தொழிலாளர் நலச் சட்டங்களை மீறும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவின் நிர்வாகத்திற்கு கோரிக்கை
27 Feb 2026, 5:32 pm
<p><strong>தொழிலாளர் நலச் சட்டங்களை மீறும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவின் நிர்வாகத்திற்கு கோரிக்கை</strong></p>
<p>சென்னை, பிப். 27- சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குப் பால் விநியோகம் செய்யும் ஆவின் தனி யார் ஒப்பந்த லாரி ஓட்டுநர்கள், தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (பிப். 26) நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தை முற்றுகையிட்டனர். ஒப்பந்த லாரி ஓட்டுநர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக, லாரி உரிமை யாளர்கள் சங்கத்திடம் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டிருந்தது. மூன்று மாதங்கள் கடந்தும் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாததைக் கண்டித்து, சங்கத் தலைவர் ஆர்.ஜெயராமன், பொதுச் செய லாளர் பாஸ்கர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆவின் பொது மேலாளரைச் சந்திக்கத் திரண்டனர். தொடக்கத்தில் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், “சந்திக்க அனுமதிக்காவிட்டால் அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்துவோம்” எனத் தொழிலாளர்கள் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மார்க்கெட்டிங் பொது மேலாளர் கோவிந்தராஜலுவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. அப்போது தொழிலாளர்கள், 3 ஆண்டு களுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய ஊதிய உயர்வு குறித்து உடனடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பிஎப் மற்றும் இஎஸ்ஐ தொகையை உரிய அலுவ லகங்களில் செலுத்த வேண்டும். இஎஸ்ஐ தொகை செலுத்தப்படாததால் தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுவதை சரி செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற அல்லது பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய பி.எப், பென்சன் மற்றும் கிராஜுவிட்டி ஆகிய வற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் (லாரி உரிமை யாளர்கள்) தொழிலாளர் நலச் சட்டங்களைச் சரியாகப் பின்பற்றாத நிலையில், முதன்மை வேலை வழங்குநர் என்ற முறையில் ஆவின் நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், லாரி ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டை, சம்பள ரசீது மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த பொது மேலாளர் கோவிந்த ராஜலு, லாரி உரிமையாளர்களை நேரில் அழைத்து இது குறித்துப் பேசுவதாகவும், விரைவில் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் மாதவரம் பால் பண்ணை நிர்வாகிகள் ஆர்.தாமோதரன் வி.கன்னிப்பிள்ளை, எஸ்.முத்துராமன் அம்பத்தூர் பால்பண்ணை நிர்வாகிகள் எம்.சுரேஷ், எஸ்.குமார், சோளிங்கநல்லூர் பால்பண்ணை நிர்வாகிகள் என்.ரவி, டி.எம்.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
