தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இன்று 95 ஆவது பிறந்தநாள் தோழர் ரால் காஸ்ட்ரோ ஏகாதிபத்திய எதிர்ப்பின் வாழும் வரலாறு - வீ.பா.கணேசன்

2 Jun 2026, 9:19 pm
இன்று 95 ஆவது பிறந்தநாள் தோழர் ரால் காஸ்ட்ரோ ஏகாதிபத்திய எதிர்ப்பின் வாழும் வரலாறு - வீ.பா.கணேசன்

இன்று 95 ஆவது பிறந்தநாள் தோழர் ரால் காஸ்ட்ரோ ஏகாதிபத்திய எதிர்ப்பின் வாழும் வரலாறு - வீ.பா.கணேசன்

சமீபகால வரலாற்றை ஆய்வு செய்வோர் ஒரு விஷயத்தைத் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து கவனிக்க முடிந்துள்ளது. ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வித சர்வதேச நெறிமுறைக்கும் அடங்காமல், தனது மேலாதிக்க விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இத்தகைய முயற்சிகளில் முதலாவதாக, 2026 ஜனவரி 3 அன்று நள்ளிரவில் அமெரிக்க ராணுவத்தின் ஒரு படைப்பிரிவினர் வெனிசுலா நாட்டின் தலைநகர் காரகஸில் வந்திறங்கி, அந்நாட்டின் ஜனாதிபதி மதுரோவையும் அவரது இணையரும் மகளிர் இயக்கத் தலைவருமான சிலியா புளோரெஸையும் கைது செய்து அமெரிக்காவிற்கு கடத்திச் சென்றனர். ஜனாதிபதி மதுரோவின் பாதுகாப்புப் படையில் இருந்த 35 கியூப வீரர்கள் இந்தத் தாக்குதலில் தங்கள் இன்னுயிரை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் நியூயார்க் நகரில் சிறைவைக்கப்பட்டனர். ஜனவரி 5-ஆம் நாளன்று நியூயார்க் பெரு நகர நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டபோது, தான் குற்றவாளி அல்ல என்று மதுரோ அழுத்தமாகத் தெரிவித்ததோடு, ஒரு நாட்டின் ஜனாதிபதியான தன்னைப் பன்னாட்டு விதிமுறைகளை மீறிக் கடத்தி வந்திருப்பதாக அமெரிக்க அரசின் மீது குற்றம் சாட்டினார். அமெரிக்க நிர்வாகம் கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவிற்குள் வந்திறங்கும் போதைப்பொருள் கடத்தலில் மதுரோவிற்குப் பங்குண்டு என்று குற்றம் சாட்டி வருவதோடு, இதைத் தடுக்கும் முயற்சி என்ற பெயரில் வெனிசுலா கடற்பகுதியில் தனது கடற்படையை உலவ விட்டு வந்தது.

அடுத்ததாக, அணுஆயுதங்களை உருவாக்கும் திறனைக் கைவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஈரானுடன் ஒருபுறத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. இதில் அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர் கோமேனி உள்ளிட்ட பல தலைவர்கள் உயிரி ழந்தனர். அதுமட்டுமின்றி, நாட்டின் ஒரு மூலையில் இருந்த பகுதியில் ஒரு பள்ளியின் மீது ஏவுகணைத் தாக்குதல் தொடுத்து அங்கிருந்த சுமார் 200 குழந்தைகளையும் ஆசிரியர்களையும் கொன்றழித்தது. சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக ஈரானுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் புரிந்த போதிலும் வெற்றி கிடைக்காமல் அதனுடன் பேச்சுவார்த்தையில் இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்தத் தோல்வியை உலக மக்களின் கவனத்திலிருந்து மறைக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதியும் அவரது வெளியுறவுச் செயலாளரும் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும் கியூபப் புரட்சியின் நாயகர்களில் முன்னோடியுமான தோழர் ரால் காஸ்ட்ரோவின் மீது தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்வை அவர்கள் இதற்கு காரணமாக பயன்படுத்த முனைகின்றனர்.

கியூப எதிர்ப்புப் பிரச்சாரம்

கியூபாவின் எல்லைக்கு மிக அருகாமையிலுள்ள அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து செயல்படும் கியூப குடியேறிகள் சிலர் மேற்கொண்டு வரும் கியூப எதிர்ப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 1996-ஆம் ஆண்டில் கியூபாவில் பிரசுரங்களை எறிவதற்கென கியூபாவின் வான்எல்லையில் அத்துமீறிப் பறந்த இரு விமானங்களைக் கியூப ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இத்தகைய வான்வழி அத்துமீறல்கள் குறித்து அமெரிக்க அரசிடம் பலமுறை புகார் செய்தபோதும் எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்காத நிலையில்தான் இந்த விமானங்களைக் கியூப அரசு சுட்டு வீழ்த்தியது. அத்தருணத்தில் கியூப பாதுகாப்பு அமைச்சராக ரால் காஸ்ட்ரோ இருந்தபோதிலும் இதற்கான பொறுப்பைத் தான் ஏற்பதாகத் தோழர் பிடல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

