிலும் ஏற்க முடியாதது.

ஜேம்ஸ் மில்லின் கோட்பாடுதான் இரு தேசக் கோட்பாட்டுக்கு மூலம். முஸ்லிம் லீக்கும் இந்து மகாசபையும் அதை அரசியலாக்கின. மதச்சார்பற்ற தேசியவாதிகளின் எதிர்ப்பு போதுமான அளவு வலுவாகஇல்லை. 1947 பிரிவினைக்கு அது வரலாற்றுஆதாரம் போல ஆனது; இன்றும் மத மோல்களைத் தூண்டப் பயன்படுகிறது. இந்திய வரலாற்றை இந்து, முஸ்லிம், பிரிட்டிஷ் காலங்கள் என்று பிரித்ததும்ஜேம்ஸ் மில்தான்; வரலாற்றாசிரியர்கள் அதை இன்று முற்றிலும் கைவிட்டுவிட்டனர்.வரலாற்றைக் காலனியச் சுவடுகளி லிருந்து விடுவிக்க வேண்டும் என்று இந்துத்துவாவாதிகள் பேசுகிறார்கள். உண்மையில் அது அவசரத் தேவைதான்; தொழில்முறைவரலாற்றாசிரியர்கள் அதைச் செய்து வருகிறார்கள். ஆனால்உண்மையான காலனிய நீக்கம்,இந்துத்துவா சித்தாந்தத்தையே கேள்விக்குள் ளாக்க வேண்டும். ஏனெனில் அது மில்லின் கோட்பாட்டின் தொடர்ச்சி. மததேசியவாதம், சமூகங்களுக்கு இடையே ஏராளமாக நடந்த ஊடாட்டங்கள் குறித்த ஆய்வையே மறுதலிக்கிறது.ஆனால் மோதல்களையும் நட்புறவுகளையும் - இரண்டையுமே வரலாற்றியல் விளக்கக்கோருகிறது; இரண்டுமே வரலாற்றை வடிவமைத்தன. மதக் காரணிகள் பொருத்தமாக இருக்கும் இடங்களில்கூட,அவை வரலாற்று விளக்கத்தை தன்வய மாக்கக் கூடாது.

“ஆரிய இனம்” என்ற கட்டுக்கதை

சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் ஆகியவை தொடர்புடைய மொழிகள் என்று வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர்போன்ற ஐரோப்பிய மொழியியலாளர்கள் வாதிட்டனர். தொடர்புடைய மொழி பேசுவோர் ஒரே இனத்தவர் என்றுசிலர் அனுமானித்தனர். மாக்ஸ் முல்லரே அதை விமர்சித்தபோதும், சமூக அறிவியல் “இனம்” என்ற கருத்தையே கைவிட்ட பிறகும் அந்த நம்பிக்கை தொடர்ந்தது. உயர்சாதியினர் தங்களை ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்றனர்.

“பிரிட்டி ஷாரும் உயர்சாதி இந்தியர்களும் பிரிந்துபோன உறவினர்கள்” என்று கூறிக் கொண்ட வேடிக்கையும் அரங்கேறியது!இந்து மதத்தின் அடித்தளம் வேத நூல்களில் மட்டுமே என்று சொல்லப்பட்டது. ஆனால் சிந்துவெளி நாகரிகம், வேத நூல்கள் சித்தரிக்கும் மேய்ச்சல்சமூகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட, வளர்ச்சி யடைந்த நகர்ப்புற, எழுத்தறிவுப் பண்பாடுஎன்பதைத் தொல்லியல் வெளிப்படுத்தி யது. இந்தோ – ஆரிய மொழியில் வேறொருமொழியின் சுவடுகள் தென்படுவதாக அறிஞர்கள் கூறுவது, இரு மொழி பேசியோருக்கு இடையிலான பண்பாட்டு ஊடாட்டத்தைக் காட்டுகிறது. இந்த வாதம் ஆராயப்பட வேண்டும்; ஆனால் அது சந்திப்பதுமுழுமையான திட்டமிட்ட - மறுப்பைத் தான் என்பதை அறிவோம்.ஆரிய மொழி பேசியோர் துணைக் கண்டத்தில் படிப்படியாகப் பரவிய புலம் பெயர்ந்தோரா? அல்லது இந்துத்துவாசொல்வதைப் போலப் பூர்வகுடிகளா? மரபியல் சான்றுகள் இந்துத்துவாவின் பார்வையைக் கடுமையாகக் கேள்விக்குள்ளாக்கு கின்றன. இந்தச் சிக்கலைத் தீர்க்க உதவும் இறுதியான மரபியல்முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்.

