கையகப்படுத்திய இடத்திற்கு பணம் வழங்காமல் சாலை பணி மேற்கொள்வதா?: விவசாயிகள் போராட்டம்
31 Mar 2026, 4:50 pm
<p><strong>கையகப்படுத்திய இடத்திற்கு பணம் வழங்காமல் சாலை பணி மேற்கொள்வதா?: விவசாயிகள் போராட்டம்</strong></p>
<p>மயிலாடுதுறை, மார்ச் 31- மயிலாடுதுறை மாவட்டத்தில், புதிய பேருந்து நிலையம் மணக்குடி கிராமத்தில் அமைக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. புறவழிச்சாலை பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புடைய ஒரு குழி இடத்திற்கு ரூ.2 ஆயிரம் என மதிப்பிட்டு சொற்ப தொகை வழங்கப்பட்டது. ஆதீனத்தின் பெயரிலான இடத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்பவர்களுக்கு பணம் வழங்காமல், ஆதீனத்திற்கு பணம் வழங்கி விவசாயிகள் ஏமாற்றப்பட்டதாகவும், பலருக்கு பணமே வழங்கப்படாமல் புறவழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தலைமையில் புறவழிச்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். வருவாய்துறை அதிகாரிகள் பேச்சவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும், ஏப்.1 ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அதுவரை பிரச்சனை உள்ள பகுதிகளில் பணிகள் நடைபெறாது என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில் உளுத்து குப்பையில் இருந்து, மணக்குடி பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை பணிகளில் பணம் வழங்காமல் கையகப்படுத்தப்பட்ட ராஜலட்சுமி என்பவரின் 100 குழி பட்டா இடம் மற்றும் ரமேஷ், முத்து உள்ளிட்ட விவசாயிகளின் இடங்களில் சாலை பணிகளை மேற்கொள்வதற்காக லாரிகளிலிருந்து மண் கொட்டப்பட்டது. இதனையறிந்த விவசாயிகள், தமிழ்நாடு அடிமனை குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலப் பொருளாளர் துரைராஜ், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். விஜய் தலைமையில் மாவட்டத் தலைவர் பக்கிரிசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. ஸ்டாலின் உள்ளிட்டோர், விவசாயிகள் மண் கொட்டும் பணிகளைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று கூறிவிட்டு சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை தொடர்வது கண்டனத்திற்குரியது என்றும், உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கினால் தான், சாலைப் பணியை தொடர முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.</p>