இப்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு, “அமெரிக்கக் குடிமக்கள்” நான்கு பேரை அன்றைக்கு கொன்றதாக ரால் காஸ்ட்ரோ மீது குற்றச்சாட்டு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு, மேல்நடவடிக்கை எடுக்கும் முகமாகவே அமெரிக்க ஏகாதிபத்தியம் அவரைக் குறி வைத்து இறங்கியுள்ளது. இதை எதிர்த்துக் கியூப மக்கள் ரால் காஸ்ட்ரோவிற்கு ஆதரவாக வீதிகளில் அணிதிரண்டு வருகின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த இரட்டை நிலைப்பாடும் அதன் அத்து மீறலும் நம்மைத் திகைக்க வைக்கும் ஒன்றே ஆகும். 1976-ஆம் ஆண்டில் கியூப விமான சேவை எண் 455 என்ற விமானத்தின் மீது அமெரிக்கா குண்டுவீசி 73 பேரைக் கொன்றது. உயிரிழந்த இந்த விமானப் பயணிகளில் கியூபாவின் வாள் சண்டை விளையாட்டு வீரர் களும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக் கது. இந்தத் தாக்குதலில் பங்கேற்ற ஆர்லண்டோ போஷ், லூயிஸ் பொசாடா காரிலஸ் ஆகி யோர் உள்ளிட்ட பயங்கரவாதிகள் மியாமி நகரில் அமெரிக்க அரசின் பாதுகாப்புடன் சுக மாக வாழ்ந்து வந்தனர் என்பது மற்றொரு உண்மை

யாகும். அதைப்பற்றியெல்லாம் வாய் திறக்காமல், கியூபாவின் வான்எல்லையில் அத்துமீறிப் பறந்த இரு விமானங்களைச் சுட்டுவீழ்த்திய நிகழ்வை அமெரிக்கா இப்போது கையில் எடுத்துள்ளது என்பதை யும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

யார் இந்த ரால் காஸ்ட்ரோ?

1959-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் கொடுங்கோலன் பாடிஸ்டாவின் பிடியிலி ருந்து கியூபாவை விடுவித்த கியூபப் புரட்சி யின் நாயகரான பிடல் காஸ்ட்ரோவின் இளைய சகோதரர்தான் ரால் காஸ்ட்ரோ. 1931 ஜூன் 3 அன்று பிறந்த இவர், 1953-ஆம் ஆண்டில் ஜூலை 26 புரட்சிகர இளைஞர் இயக்கத்தை பிடல் தொடங்கியபோது, கியூப கம்யூனிஸ்ட் கட்சியில் அப்போது இருந்த ரால் காஸ்ட்ரோவும் தமது 22 ஆவது வயதி லேயே அந்த இயக்கத்தில் இணைந்தார். இந்த இயக்கம் மன்கடா ராணுவப் படைத்தளத்தின் மீது தாக்குதல் தொடுத்தபோது அதில் ஒரு பிரிவிற்குப் பொறுப்பாளராக இருந்தவர் ரால் காஸ்ட்ரோ. பின்பு அந்த முயற்சி தோல்வி யுற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காஸ்ட்ரோ சகோதரர்கள் மக்களின் எழுச்சி யின் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.

கியூபாவை கொடுங்கோலன் பாடிஸ்டா விடமிருந்து விடுவிக்க மீண்டும் முயற்சி மேற்கொண்ட ஜூலை 26 இயக்கத்தில் இருந்த காஸ்ட்ரோ சகோதரர்கள் மெக்சிகோவிற்குச் சென்றபோது, அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த புரட்சியாளரான சே குவேராவை பிடலுக்கு அறிமுகம் செய்தவர் ஏற்கெனவே மார்க்சிய சிந்தனைப் பிடிப்பில் இருந்த ரால் காஸ்ட்ரோதான். 1959 புரட்சிக்குப் பிறகு பாடிஸ்டாவின் ஆதிக்கத்தில் நீண்டநாள் இருந்த கியூப ராணுவத்தைத் தூய்மைப் படுத்தி, புரட்சிகர ராணுவப் படைப்பிரிவை உருவாக்கியவர் ரால் காஸ்ட்ரோ. பின்னர் கியூபாவின் பாதுகாப்பு அமைச்சராகவும், ஜனாதிபதியாகவும், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலாளராகவும் செயல்பட்டவர்.

