ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் காலமானார்!
6 hours before

சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் (72), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கடந்த 1983ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர், 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிரந்தர நீதிபதியானார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய காலத்தில், சக நீதிபதிகள் சாதியப் பாகுபாடு காட்டுவதாகவும், தன்னைத் துன்புறுத்துவதாகவும் பலமுறை குற்றம்சாட்டினார்.

2014ஆம் ஆண்டு, உயர்நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீதிமன்ற விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

இதற்கிடையே, 2016ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அந்தப் பணியிட மாற்ற உத்தரவுக்குத் தடை விதித்து அவரே உத்தரவு பிறப்பித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பணியில் இருந்த மற்றும் ஓய்வுபெற்ற பல நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரதமருக்குக் கடிதம் எழுதினார். இதையடுத்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடங்கியது. இந்த விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும் சிறைத் தண்டனை, அபராதம் விதிப்பது உள்ளிட்ட உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2017ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி கர்ணன் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தது. பதவியில் இருந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

சிறைத் தண்டனை உத்தரவுக்குப் பிறகு தலைமறைவான அவர், 2017ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி நீதிபதி பணியிலிருந்து ஓய்வுபெற்றார். அதே மாதம் கோவையில் கைது செய்யப்பட்டார். ஆறு மாத சிறைத் தண்டனையை அனுபவித்த அவர், 2017 டிசம்பரில் விடுதலை செய்யப்பட்டார்.

2018ஆம் ஆண்டு மே மாதம் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கிய அவர், 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், நீதிபதிகள் மற்றும் பெண் நீதித்துறை அதிகாரிகள் குறித்து அவதூறான கருத்துகள் இடம்பெற்ற காணொளிகள் தொடர்பாக சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 2021 பிப்ரவரியில் அவரது பிணை மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. பின்னர், 2021 மார்ச் மாதம் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.

இதற்கிடையே, அரசியலமைப்பு அதிகாரிகள் மற்றும் நீதித்துறைக்கு எதிராக அவர் பொதுவெளியில் கருத்துத் தெரிவிப்பதைத் தடுக்கக் கோரி 2011ஆம் ஆண்டு தொடரப்பட்ட மனுவை, 2024 டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.