அரங்க வாடகை உயர்வைத் திரும்பப் பெறுக!
12 Dec 2025, 3:12 pm
<p>கடலூர், டிச.12- கடலூர் மாநகர அனைத்துக் கட்சி கள், குடியிருப்போர் சங்கம் மற்றும் பொது நல அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம், திமுக தேர்தல் பணிக் குழுப் பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இள. புகழேந்தி தலைமையில் சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செய லாளர் கோ. மாதவன் தீர்மானங்களை முன்மொழிந்தார். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திலகர், விசிக மாநில நிர்வாகி துணை மேயர் தாமரைச்செல்வன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் என்எல்சி நிதி உதவியுடன் புதுப்பிக்கப் பட்ட கடலூரின் புகழ்பெற்ற டவுன் ஹால் (நகர அரங்கம்) வாடகைக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் கூடம் பயன்படுத்தினால் ரூ.90 ஆயிரம், இல்லையென்றால் ரூ.60 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டண உயர்வை மாவட்ட ஆட்சியர் திரும்பப் பெற்று, அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபு கலையரங்கத்தை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி பெறுவதில் நிலவும் அலைக்கழிப்பைப் போக்கி, போலீசாரின் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும். திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ.8 கோடி செலவில் நடக்கும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 30 அன்று ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும், கடலூர் ரயில்வே கோரிக்கை களை நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்பிக்கு இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.</p>