1960-களின் திருப்புமுனை

தொடக்கத்தில் இந்திய வரலாற்றாசிரி யர்கள் காலனிய முன்அனுமானங்கள் பலவற்றைக் கேள்வி கேட்காமலேயே பின்பற்றினர். தேசியவாதம் “களங்கமற்ற நாகரிகத்தின் நீண்ட பொற்காலம்” என்ற கருத்தைத்துணைக்கு அழைத்தது. 1960-களிலிருந்து வந்த வரலாற்றாசிரியர்களின் தலைமுறை இதை மாற்றியது – இது சுயபுகழ்ச்சிஅல்ல, உண்மையில் நடந்த மாற்றம். கடந்த காலம் வெறுமனே சொல்லப்படவில்லை; விளக்கப்பட்டது. பிரிட்டிஷ்ஆட்சி இஸ்லாத்திடமிருந்து இந்து மதத்தைக் காப்பாற்றியது என்ற கோட்பாடும், இந்தியப் பண்பாடு என்பது உயர்சாதிபிராமணர்களின் பண்பாடேஎன்ற கோட்பாடும் கேள்விக்குள்ளாயின.நாம் கேட்க வேண்டிய கேள்விகள்: இந்த ஆதாரங்கள் யாருடைய கடந்த காலத்தைப்பேசுகின்றன? அவற்றை எழுதியவர்கள் யார்? அவர்கள் ஏன் கடந்த காலத்தைத் தம தாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள்? நாம் எதைக் காலனிய நீக்கம் செய்கிறோம் என்பதிலும் தெளிவு வேண்டும். ஜேம்ஸ் மில்லையும் மாக்ஸ் முல்லரையும்அகற்றிவிட்டு, காலனியக் கோட்பாடுகளையே அடிப்படையாகக் கொண்ட ஒருதலைப்பட்சமான பார்வையைவைக்கிறோமா? ஒவ்வொரு சமூகமும் தான் எப்படித் தோன்றியது என்பதை விளக்கும் கடந்த காலத்தைவிரும்புகிறது; அது சில சமயம் நிகழ்காலத்திலிருந்து பெறப்பட்டு நிகழ்காலத்தையே நியாயப்படுத்துகிறது.அதனால்தான் இந்த எச்சரிக்கை தேவை. அல்லது சிக்கலான ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்ளப் பல்வேறு விளக்கங்களுக்கு வழி திறக்கிறோமா?

பழைய சமூகத்துக்குப்புதிய கேள்விகள்

நான்காயிரம் ஆண்டுகளாக ராஜ்யங்கள்மட்டுமே இருந்தனவா, அல்லது “கணசங்கங் கள்” ராஜ்யங்களாகவும், சில ராஜ்யங்கள் பேரரசுகளாகவும் மாறினவா? குப்தர் காலத்துக்குமுன்னும் பின்னும் நில உறவுகள் மாறியதுஎப்படி? மௌரியப் பேரரசு (இந்திய) துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைக் கட்டுப் படுத்தியது எதனால்? தொலைதூர வணிகத் தின் தாக்கம் என்ன? பிரம்மாண்டமான கோவில்களையும் மசூதிகளையும் கட்ட மன்னர்களுக்கும் பக்தர்களுக்கும்செல்வம் எங்கிருந்து வந்தது? – இவையெல்லாம் பொது அறிவுக் கேள்விகள்; இவற்றைக் கேட்க எந்தக் கோட்பாடும்தேவையில்லை.வர்ணம், சாதி பற்றிய குறிப்புகள் தொடக்ககாலத்திலிருந்தே உள்ளன. ஆனால் சமூகத்தை மையமாகக் கொண்டு பேசிய அசோகரின் கல்வெட்டுகளில் அவை பற்றிய குறிப்பே இல்லை என்பது வியப்பு. அனைவரும் சமம் என்று போதிக்கும் கிறிஸ்தவமும் இஸ்லாமும், அவற்றுக்கு மதம் மாறிய மேட்டுக்குடியினர் சாதிப் பாகுபாட்டைத் தொடர்வதை ஏன் அனுமதித்தன என்பதும் விளக்கப்பட வேண்டிய கேள்வி.இந்தியாவில் ராஜ்யங்களும் காலனி களும் ஜனநாயக தேசமாக மாறியதே மிகப் பெரிய மாற்றம். ஆனால் தேசியவாதம் இந்து தேசியவாதம், முஸ்லிம் தேசியவாதம் என்று பிளவுபட்டது. இன்று மதச்சார்பற்ற தேசியவாதம் தன் இருப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. மதச்சார்பற்ற தேசியவாதிகள் வரலாற்றை வாசித்த விதம், இந்து அல்லது முஸ்லிம் தேசியவாதத்தை வலியுறுத்தியவர்களின்வாசிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஒரு தேசத்துக்குள் பல்வேறு குழுக்களைக் கொண்டுவந்த புதிய தேசியஅடையாளமே ஒரு வரலாற்றுச்செயல்முறைதான்.

