ரெட்டியார் பேட்டைக்கு புதிய பேருந்து இயக்க கோரி சாலை மறியல்!
22 Dec 2025, 4:47 am
<p>கடலூர், டிச.22- கடலூர் அருகே உள்ள ரெட்டியார் பேட்டை கிராமத்திற்கு புதிய அரசு பேருந்து விடக்கோரி கடலூர் பணிமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டி யார்பேட்டை கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லுபவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரெட்டியார்பேட்டைக்கு வரக்கூடிய அரசு பேருந்து அடிக்கடி பழுதடைந்து வழியில் நின்றுவிடுகிறது. மழை பெய்தால் பயணம் செய்பவர்கள் அனைவரும் பேருந்துக்குள் குடை பிடித்துச் செல்ல வேண்டிய பரிதாபகரமான நிலை உள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். பழைய பேருந்து மாற்றி பொதுமக்கள் புதிய பேருந்து கேட்டு பலமுறை போக்கு வரத்து கழகத்திலும் மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். டிசம்பர் 10ஆம் தேதி ரெட்டி யார் பேட்டையில் பேருந்தை சிறை பிடித்து போராட்டம் செய்தனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் இரண்டு நாட்களுக்குள் புதிய பேருந்து விடப்படும் என்று உறுதி அளித்தது தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் ஞாயிறன்று கம்பளி மேடு அருகே பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் அனைவரும் 5 கிலோமீட்டர் தூரம் நடந்தே வீட்டுக்கு சென்றுள்ளனர். தங்கள் கிராமத்திற்கு கிராமத்திற்கு அரசு பேருந்து விட வலியுறுத்தி ரெட்டியார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திங்களன்று கடலூர் அரசு போக்குவரத்து படிமனையை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பினர். அப்பொழுது பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். வட்டாட்சியர் மகேஷ், போக்குவரத்து கழக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒரு வாரத்திற்குள் புதிய பேருந்து விடப்படும் என்று தெரிவித்த நிலையில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க முடியாது என்று கூறினர். இதனால் போக்கு வரத்து கழக பணிமனை முன்பு பொது மக்கள் கடலூர்- சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்திற்கு ரெட்டியார்பேட்டை கிராம தலைவர்கள் வாசு, அஞ்சான் ஆகி யோர் தலைமை தாங்கினர். சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.ராஜேஷ் கண்ணன், கிராம நிர்வாகிகள் வைத்தியலிங்கம், கந்தன், பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
