பறிமுதல் செய்த வண்டிகளைத் திரும்பத் தருக! சாலையோர வியாபாரிகள் வலியுறுத்தல்
18 Feb 2026, 3:04 pm
<p>பறிமுதல் செய்த வண்டிகளைத் திரும்பத் தருக! சாலையோர வியாபாரிகள் வலியுறுத்தல்</p>
<p>சென்னை, பிப். 18- பறிமுதல் செய்த வண்டிகளை திரும்பத் தர வேண்டும் என சாலையோர வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சென்னை மாவட்ட சாலையோர விற்பனையாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.வெங்கட் தலைமையில் மண்டலம் 4 அலுவலர் ராஜ்குமாரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் சங்கத்தின் சார்பாகவும், விற்பனைக்குழுவின் சார்பாகவும் கடந்த மாதம் 9ஆம் தேதி மண்டலம் 4இன் அலுவலக அதிகாரியிடம் ஏற்கெனவே விற்பனை மண்டலமாக அமைக்கப்பட்ட பகுதிகளான எம்.கே.பி நகர் சென்ட்ரல் அவென்யூ, முல்லை நகர், புதுவண்ணை மார்க்கெட் ஆகிய பகுதிகளை முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தோம். மேலும், கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற நகர விற்பனைக்குழு கூட்டத்தின்படி, தங்களுக்கு புதிதாக சில இடங்களை மட்டும் விற்பனை மண்டலமாக மாற்றுவது குறித்த கடிதம் வழங்கப்பட்டது. ஆனால் அக்கூட்டம் சில காரணங்களால் நடத்தப்படவில்லை. 37ஆவது வட்டத்தில் அமைந்துள்ள எம்.கே.பி நகர் சென்ட்ரல் அவென்யூ பகுதியை வட்டார துணை ஆணையர் நேரில் வந்து ஆய்வு செய்து 6X4 என்ற அளவில் 38 இடங்களை மட்டுமே அளந்து கொடுத்துவிட்டு, மீதி 60 இடங்களை அளந்து தருகிறோம் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், தற்போது அந்தப் பகுதியின் அதிகாரிகள் வியாபாரிகளைத் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டும், வியாபாரம் செய்யக்கூடாது என்றும் கூறி வருகின்றனர். அவர்களின் வியாபார வண்டிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வியாபார வண்டிகளை உடனடியாகத் திருப்பி வழங்க வேண்டும். டிஎச் 100 அடி சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பில்லாமல் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்காமல் அவர்களை அப்புறப்படுத்தக் கூடாது. 48ஆவது வட்டத்தில் அமைந்துள்ள வெங்கட கிருஷ்ணா தெருவில் வணிக வளாக பணியை விரைவுபடுத்த வேண்டும். அப்பகுதியில் பெண்கள் அதிகமாக வியாபாரம் செய்வதால் அவர்களுக்கு தற்காலிகக் கழிவறை வசதி அமைத்துத் தர வேண்டும். விரைவில் இப்பணிகளை தொடங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர் உரிய முறையில் ஆவண செய்யப்படும் என்றும், இதுகுறித்து 48, 37ஆவது வட்ட உதவி செயற் பொறியாளர்களிடம் தொலைபேசி பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.இதில் நகர விற்பனை குழு உறுப்பினர்கள் ஜி.மோனிஷா, எஸ்.கோபாலகிருஷ்ணன், எம்.மீரான் பைலின் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