வில்மா எஸ்பின்

இந்தப் புரட்சி இயக்கத்தில் அவரோடு இணைந்து செயல்பட்ட வில்மா எஸ்பினை ரால் காஸ்ட்ரோ 1959 ஜனவரி 26 அன்று திருமணம் செய்து கொண்டார். சாண்டி யாகோ பகுதியில் வசதிமிக்க குடும்பம் ஒன்றில் பிறந்த வில்மாவின் மூதாதை யர்தான் காரல் மார்க்ஸின் மருமகன்களில் ஒரு வரான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பால் லபார்க் ஆவார். கியூபாவில் முதன்முதலில் வேதியியல் சார்ந்த பொறியியல் பட்டத்தைப் பெற்றவர் வில்மா. அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்.ஐ.டி. (MIT) பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். புரட்சியின்போது நகர்ப்புற எழுச்சிக் கான நடவடிக்கைகளை மேற்கொண்ட தோடு, சியர்ரா மாஸ்த்ரா மலைப்பகுதிக ளிலிருந்து கொரில்லா தாக்குதல்களை மேற் கொண்ட புரட்சிப் படைகளுக்கு ஆயுதங்க ளைக் கொண்டு சேர்க்கும் பணியை மேற் கொண்டவர். புரட்சியின் வெற்றிக்குப் பின் அரசு நிர்வாகத்தில் உணவுத் தொழில் துறையின் மேம்பாட்டு இயக்குநராகப் பணி யாற்றினார். குழந்தைகள் பராமரிப்பு அமைப் பின் தலைவராக, குழந்தைகள், இளைஞர்க ளுக்கான கியூப நாடாளுமன்ற ஆணையத் தின் தலைவராக, பாலியல் கல்வி தொ டர்பான தேசியக் குழுவின் தலைவராகச் செயல்பட்டவர். புரட்சிக்குப் பின் கியூபப் பெண்களை அணிதிரட்டி அமைப்பாக்கும் பணியையும் வில்மா ஏற்றார். 1960 ஆகஸ்ட் 23-இல் கியூ பாவின் அனைத்து புரட்சிகரப் பெண்கள் குழுக்களையும் ஒன்றிணைத்த “கியூப பெண்கள் கூட்டமைப்பு” நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக வில்மா செயல் பட்டார். 2007-ஆம் ஆண்டில் வில்மா புற்று நோயால் மறைந்தார். ரால்-வில்மா தம்பதி யருக்கு நான்கு குழந்தைகள். மகள் மரி யெலா காஸ்ட்ரோ தற்போது கியூபாவின் பாலி யல் கல்விக்கான தேசிய மையத்தின் தலைவ ராக உள்ளார். மகன் அலெஜாண்ட்ரோ காஸ்ட்ரோ எஸ்பின் உள்துறை அமைச்ச கத்தில் படைத்தலைவராக உள்ளார்.

தற்போது 95 வயதான ரால் காஸ்ட்ரோ அமெரிக்கா கடந்த 67 ஆண்டுகளாகப் பொரு ளாதாரத் தடைகளைக் கியூபாவின் மீது விதித்து வந்தபோதிலும், ஒரு முன்னணி தலை வராக அந்நாட்டுடன் வலுவான உறவுகளை மீட்டெடுக்க அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் இணைந்து செயல் ட்டவர்.

வரலாறு விடுதலை செய்யும்

சுமார் ஒரு கோடி மக்களை மட்டுமே கொண்ட கியூபா ஒரு சின்னஞ்சிறிய தீவு. அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி யின் விளைவாக ஏற்பட்டு வரும் பற்றாக்குறை களின் காரணமாக, 2021 முதல் கணிசமான அளவிலான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. கியூபாவிடம் அணுஆயுதம் ஏது மில்லை. அதன் ராணுவ பலமும் கூட அமெ ரிக்காவின் மிகப்பெரும் வலிமையை எதிர் கொள்ளும் வகையிலானது அல்ல என்ற வகையில் அது அமெரிக்காவிற்கு எவ்வகை யிலும் அச்சுறுத்தல் தரும் நாடல்ல. இத்த கையதொரு பின்னணியில், கியூபாவின் மீது அமெரிக்கா தனது மூர்க்கத்தனமான பார்வையைச் செலுத்தியுள்ளதை அமெரிக் காவின் அரசியல் மற்றும் புவிசார் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த உத்தி என்ற அடிப்ப டையிலேயே புரிந்து கொள்ள வேண்டும்.

கடுமையான பொருளாதார, எரிசக்தி நெருக்கடிகளுக்கு இடையிலும் கியூப மக்கள் தங்கள் தன்மானத்தை இழந்து அமெ ரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடிபணிய மாட்டோம் என்று உறுதியோடு நிற்பதையே ரால் காஸ்ட்ரோவிற்கு ஆதரவான மக்கள் பேர ணிகள் எடுத்துக்காட்டுகின்றன. ஏகாதி பத்தியங்கள் எவ்வளவு வலிமை படைத் தவையாக இருந்தபோதிலும் மக்கள் உறுதி யோடு எதிர்த்து நிற்கும்போது அவை நிலை குலைந்து போவதைத் தவிர வேறு வழி யில்லை என்பதையே கடந்தகால வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. நிச்சயமாக, வரலாறு கியூபாவை விடுதலை செய்யும் என்பதில் ஐயமில்லை.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.