அரிசி விலை தொடர்ந்து உயர்வு - உணவகங்களில் விலை உயர வாய்ப்பு
17 Aug 2026, 11:59 pm

அரிசி விலை தொடர்ந்து உயர்வு - உணவகங்களில் விலை உயர வாய்ப்பு

நாமக்கல், ஆக.17-அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்டினால் ஓட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் கெளமாரி சுதாகர் தெரிவித்தார்.

நாமக்கல் மாநகர ஹோட்டல் வியாபாரிகள் சங்கத்தின் 4 ஆவது பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாமக்கல் டேபிள் ட்ரீ பேமிலி ரெஸ்டாரண்டில் ஞாயிறன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் கெளமாரி சுதாகர் கலந்து கொண்டு, செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக சில ஓட்டல்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கடந்த 2 மாதங்களாக எரிவாயு சிலிண்டர் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மூடப்பட்ட உணவகங்கள் மீண்டும் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்ட காலகட்டத்தில் பெரும்பாலான உணவக உரிமையாளர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்தனர். டீசல் அடுப்பு, விறகு அடுப்பு உள்ளிட்ட மாற்று வழிகளில் சமையல் மேற்கொண்டனர்.

இதனால் எதிர்காலத்தில் மீண்டும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் உணவகங்களின் தொழிலில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.அரிசி உள்ளிட்ட சமையலுக்கு தேவையான அனைத்து மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இருந்தபோதிலும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல்சுமைஏற்படக்கூடாது என்பதற்காக உணவுப் பொருட்களின் விலையை உடனடியாக உயர்த்தாமல் உரிமையாளர்கள் சமாளித்து வருகின்றனர்.அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து, ஒரு கிலோ ரூ.100-ஐ தாண்டும் நிலை ஏற்பட்டால், உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையை சிறிதளவுஉயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில் குறைந்த அளவில் மட்டுமே விலை உயர்வு செய்யப்படும்.

உணவகங்களின் தொழிலை பொறுத்தவரை சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வு முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம்.உணவகங்களின் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு குறைந்தகட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுவது போன்று உணவகங்களுக்கு குறைந்த மின் கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும். மேலும், உணவகத் தொழிலை தொழில்துறையில் சேர்த்து, தொழில்துறையினருக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் அரசின் திட்டங்கள் உணவகத் தொழிலுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக முதலமைச்சர் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.