இந்திய மதங்களின் பன்முகத்தன்மை

எல்லா மதங்களும் ஒற்றைக் கடவுள் கோட்பாடு கொண்டவை என்று அனுமானித்த காலனிய அறிஞர்கள், இந்து மதத்தை விநோதமான மதமாகப் பார்த்தனர். ஆனால்இந்திய மதங்கள் நம்பிக்கையிலும் நடைமுறையிலும் பன்முகத்தன்மை கொண்டவை.சில நெகிழ்வானவை, சில இறுக்கமானவை. ஏராளமான பிரிவுகள் அருகருகே இருந்து, ஒன்றோடொன்றுபரிமாற்றம் செய்து, புதிய பிரிவுகளை உருவாக்கின. ஒரே விஷ்ணு, ஒடிசாவில் ஜெகந்நாதராகவும் மகாராஷ்டி ரத்தில் விட்டலராகவும் வெவ்வேறு அடையாளங்களோடு வணங்கப்படுகிறார். ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தைப் போன்ற “சமாஜங்கள்” காலனிய காலத்தில்தான் தோன்றின.சிரமண மதங்களும், சார்வாகரின் பொருள்முதல்வாதமும், சில பக்தி ஆசிரியர்களும் பிராமணிய மதத்திலிருந்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தனர். எதிரெதிர் கருத்துகளை விவாதிப்பதே தீர்வுக்கான தத்துவ வழியாக அங்கீகரிக்கப்பட்டது – இது இயங்கியலுக்கு ஒத்த ஒரு நடைமுறை.இத்தனை பன்முகத்தன்மைக்கு மாறாக, இந்து மதத்துக்கு ஒரே ஒரு இழைதான், அது எளிய ஒற்றைக் கடவுள் மதம்என்று இன்று வாதிடப்படுகிறது. எந்த மதத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் என்றுதான் வியக்கத் தோன்றுகிறது! இதுநம்பிக்கை; வரலாறு அல்ல. இந்து ராஷ்டிரத்தை நிறுவ, மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்தும் முறை இது.மதத்தின் வரலாறு குறித்து நாம் எழுப்பும் கேள்விகள் மதத்துக்கு எதிரானவை அல்ல. மதம் எப்போதும்சமூகத்துக்குள் வேரூன்றியிருக்கிறது; அந்தச் சமூகத்தைப் புரிந்துகொள்ளாமல் மதத்தையும் முழுமையாகப்புரிந்துகொள்ள முடியாது என்பதையே அவை வலியுறுத்துகின்றன.

மறுப்பை எதிர்க்கும் வரலாறு

கடந்த காலத்தை ஆய்வு செய்ய இன்றியமையாத இந்தக் கேள்விகள் அனைத்தும்வரலாற்றியலில் பிறந்தவை. வரலாற்றியலுக்கு உரிய அறிவுசார் அந்தஸ்தை நாம் வழங்க வேண்டும். ஒற்றையான, மாற்ற முடியாத, விவாதத்துக்கே இடமில்லாத இந்துத்துவா வரலாற்று வாசிப்பால் அது நடக்காது. அந்த வாசிப்பில்வரலாற்றின் நோக்கம் கடந்த காலத்தை விளக்குவது அல்ல; சமகால அரசியலுக்கான கூற்றுகளைக் கட்டமைப்பது. காலனிய அனுபவத்தி லிருந்து உருவான புதிய தேசத்தின் உயிர்நாடிகளானமதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் அந்தக் கூற்றுகள் மறுக்கின்றன.ஆனால், எதிர்ப்பவர்கள் மீது வன்மம் நிறைந்த தாக்குதல்கள் நடந்தாலும், அந்த மறுப்பு ஏற்கெனவே சவாலுக்குஉள்ளாகி வருகிறது. இந்துத்துவா போன்ற குழுக்கள் கற்பனை செய்து பரப்புவதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட,இந்தியச் சமூகத்தின், பொருளாதாரத்தின் உண்மையான வரலாற்றுப் பரிணாமத்தைத் தொழில்முறை வரலாற்றாசிரியர்கள் ஆராய்ந்து வருகின்றனர். நம் வரலாறு குறித்து வரலாற்றியல் வெளிப்படுத்தப்போகும் புதிய பரிமாணங்களை மிகுந்த எதிர்பார்ப்போடு நோக்குகிறோம்.